தமிழோவியம்
தராசு : என்ன செய்கிறது சி.பி.ஐ?
- மீனா

 

Sibu Sorenஉதவியாளர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரன் உள்ளிட்ட ஐந்து பேரை டில்லி ஐகோர்ட் நேற்று விடுதலை செய்தது. மேலும் இந்த கொலை வழக்கில் சிபு சோரனுக்கு எதிரான ஆதாரங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்யவில்லை என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு மட்டுமல்லாது சமீபகாலமாக சி.பி.ஐ எடுத்து நடத்தும் பல வழக்குகளிலும் தீர்ப்புகள் இப்படித்தான் வந்துள்ளன.

மிகப்பரபரப்பாக பேசப்பட்ட போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட குட் ரோச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. யால் என்ன முயன்றும் அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியாமல் போனது. அதுவே ஒரு தோல்வி என்றால், அவர் சம்பந்தப்பட்ட வழக்குத் தொகையை சி.பி.ஐ. செலுத்த வேண்டும் என்ற அர்ஜென்டினா நீதிமன்றத் தீர்ப்பு மிகப்பெரிய அடி.

ஏற்கனவே பிரிட்டனில் அவர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரத்தில் பணத்தை எடுக்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட மாட்டாது என இந்திய அரசு சார்பில் வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள் அங்கு அவர் கணக்கிலிருந்த மொத்தப் பணமும் எடுக்கப்பட்டு விட்டது. இனி குட்ரோசியை பிடிக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்ட பிறகும் அர்ஜெண்டிணா நாட்டின் மேல் கோர்ட்டுகளில் சி.பி.ஐ. குறைந்த பட்சம் ஒரு மனு கூட தாக்கல் செய்யாதது ஏன் என்ற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்க இயலாது.

இப்படி மிகப்பரபரப்பாக பேசப்பட்ட இந்த இரண்டு வழக்குகளிலும் சி.பி.ஐ சரியான ஆதாரங்களை சமர்பிக்காததற்கு - சி.பி.ஐ யின் கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளதற்கு நிச்சயம் யாரோ காரணமாக இருக்கவேண்டும். சுயலாபம் கருதி மத்திய அரசே சி.பி.ஐ யின் செயல்பாடுக்ளை முடக்குகிறது என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாடில் தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை தவறு இருக்குமாயின் அதை வெளிப்படையாக கூறவேண்டியது மத்திய அரசின் கடமை.

நாட்டில் எந்த முக்கிய வழக்கு வந்தாலும் அதற்கு சி.பி.ஐ. விசாரணை கோருகிற நேரத்தில் மக்கள் தங்கள் மீது வைத்துள்ள  நம்பகத் தன்மையை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டியது சி.பி.ஐ. யின் கடமை. காவல் துறை - நீதித்துறை - ராணுவம் - சி.பி.ஐ போன்றவைகள் அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி என்று சுதந்திரமாக செயல்படுகிறதோ அன்று தான் நம் நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors