தமிழோவியம்
திரைவிமர்சனம் : பிப்ரவரி 14
- மீனா

தாமரைக் குளத்தைச் சேர்ந்த பையன் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த - இந்தியாவை சுத்தமாக பிடிக்காத தமிழ் பெண்ணைக் காதலிப்பதால் உண்டாகும் பிரச்சனைகளைப் பற்றிச் சொல்ல நினைத்து - இன்னொரு காதல் கோட்டை கட்ட நினைத்து கடைசியில் ரூட் மாறி கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் ஹோசிமின்.

February 14தாமரைக்குளத்து போஸ்ட்மாஸ்டர் பையன் படத்திற்கு பெங்களூர் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. பெற்றோர் மற்றும் தங்கையைப் பிரிந்து பெங்களூர் வருகிறார் ஹீரோ. அதே போல அமெரிக்காவைச் சேர்ந்த ரேணுகா மேனன் தாத்தாவின் வற்புறுத்தலால் பெங்களூரில் பரத் படிக்கும் அதே கல்லூரியில் சேர்ந்து படிக்க வருகிறார். முதல் பார்வையிலேயே பரத்திற்குள் காதல் தீ பற்றிக்கொள்கிறது. ஆனால் அமெரிக்க கலாச்சாரத்தை விட்டு வர மறுக்கும் - இந்தியாவை வெறுக்கும் ரேணுகாவின் மனதில் இந்தியாவில் தான் இருப்பதே வேஸ்ட் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதற்கிடையே ஒருதலையாக ரேணுகாவைக் காதலிக்கும் பரத் அமெரிக்கா கிளம்ப தயாராகும் ரேணுகாவைத் தடுக்க மிஸ்டர் எக்ஸ் என்ற புனைப் பெயரில் ரேணுகாவை ஆஹா ஓஹோ என்று லெட்டரில் புகழ்கிறார். ரேணுகாவின் அலைவரிசையும் எக்ஸின் அலைவரிசையும் ஒன்றுதான் என்று ரேணுகாவை நம்ப வைக்கிறார். ஒரு கட்டத்தில் முகம் தெரியாத எக்ஸை காதலிக்க ஆரம்பிக்கிறார் ரேணுகா.

நான் தான் எக்ஸ் என்பதைச் சொல்லத் துணிவில்லாத பரத், தான் விளையாட்டாக ஆரம்பித்தது வினையாகப் போய்க் கொண்டிருப்பதை நினைத்து மனம் புழுங்குகிறார். மேலும் ரேணுகா இன்னும் 1 நாளுக்குள் எக்ஸ் யார் என்று தெரியாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ரேணுகா உருக்கமாக கூற என்ன செய்வதென்று தெரியாமல் பரத் தடுமாறுகிறார். ரேணுகாவிற்கு பரத் தான் மிஸ்டர் எக்ஸ் என்ற உண்மை தெரிந்ததா? இருவரும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதே கிளைமாக்ஸ்.

மதுரை பாஷை பேசிக்கொண்டு நன்றாகத் தான் அறிமுகமாகிறார் பரத். ஒரு சீனியர் மாணவர் ராகிங்கில் தன்னுடைய புத்தகங்களை பரத்திடம் கொடுத்து வகுப்பில் வைக்க சொல்ல, அதையே சாக்காக வைத்து சீனியர்களை கலாய்க்கும் காட்சியில் பரத்தின் ஆக்டிங் நன்றாகவே இருக்கிறது. மேலும் அவர் அடிக்கடி அவருடைய மனசாட்சி பையனுடன் பேசும் காட்சிகளும் அதைப் பார்த்துவிட்டு அவருடைய நண்பர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடும் சீனும் சூப்பர். இருந்தாலும் காதல் படம் அளவிற்கு அவருக்கு நடிக்க இப்படத்தில் வாய்ப்பு இல்லை. ரேணுகா மேனன் - பாதிக் காட்சிகளில் காற்றடைத்த பலூன் ரேஞ்சிற்கு உப்பலாகத் தெரிகிறார். நடிப்பும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. பல இடங்களில் செயற்கைத்தனம் விஞ்சி நிற்கிறது. இனி வரும் படங்களிலாவது கொஞ்சமாவது நடித்தால்தான் தமிழ் திரையுலகில் தேறமுடியும்.

February14 கல்லூரியில் காண்டீன் வைத்து நடத்தும் வடிவேல் படத்தில் ஆஹா ஒஹோ என்று சிரிக்க வைப்பார் என்று எதிர்பார்த்தால் பாஸ் மார்க் வாங்கவே மிகவும் சிரமப்படுகிறார். அவரது காமெடியில் பாதிக்கும் மேற்பட்டவை ஏற்கனவே பார்த்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பரத்தின் நண்பர்களாக வரும் சத்யன் கோவின் நகைச்சுவை ஓரளவிற்கு ஓக்கே.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவிற்கும் இசையமைப்பாளர் பரத்வாஜிற்கும் பாராட்டுகள். கண்களையும் காதுகளையும் ரொம்பவும் உறுத்தாத ஒளி, இசைக்காக.. இதைப்போலவே பரத்தின் சட்டையிலிருந்து அடிக்கடி வெளியே வந்து மதுரைத் தமிலில் கலாய்க்கும் அந்த கார்டூன் மனசாட்சி கேரக்டருக்கும் சபாஷ். இயக்குனருக்கு இதுதான் முதல் படம்.. என்றாலும் கதையை வடிவமைத்ததில் இன்னும் ரொம்பவே மெனக்கட்டிருக்கலாம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors