தமிழோவியம்
கோடம்பாக்கம் : இசையமைப்பாளர் பரத்வாஜுடன் ஒரு பேட்டி
- என்.டி. ராஜன்

ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு தனித் தன்மையான இசை அமைக்கும் திறன் உண்டு. உங்களுடைய இசையமைக்கும் வித்தத்தைப் பற்றி கொஞ்சம் விவரியுங்களேன்.

எனக்கென்று  தனிப்பட்ட ஒரு இசையமைக்கும் விதத்தை வைத்திருக்கிறேன். அது கட்டாயம் ஒவ்வொரு படத்திற்கும் மாறுபடும். உதாரணமாக என்னுடைய ஆட்டோகிராப் பட இசை வசூல் ராஜா எம்.பி.பிஸ் படத்திலிருந்து மாறுபட்டது. ஆட்டோகிராப் பட பாடல்களான ஒவ்வொரு பூக்களுமே.. மற்றும் மனசுக்குள்ளே.. பாடலைக் கேட்பவர்கள் அனைவரும் அப்பாடல்களைக் கேட்கும்போதே தங்களுக்கு ஒருவித சந்தோஷம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். அப்படம் 150 நாள் விழா கொண்டாடியதைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.


ஜெமினி பிலிம்ஸின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்திற்கு இசையமைப்பதைப் பற்றி கொஞ்சம் சொல்லமுடியுமா?

வசூல்ராஜாஎம்.பி.பி.எஸ் படத்திற்கு நான் இசையமைப்பதை ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன். கமல் நடிக்கும் வசூல்ராஜாஎம்.பி.பி.எஸ் படத்திற்கு இசையமைக்குமாறு முதலில் பட இயக்குனர் சரண் என்னை அழைத்தார். இப்படத்தில் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. அவை ஒவ்வொன்றுமே மற்றதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன என்று ஏராளமானவர்கள் என்னிடம் தெரிவித்து வருகிறார்கள்.


இப்படத்திற்கான பாடல்களை உருவாக்கும் போது உங்களுக்கு போதிய சுதந்திரம் அளிக்கப்பட்டதா?

சரண், கமல்ஹாசன் மற்றும் நான் - நாங்கள் மூவரும் பாடல் இசையமைக்கும்போது இணைந்தே இருப்போம். கமல் பல இடங்களில் இசை நன்றாக வருகிறது என்று என்னைப் பாராட்டினார். இது சரணுடன் நான் இணைந்து பணிபுரியும் ஆறாவது படம். டியூனில் ஏதாவது மாறுதல் வேண்டுமென்றால் எனக்குப் புரிகிற வகையில் எளிமையாக கமல் விளக்குவார். நானும் அவருடைய ரசனைக்கு ஏற்ற விதமாக இசையைச் சற்று மாற்றுவேன்.


வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்திற்காக தங்களது இசையமைப்பை எவ்வாறு மதிப்பீடு செய்வீர்கள்?

படத்தின் ஆடியோ கேஸட் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்குப் பிறகு பலரும் படத்தில் எனது இசையைப் பாராட்டுவதையே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய சன்மானமாகக் கருதுகிறேன். கமல் ஒருநாள் என்னிடம், " உங்களது இசையில் உருவான பல பாடல்களைக் கேட்டு நான் ரசித்திருக்கிறேன். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் இசை புதுமையாகவும் அருமையாகவும் உள்ளது. இப்படத்தின் இசை நிச்சயமாக மெகா ஹிட் ஆகும்." என்று கூறினார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors