தமிழோவியம்
பாடல்களால் ஒரு பாலம் : நீலநயனங்கள்
- அபுல் கலாம் ஆசாத்

தமிழில்

திரைப்படம்: நாளை நமதே

பாடலாசிரியர்: வாலி

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா

திரையில்: எம்.ஜி.ஆர்., லதா

இந்தியில்

திரைப்படம்: யாதோன் கி பாராத்

பாடலாசிரியர்: மஜ்ரூஹ் சுல்தான்பூரி

இசை: ஆர்.டி.பர்மன்

பாடியவர்கள்: முகமது ரஃபி, ஆஷா போன்ஸ்லே

திரையில்: விஜய் அரோரா, ஜீனத் அமன்

MGR, Latha1975இல் வெளிவந்த எம்.ஜி.ஆர். படங்கள் அனைத்தும் மொழிமாற்றம் செய்து எடுக்கப்பட்டவை. சச்சா ஜூட்டா (ராஜேஷ் கன்னா) - நினத்ததை முடிப்பவன், தோ ஆங்கேன் பாரா ஹாத் (சாந்தாராம்) - பல்லாண்டு வாழ்க, உல்ஜன் (சஞ்ஜீவ் குமார்) - இதயக்கனி. அந்த வரிசையில் யாதோன் கி பாராத் (தர்மேந்திரா) - நாளை நமதே.

பிரபலமான பாடல்களைக் கொண்ட இந்திப்படம் அது. தமிழில் இதனைக் கொண்டுவந்தபோது இசையமைப்பாளராகப் பணிபுரிய முதலில் எம்.எஸ்.வி. மறுத்து, பின்பு வற்புறுத்தல் காரணமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஆர்.டி.பர்மனின் இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே பிரபலம். ஆஹா போஸ்லே, கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி என அவரவர் அவர் பங்கிற்கு ஒரு வெற்றிப் பாடலைக் கொடுத்து ரசிகர்களை ஆட்டம் போடவைத்த படம். கதையின் ஒரு பாத்திரம் மேடைப் பாடகனாக இருப்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம். யாதோன் கி பாராத் என்றாலே பாடல்கள்தான் என்று சொல்லப்பட்ட நிலையில் தமிழில் 'நாளை நமதே'யாக இது உருவானபோது இசையமைப்பில் எம்.ஜி.ஆரின் உள்ளீடுகள் நிறைய வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எம்.எஸ்.வி. இசையமைக்க மறுத்தார் என்பது செய்தி.

யாருடைய உள்ளீட்டால் உருவானதோ இந்தியில் மனதை ஈர்த்ததைப் போலவே தமிழிலும் இந்தப் பாடல் மனதை ஈர்த்தது.

பாடலுக்கான சூழல் மிகவும் சாதாரணமானதாக இருந்தபோதும் பாடல் வரிகள் அப்போதைய போக்கிலிருந்து சற்று மாறுபட்டு அமைகின்றபோது ஈர்த்துவிடுகின்றது.

நீலநயனங்கள், ஐவகை அம்புகள், மாயக் கண் இவை எழுபத்தைந்தில் வெளியான பாடல் வரிகளில் காணக்கிடைக்காதவை. இப்படிப் பல நேரங்களில் விளையாடி செல்வது வாலியின் கலை. 'ஆடை கொண்ட மின்னல்' என்று புதுமையாக கண்ணன் என் காதலனில் சொல்லிப் பார்த்தார், நாளை நமதேவில் 'பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது'.

மஜ்ரூஹ் சுல்தான்பூரியின் 'சுராலியா ஹை தும்னே ஜோ தில்கோ! நஸர் நஹீ சுரானா சனம்!' (திருடினாயே இதயத்தை இங்கே! விழிகளை ஏன் விலைபேசினாய்?) வரிகள், ஆஷா போன்ஸ்லேயின் கிறங்கடிக்கும் குரல், ஜீனத் அமனின் புன்னகை, இப்படித் துவங்கி முதல் சரணமும் பல்லவியும் அடுத்த சரணத்தை முகமது ரஃபி துவங்கும் நொடிக்காகக் காத்திருப்பது இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது.

தமிழிலும் இதனைத் தந்தபோது ஏறக்குறைய இந்தியின் பாதிப்பில் பி.சுசீலா பல்லவியை முடித்ததும் அனுபல்லவியை ஜேசுதாஸ் பாடுவதான அமைப்பு.

கனவு ஏன் வந்தது? காதல்தான் வந்தது!

பருவம் பொல்லாதது! பள்ளிக்கொள்ளாதது!


நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது - அதன்

கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது

ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட

மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது

கனவு ஏன் வந்தது? காதல்தான் வந்தது

பருவம் பொல்லாதது பள்ளிக்கொள்ளாதது

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ - அதன்

கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ

பச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை பக்கம் நின்றாடுமோ

பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க வெட்கம் உண்டாகுமோ

அந்த நாளென்பது கனவில் நான் கண்டது

காணும் மோகங்களென்று காட்சி நீ தந்தது

(நீலநயனங்களில்)

மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து மன்னன் பசி தீர்த்ததோ

மேலும் என்னென்ன பரிமாறு என்று என்னை ருசி பார்த்ததோ

பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது

மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது

(நீலநயனங்களில்)


பார்வை தீர்த்து வைத்த இச்சைகள் போக மீதியிருப்பதை மேனி கேட்பதான் கற்பனை தமிழில். இந்தியில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு காதலை வெளிப்படுத்தும் வரிகள்.

அவள் சொல்கிறாள்,

பஹார் பன்கே ஆவூன் கபி தும்ஹாரி துன்யாமேன்

வசந்தமாகி வாழ்வேன் கரம் பிடித்து உன்னோடு

அவன் சொல்கிறான்,

லஹு ஜிகர்கா தூங்கா ஹசீன் லபோன் கி லாலிகோ

ஹை வஃபா க்யா

இஸ் ஜஹான் கோ

ஏக் தின் திக்லாதூங்கா மைன் தீவானா

இதழ் சிவப்பிற்காக என் நெஞ்சைப் பிளக்கவா!

காதலென்றால்

என்னவென்று

நானுமொரு நிஜமாய் நிற்கும் நாளும் இன்றோ!

திருடினாயே இதயத்தை இங்கே!

விழிகளை ஏன் விலை பேசினாய்!

சுராலியா ஹை தும்னே ஜோ தில்கோ

நஸர் நஹீ சுரானா சனம்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors