தமிழோவியம்
திரைவிமர்சனம் : வீராப்பு
- மீனா

 

குழந்தைகளைக் கண்டித்து வளர்கலாம் - ஆனால் அந்தக் கண்டிப்பு ஒரு எல்லைக்குட்பட்டு இருக்க வேண்டும்.. கண்டிப்பு எல்லை மீறினால் குழந்தைகளின் மனதில் அது எவ்விதமான எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்பதை விளக்கும் படமே வீராப்பு.

Gopika, Sundar Cபள்ளிக்கூட ஆசிரியரான பிரகாஷ்ராஜ் கண்டிப்பிர்கு பெயர் போனவர். நல்லாசிரியர் விருது பெற்றவர் என்றாலும், மாணவர்களை சரியாப் புரிந்து கொள்ளாதவர். தன் வகுப்பில் படிக்கும் தன் மகன் தான் அங்கேயுள்ள மற்ற பிள்ளைகள் செய்யும் சேட்டைகளுக்குப் பொறுப்பாளி என்று தவறாக நினைத்து பெற்ற மகனையே வெறுக்கும் அப்பா. செய்யாத தவறுக்காக தன்னை பல விதங்களில் தண்டனைக்கு உள்ளாக்கும் பிரகாஷ்ராஜின் மீது மகன் சுந்தர்.சிக்கு வெறுப்பு ஏற்பட்டு பிறகு அதுவே துவேஷமாக மாறுகிறது. அப்பாவை ஆத்திரமூட்ட வேண்டும் என்பதற்காகவே பிரகாஷ்ராஜுக்கு பிடிக்காத விஷயங்களைச் செய்ய ஆரம்பிக்கிறார் சுந்தர்.சி

ஒரு கட்டத்தில் தந்தை மீதுள்ள வெறுப்பால் ரவுடியாகவே மாறிவிடும் சுந்தர்.சி தன் குடும்பத்தை விட்டுப் பிரிகிறார். குடும்பத்தை விட்டுப் பிரிந்தாலும் தாயின் மீதும் தங்கையின் மீதும் மாறாத அன்பு கொண்டுள்ள சுந்தர்.சி அவ்வப்போது அவர்களைப் பார்ப்பதை கடுமையாக எதிர்கிறார் பிரகாஷ்ராஜ்.

ஒரு கட்டத்தில் சுந்தர்.சியால் பாதிக்கப்படும் லோக்கல் தாதா அவரைப் பற்றி போலீசில் புகார் கொடுத்து பழி வாங்க நினைக்கிறார். போலீஸ் தன் வீட்டில் தன் மகனைப் பற்றி நடத்தும் விசாரணைகளால் மனம் வெதும்பும் பிரகாஷ்ராஜ் தானே தன் மகனைப் போலீஸில் பிடித்துக் கொடுக்கிறார்.

இந்த நிலையில், சுந்தர்.சி யுடன் சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் படித்த கோபிகா அவர் மீது காதல் கொள்கிறார். தந்தை மகன் இருவருக்கிடையே உள்ள உறவை புதுப்பிக்க நினைக்கிறார். தன் முயற்சியில் கோபிகா வெற்றி பெற்றாரா - தாதா மற்றும் போலீஸ் தரும் நெருக்கடிகளை சுந்தர்.சி எவ்வாறு சமாளிக்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.

அசத்தலாக நடித்துள்ளார் சுந்தர்.சி. எரியும் சிகரெட்டை அலட்சியமாக நாக்கால் அணைப்பது, வேட்டியை அவிழ்த்து எதிரிகளை மூடி, அவர்களின் மண்டையை பிளப்பது என்று சுந்தர் சியின் ரகளைகள் சூப்பர். சண்டைக்காட்சி - பாடல்காட்சி எல்லாம் ஓக்கே. இருந்தாலும் வசன உச்சரிப்பு ஏற்ற இறக்கத்தில் ஆவேசமில்லை. அந்த ஏரியாவில் இன்னும் பயிற்சி தேவை.

கண்டிப்பான ஆசிரியராக நடிப்பில் பின்னி எடுக்கிறார் பிரகாஷ்ராஜ். போலீஸ் ஸ்டேஷனில் அடிவாங்கும் பிள்ளையப் பார்த்து "அவனை என்ன வேணாலும் செஞ்சுக்கங்க.. ஆனா அவனை தேடி எங்க வீட்டுக்கு வராதீங்க.." என்பது சூப்பர்.. தன் அண்ணன் கொடுத்து அனுப்பிய நகையை மட்டும் அணிந்துகொண்டு திருமணம் செய்து கொள்ள சுந்தர்.சி யின் தங்கை சந்தோஷி முடிவு செய்யும் போது அதை எதிர்க்கும் பிரகாஷ்ராஜ் தன் முகபாவங்களாலேயே கைத்தட்டல்களை அள்ளுகிறார்.

ரவுடியான சுந்தர்.சி யைக் காதலிக்கும் டீச்சராக கோபிகா. கண்டதும் வந்த காதல் இது இல்ல.. சின்ன வயசுலேயே பூவாட்டம் பூத்ததுதான் இந்தக் காதல் என்று கோபிகாவை சொல்ல வைத்து இந்தக் காதலுக்கு அர்த்தம் சொல்ல முற்பட்டுள்ளார் இயக்குனர். சுந்தர்.சி பின்னாலேயே சுற்றி அவரது அன்பைப் பெற முயற்சிப்பதும்,அவரை மாற்றும் முயற்சியிலும், காதலரை குடும்பத்தோடு இணைத்து வைக்க செய்யும் முயற்சிகளிலும் கோபிகாவின் நடிப்பு மிளிர்கிறது.

காமெடியில் கலக்கியுள்ளார் விவேக். அவருக்கு ஜோடியாக அஞ்சு. லாரியை வைத்து பிஸினஸ் துவங்கி கடைசியில் சைக்கிளில் தாயத்து விற்பது வரை வழக்கம் போல மூட நம்பிக்கைகளை நக்கலடித்துள்ளார். மழைய நிறுத்த இவரை அம்மணமாக ஊருக்குள் திரிய வைக்கும் பஞ்சாயத்து பெருசுகளிடம் விவேக் புலம்புவது சூப்பர். அவிழ்த்து விடுகிற ஆபாசங்கள், இரட்டை அர்த்த வசனங்களை மன்னித்து விட்டுப் பார்த்தால் விவேக்கின் காமடி டிராக்கை நன்றாகவே ரசிக்கலாம்.

இமான் இசையில் பாடல்கள் ஓக்கே. கே.எஸ். செல்வராஜின் ஒளிப்பதிவும் தளபதி தினேஷின் சண்டைக்காட்சிகளும் படத்திற்கு பலம்.

சிறு வயது மாணவன் சுந்தர்சி செய்கிற ஸ்கூல் மணி டெக்னாலிஜியை அவரே எதிர்பார்க்காத தருணத்தில் கண்காட்சியில் காண்பித்து அவரை அழைத்து பரிசு கொடுப்பது போன்ற நெகிழ்ச்சியான காட்சிகள் படத்தில் இருந்தாலும் வெயில், எம்மகன், கிரீடம் போன்ற அப்பா - மகன் எதிர்மறை உறவை பிரதிபலிக்கும் பல படங்களின் கலவையாகவே வீராப்பின் கதை தோன்றுகிறது. மேலும் எல்லாப் படங்களைப் போலவே கடைசியில் அப்பா பிரகாஷ்ராஜ் செய்யாத குற்றத்திற்காக தண்டை அனுபவிப்பதும் அவரை மகன் காப்பாற்றுவது பார்த்து பார்த்து அலுத்துப் போன சமாச்சாரங்களின் ஒன்று. கதையில் எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் இயக்குனர் பத்ரியின் முதல் படம் அவரை படுகுழியில் இறக்கவில்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors