தமிழோவியம்
தராசு : நஷ்டஈடு
- மீனா

1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களின் போது பல்வேறு மாநிலங்களிலிருந்து பஞ்சாபிற்கு விரட்டியடிக்கப்பட்ட  30ஆயிரம் சீக்கிய குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதைப் பற்றி மத்திய அரசைப் பரீசிலிக்குமாறு டி.ஏ.சங்கரன் குழு வலியுறுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு நஷ்ட ஈடு தொகொயாக 5 லட்சம் ரூபாயும் கலவரத்தின் போது உயிரிழந்த துணை ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு ராணுவத்தில் பணி கொடுப்பதைப் பற்றியும் சங்கரன் தலைமையிலான குழு மத்திய அரசை வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு நடந்த இந்திரா காந்தி படுகொலைக்கு காரணமானவர்கள் எப்போதோ தண்டிக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் இந்திரா படுகொலையை சாக்காக வைத்து சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கு காரணமாணவர்கள் எப்போது தண்டிக்கப்படப்போகிறார்கள்? நானாவதி கமிஷன் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், ஜெக்தீஷ் டைட்லர் உள்ளிட்ட பலர் மீது குற்றம் சுமத்தியிருந்தாலும் ஆதாரப்பூர்வமான சாட்சிகள் ஏதுமில்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் ஜம்மென்று வெளிவரப்போகிறார்கள் என்பது நிச்சயமாகிவிட்ட ஒன்று. ஏனெனில் இவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள். ஆகவேதான் ஒரு வழக்கை 20 வருடங்களுக்கும் மேலாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சிலரின் கொலை வெறியைத் தணிக்க ஏற்பட்ட பிரும்மாண்டமான கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சீக்கியர்களுக்கு யார் பதில் சொல்லப்போவது? ஒரு சீக்கியராக நடந்த சம்பவங்களுக்கு வேதனைப்பட்டாலும், பிரதமாராக இருந்து கொண்டு தன் கட்சி ஆட்களுக்கு விரோதமாக செயல்படமுடியாத நிலையில் தான் இருக்கிறார் நமது பிரதமர். சம்மந்தப்பட்டவர்கள் வெறுமனே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதால் மட்டும் தீரப்போகும் பிரச்சனையல்ல இது. தன் கட்சி ஆள், எதிர்கட்சி ஆள் என்றெல்லாம் பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிஜமான நியாயம் கிடைக்குமாறு ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டிய நேரமிது.

ஆனாலும் ஒரு மறுக்க முடியாத நிஜம் - யார் என்னதான் சொன்னாலும் நடந்த தவறுக்கான தண்டனை உரியவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பது நிச்சயம் இல்லாத இந்நிலையில் குறைந்த பட்சமாக பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்காவது இனியும் தாமதிக்காமல் உரிய நஷ்டஈட்டை வழங்க மத்திய அரசு உடனடியாக முன்வரவேண்டும். ஏற்கனவே பாதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் இனியாவது அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசுமாறு அவர்களுக்கு சேரவேண்டிய உதவித் தொகையை உடனடியாக மத்திய அரசு அளிக்க முன்வருமானால் அதுவே சீக்கியர்களுக்கு அரசு செய்யும் பிராயச்சித்தமாகும். செய்வார்களா?

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors