தமிழோவியம்
முச்சந்தி : சப்தமிடாத கதைகள்
- என். சொக்கன்

Sadurangam Sippaigal'அவருடைய தொனி அடக்கமானது', என்கிறார் முன்னுரையில் அசோகமித்திரன். அதற்கு என்ன அர்த்தம் என்று புரியாதவர்கள், இந்தத் தொகுப்பை அதற்கொரு கச்சிதமான உதாரணமாகவே வாசிக்கலாம்.

சிறுகதைகளில், குறிப்பாக அச்சு ஊடகங்களில் வெளிவரும் சிறுகதைகள் எல்லாவற்றையும் ஆர்ப்பாட்டமாக, பிரம்மாண்டமாகச் சொல்லவேண்டும் என்கிற கருத்து வலுவாகிவருகிற சூழ்நிலையில், முத்துராமனின் கதைகள் மிகுந்த கவனம் பெறுகின்றன. நமக்குப் பரிச்சயமான கதைமாந்தர்களை, அவர்கள் நமக்குள் உண்டாக்கிச் செல்கிற லேசான பாதிப்புகளை அப்படியே காட்சிப்படுத்துகின்றன இவரது கதைகள்.

வர்ணனைகளிலோ, காட்சிச் சித்தரிப்புகளிலோ சிறிதும் மிகை இல்லாமல், உள்ளது உள்ளபடி, அதுவும் தேவையான அளவில், ஒரு போஸ்ட்கார்ட் அளவு புகைப்பட அளவில்மட்டும் விவரிக்கும் கதைகள், நிஜமாகவே 'சிறு' கதைகளாக இருக்கின்றன. ஒவ்வொரு கதையும், நான்கு முதல் ஆறு பக்கங்களுக்குள், ஆனால், மிகுந்த நிறைவளிக்கும் அனுபவமாக அமைகின்றன.

இந்தச் சிறுகதைத் தொகுப்பை சுமார் ஒரு மணி நேரத்துக்குள் வாசித்து முடித்துவிடலாம். ஆனால், ஈரம், சில கையசைவுகள், இருப்பவன் போன்ற கதைகள் உண்டாக்கும் அதிர்வுகள் (அதாவது, அடக்கமான அதிர்வுகள்) நெடுநாள் நீடிக்கும்.

ஒரு சில கதைகளில் முத்துராமனின் இயல்புக்குச் சற்றும் பொருந்தாத லேசான பிரச்சார தொனி தென்படுவதைமட்டும் ஒரே ஒரு குறையாகச் சொல்லலாம். மற்றபடி, சமீபகாலத்தில் இப்படியொரு சிறப்பான தொகுதியை வாசிக்கவில்லை !

(சதுரங்கச் சிப்பாய்கள் - முத்துராமன் - கிழக்கு பதிப்பகம் - ரூ 35/-)டிரா·பிக் சிக்னல்களில் காத்திருக்கும்போது, என்ன செய்கிறீர்கள் ?

இந்தக் கேள்வியை, காரில் போகிறவர்களிடம் கேட்கமுடியாது. ரேடியோ மிர்ச்சியோ, மசாலாவோ கேட்டுக்கொண்டு, ஏஸி இருந்தால் அதையும் முடுக்கிவிட்டுக்கொண்டு அவர்கள் அனுபவிக்கலாம். ஆனால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இருசக்கர வாகனர்கள் என்ன செய்யமுடியும் ?

அரை நிமிட, ஒரு நிமிடக் காத்திருப்பு என்றால்கூட பரவாயில்லை, பெங்களூரில் நான்கு, ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் நீள்கிற சிக்னல்களைக் கடப்பதற்குள், தாடி வளர்ந்து, வாழ்க்கை வெறுத்துப்போகிறது.

இப்போதாவது கொஞ்சம் பரவாயில்லை, பெரும்பாலான சிக்னல்களில் எலக்ட்ரானிக் பலகை வைத்து, இன்னும் எத்தனை விநாடிகள் தேவுடு காக்கவேண்டும் என்று க¡ட்டுகிறார்கள். ராக்கெட் விடுவதற்கான கவுன்ட் டவுன்போல் அதைப் பார்த்துக்கொண்டு நகம் கடிக்கலாம். முன்பெல்லாம் இதுவும் இல்லை, திருதிருவென்று விழித்துக்கொண்டு ஜெயிலில் அடைபட்ட கைதிபோல, எப்போது விடுவிப்பார்கள் என்று தெரியாமல் காத்திருக்கவேண்டியதுதான்.

மறுபடி பழைய கேள்விக்கு வருகிறேன், இப்படி அநாவசியமாகக் காத்திருக்க நேர்கிற துண்டு துண்டு நேரங்களை எப்படி உபயோகமாகச் செலவழிப்பது ?

பிரச்சனை என்னவென்றால், இந்த ஒரு சந்தர்ப்பத்தைத்தவிர, வேறு எங்கேயும் நான் 'சும்மா' காத்திருப்பதில்லை. பேருந்து நிறுத்தத்திலோ, ரயில், அல்லது சினிமா டிக்கெட் வாங்கும் வரிசையிலோ, அல்லது மருத்துவரைப் பார்ப்பதற்காகவோ காத்திருக்க நேரும் என்று தெரிந்தால், இதற்காகவே கையில் ஒரு புத்தகத்தைக் கொண்டுசென்றுவிடுவேன். அதன்பிறகு, எவ்வளவு நேரமானாலும் சிரமம் தெரியாது.

ஆனால், போக்குவரத்து நிறுத்தங்களில் இதைச் செய்யமுடியாது. ஏனெனில், இதற்காக வண்டியை அணைத்து, புத்தகத்தைத் திறந்து, அரைப் பக்கம் புரட்டுவதற்குள் பச்சை விழுந்துவிடும், மறுபடி கிளம்பி ஓடவேண்டும். நாம் மீண்டும் வண்டியைக் கிளப்புவதற்கு ஆகும் அந்த அரை விநாடியில், சுமாராக இருபத்தேழே முக்கால் பேர் பின்னாலிருந்து ஹாரன் அடித்துக் கடுப்பேற்றுவார்கள்.

இந்த அவஸ்தையே வேண்டாம் என்றுதான், இதுபோன்ற சிக்னல்களில் கையைக் கட்டிக்கொண்டு சுற்றிலும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், அதிலும் சுவாரஸ்யமான விஷயங்கள் எதுவும் கண்ணில் படுவதில்லை. மிஞ்சிப்போனால், ஹெல்மெட் அணிந்திருப்பவர்கள் எத்தனை சதவீதம் என்று கணக்கிடலாம். பின் இருக்கையில் இருப்பவர்களுக்கும், வண்டியை ஓட்டுபவர்களுக்கும் வயது வித்தியாசம் எத்தனை என்று குத்துமதிப்பாகக் கணக்குப் போடலாம், கார்களின் பின்கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களைப் படித்துக் கொட்டாவி விடலாம். அவ்வளவுதான்.

இதெல்லாமே, அரை நிமிடத்துக்குள் சலித்துவிடும். அதன்பிறகு, என்ன செய்வது ? பழையபடி நகம் கடிக்கவேண்டியதுதானா ? இந்த பாழாய்ப்போகிற டிரா·பிக்காரர்கள், எலக்ட்ரானிக் திரையில் நேரம் காட்டுவதுபோல், சினிமாவோ, விளம்பரப்படமோ, அல்லது வேறெதையாவது காட்டித்தொலைத்தால் என்னவாம் ?

போக்குவரத்து நிறுத்தங்கள் இல்லாமல், எந்தப் பெருநகரத்திலும் வாகன ஒழுங்கு சாத்தியமே இல்லை என்பது புரிகிறது. ஆனாலும், அவற்றில் செய்வதறியாது காத்திருப்பதன்மூலம் வீணாகிற மனித சக்தியைக் கணக்கிட்டுப்பார்த்தால், தலை சுற்றுகிறது. இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று சத்தியமாகத் தெரியவில்லை.

இந்தக் கவலையே வேண்டாம் என்றுதான், நான் இப்போதெல்லாம் வண்டியை வெளியில் எடுப்பதே இல்லை. பஸ்ஸினுள் அல்லது ஆட்டோவினுள் காத்திருக்கும்போது, ஜாலியாகப் புத்தகமாவது படிக்கலாம் !

 

நண்பர் உமா மகேஸ்வரன் சென்ற பிறவியில் ஏதோ மகா புண்ணியம் பண்ணியிருக்கவேண்டும் - சில மாதங்களுக்குமுன் யதேச்சையாக பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்குப் போனவர், அங்கிருந்த நூலகரிடம் பேச்சுக்கொடுத்திருக்கிறார். இடத்தை அடைக்கிறது என்ற காரணத்தால், சில பழைய பத்திரிகைகளை எடைக்குப் போடப்போவதாக அவர் சொல்லியிருக்கிறார், அப்படி எதைக் கழித்துக்கட்டுகிறார்கள் என்கிற குறுகுறுப்பில் இவரும் உள்ளே எட்டிப்பார்த்திருக்கிறார் - அத்தனையும் சுபமங்களாவின் பழைய இதழ்கள், 1991முதல் 1995வரையிலான நாற்பத்தொன்பது இதழ்கள் !

ஐயா, பொக்கிஷத்தைப் பொட்டலம் கட்டுவதற்கு விற்கப்பார்க்கிறீர்களே என்று அந்த நூலகரிடம் சண்டை போட்டுவிட்டு, அந்த இதழ்களையெல்லாம் அவரே மூட்டை கட்டி, வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டார், நிதானமாக எல்லாவற்றையும் புரட்டிப்பார்த்துவிட்டு, எனக்கு சந்தோஷமாக ஒரு கடிதம் எழுதினார்.

அப்போது 'ராயர் காப்பி க்ளப்' இணையக்குழு தொடங்கிய நேரம். க்ளப்பின் பெயர்க் காரணரான ஸ்தாபகர் (!) இரா. முருகன் அவரது சுபமங்களா நினைவுக¨ளக்குறித்து நிறைய எழுதிக்கொண்டிருந்தார், அந்த இதழைக் கண்ணால் பார்க்கிற பாக்கியம்கூட நமக்கு வாய்க்கவில்லையே என்று நானெல்லாம் ஏக்கப்படுமளவு அவர் தகவல்களை அள்ளி வீச, என் பொறாமையில் எண்ணை வடிப்பதுபோல் இந்த நண்பரின் கடிதம். அன்றைய தினத்தில், அவருக்கு பதிலாக நான் தமிழ்ச் சங்க நூலகத்துக்குப் போயிருக்கக்கூடாதா என்கிற அதீத ஏக்கத்தில் நான் சற்றே மெலிந்துபோனது (கொள்கையளவில்) உண்மைதான்.

அதோடு நிறுத்தினாரா இவர், வாரம் ஒரு தடவை, நான் சுபமங்களாவில் இதைப் படித்தேன், அதைப் படித்தேன், இது அருமையான கவிதை, இது நல்ல சிறுகதை, இதைப் பிரமாதமாக மொழிபெயர்த்திருக்கிறார்கள், ஏகப்பட்டது இருக்கிறது, வாசிக்கதான் நேரமில்லை என்றெல்லாம் அடுக்கடுக்காக அனுபவக் கடிதங்கள் எழுதி என் கண், காது, மூக்கு ஆகியவற்றிலிருந்து நில்லாமல் புகை வரவைத்தார் இந்த நண்பர்.

இப்படி ஏகப்பட்ட பொறாமையில் நொந்தபிறகு, ஒருவழியாகக் கடவுள் கண் திறந்தான். தமிழ்ச் சங்கத்திலிருந்து உமா மகேஸ்வரன் அள்ளிவந்த இதழ்களில் சிலது, இரட்டைப் பிரதிகளாக இருந்ததாம். நான் வாய்விட்டுக் கேட்காதபோதும், என் ஆசையைப் புரிந்துகொண்டு, அந்தக் கூடுதல் பிரதிகளை மனமுவந்து எனக்கு அனுப்பிவைத்திருந்தார் அவர்.

அவரும், அவரது சகல சந்ததியினரும் நூறாண்டு காலம் நல்லபடியாக வாழட்டும் என்று வாழ்த்திவிட்டு, என் கணினி மேஜையின்மீதே அத்தனை இதழ்களையும் பிரித்துப்போட்டுப் புரட்ட ஆரம்பித்தேன். (எதிர் மேஜையிலிருந்து எக்கிப் பார்த்து முறைக்கிற மேலாளர் பக்கத்தில் வரமாட்டார் - அவருக்கு டஸ்ட் அலர்ஜி (தூது ஒவ்வ¡மை ?))

முதன்முதலாக இப்போதுதான் சுபமங்களா இதழ்களைப் பார்க்கிறேன், ஜுனியர் விகடனைவிட சற்றே பெரிய அளவில் வண்ணமயமான அட்டை, உள்ளே நாலு பக்கமும் நல்ல மார்ஜின்விட்டு (பைண்ட் செய்ய வசதி !) சிறு எழுத்துகளில் அச்சு, கோகுல் சந்தன பவுடரில் ஆரம்பித்து சிட்·பண்ட், சினிமாப்படம்வரை கலர்கலராக விளம்பரங்கள் - இத்தனை விளம்பரங்களுடன் ஓர் இலக்கியப் பத்திரிகை பார்த்ததாக நினைவில்லை, அங்கங்கே கட்டம் கட்டி சிறுபத்திரிகைகளின் வெளியீட்டு விபரங்கள், வளரும் எழுத்தாளர் (ஹை !) ஜெயமோகனுக்கு வாழ்த்துச் சொல்லும் குறிப்பு, கதா விருது, ஞானபீட விருது, இலக்கிய சிந்தனை விருது என்று அறிவிப்புகள், இலக்கியக் கூட்டங்களுக்கான அழைப்பிதழ்கள், புதுப்புது புத்தகங்களுக்கான விளம்பரங்கள் - இவையெல்லாம் தொட்டுக்கொள்ளும் சரக்குகள் என்றால் விருந்துச் ச¡ப்பாடும் பலே ஜோர் - ஜெயராஜ், ஸ்யாம், கரோ, வேதா, ராமு, ம. செ. என்று வணிகப் பத்திரிகைகளுக்கே நிறைய வரைகிற ஓவியர்களின் திருத்தமான ஓவியங்களுடன் நவீன சிறுகதைகள், கவிதைகளைப் பார்ப்பதற்குப் புதுமையான சுவையாக இருக்கிறது , ஆழமான தலைப்புகளில் கட்டுரைகள், கவிதை ரசிப்பு பற்றி விக்ரமாதித்யனின் கட்டுரைத்தொடர், 'பறந்துபோன பக்கங்கள்' - முடியாமலேபோய்விட்ட கோமலின் வாழ்க்கை வரலாறு, 'மாதபலன்' என்கிற வித்தியாசமான தலைப்பில் அவர் எழுதிய இலக்கியத் தொடர் பகுதி, சமூக அக்கறையுடனான தலையங்கங்கள், விரிவான புத்தக விமர்சனங்கள், குறிப்புகள் (ஒரு நூலுக்கான குறும்பு அறிமுகம் - 'தெ¡குப்பாசிரியர் பார்வையில் அவர் எதையெல்லாம் சிறந்தது என்று கருதுகிறாரோ, அவற்றைத் தொகுத்திருக்கிறார்'), தவறாத அட்டைப் பட அறிவிப்புடன், மாதம் ஒரு ந£ண்ட நேர்காணல், ஏராளமான மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், பிறமொழிகளின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களது படைப்புகளை அறிமுகப்படுத்தும் நல்ல கட்டுரைகள், சினிமா விமர்சனங்களும், வாசகர் கடிதங்களும்கூட வெற்று வார்த்தை நிரப்பல்களாக இல்லாமல் நிறைந்திருக்கிற தரம் !

இந்த இதழ்களில் ஒன்றைக்கூட நான் இன்றுவரை முழுமையாகப் படிக்கவில்லை - வெறும் புரட்டலிலும், அவ்வப்போது மனதுக்குத் தோன்றிய பக்கங்களைத் திருப்பி, அங்கிருக்கிற கதை (அ) கவிதை (அ) கட்டுரையைப் படித்துவிட்டு மூடிவைத்துவிடுவதிலுமே திருப்தியடைந்துகொண்டிருக்கிறேன். முழுசாகப் படித்துமுடிப்பதற்குள், சுபமங்களா மீண்டும் வந்துவிடும் என்று நேற்று ராத்திரி ஒரு கனவு !


இந்த வாரத் 'தலைப்பு' :

Will the Iron Fence Save a Tree Hollowed by termites ?

- இந்திய ராணுவம்பற்றி அருண் ஷோரி எழுதியிருக்கும் நூலின் தலைப்பு


இந்த வார ஆச்சரியம் :

கப்பன் பார்க்கினுள் ஓடிய ஒரு காரின் பின்பக்கம், நம்பருக்குபதிலாக, பார் கோடிங் !!

Copyright © 2005 Tamiloviam.com - Authors