தமிழோவியம்
தராசு : ராமதாஸ¤ம் சினிமாவும்
- மீனா

"சினிமாவை எதிர்த்து குரல் கொடுத்தால் வேறு வேலை இல்லையா என்கிறார்களே? " என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாதந்திர கூட்டத்தில் பேசும்போது டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். டாக்டர் சினிமா நடிகர்கள் தவிர மற்றப் பிரச்சனைகளைப் பற்றியும் கொஞ்சம் பேசினால் யார் அவரை குறை கூறப் போகிறார்கள்? தன்னுடைய சுயவிளம்பரத்திற்காகவும், சில நடிகர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காமலும் தான் டாக்டர் ஐயா, சினிமா நடிகர்களான ரஜினி மற்றும் விஜயகாந்தை கண்டபடித் திட்டிக்கொண்டிருந்தார்.. திட்டிக் கொண்டிருக்கிறார்.

ஏதோ ரஜினியால் தான் தமிழக மக்கள் அனைவரும் சிகரெட் பிடிக்கக் கற்றுக்கொண்டதைப் போலப் பேசியே  பாபா திரைப்படத்தை ஓடவிடாமல் தகராறு செய்தார். அவரது நல்ல நேரமோ, ரஜினியின் கெட்ட நேரமோ பாபா படுத்துவிட்டது. விட்டேனா பார் என்று அடுத்ததாக விஜயகாந்த் மீது தாக்குதல் கணையைத் தொடுத்தார். விஜயகாந்தின் படத்தை ஓடவிடாமல் செய்ய திருட்டு வி.சி.டி தயாரித்து வினியோகம் செய்வோம் என்று பகிரங்கமாக அவரது தொண்டர்கள் அறிவித்தனர். டாக்டர் ஐயா மட்டுமல்லாது மற்றொரு டாக்டரும் ஏதோ பெரிய சமூக சிந்தனை உள்ளவரைப் போல கமல் படத்தின் தலைப்பை மாற்றவேண்டும் என்று போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றார். இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தேவைப்படுவது எல்லாம் பரபரப்பு.. அவ்வளவே. கொஞ்ச நாளில் தாங்கள் என்ன பேசினோம் என்ற நினைவே இவர்களுக்கு நிச்சயம் இருக்காது.

நடிகர்களை மையமாக வைத்து விளம்பரம் தேடும் இவர்களைப் போன்ற தலைவர்கள் நாட்டில் நடக்கும் மற்ற பிரச்சனைகளை கண்டுகொள்வதே கிடையாது என்பதே நிதர்சனமான உண்மை. நதிநீர் இணைப்புப் பிரச்சனை, காவிரியில் நீரைத் திறந்துவிடும் பிரச்சனை, வழக்கறிஞர்கள் பிரச்சனை என்று நாட்டில் எத்தனை பிரச்சனைகள்? அவை எல்லாம் டாக்டர் ஐயாவின் கவனத்திற்கு வராமல் போய்விட்டதே. இதை என்னவென்று சொல்ல? பாபாவிற்கு எதிராக நடத்திய போராட்டத்தில் ஒரு சிறு பங்கைக் கூட பா.ம.க வேறு எந்த மக்கள் பிரச்சனைகளுக்காகவும் நடத்தியது கிடையாது.

ராமதாஸ் அவர்களே! நீங்கள் சினிமாவுக்கும் சினிமா நடிகர்களுக்கும் எதிராக தாராளமாகக் குரல் கொடுங்கள். ஆனால் நீங்கள் பேசும் வார்த்தைகள் அர்த்தமுள்ளவைகளா என்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். பிறகு பேசுங்கள். இல்லாவிட்டால் ஒரு காலத்தில் நீங்கள் வெட்டிய மரங்களுக்காக இப்போது நடத்திக்கொண்டிருக்கிறீர்களே பசுமைத் தாயக இயக்கம்.. அதைப்போலவே சினிமாவிற்கு ஆதரவாக வேறு ஒரு இயக்கம் தொடங்கவேண்டியிருக்கும்.

சினிமாவைத் தவிர வாழ்க்கையில் பல முக்கிய பிரச்சனைகள் மக்களுக்கு இருக்கின்றன. அவைகளையும் சற்று மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் உங்களது நல்ல காலம் நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள். ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் காலம் உங்களுக்கு ஒத்தாசை செய்யும் என்ற பகற்கனவை விட்டுஒழியுங்கள். உண்மையாக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் நிச்சயம் மண்ணைக் கவ்வவேண்டியதுதான்.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors