தமிழோவியம்
கட்டுரை : பழமொழிகளின் அ(ன)ர்த்தங்கள்
- முரளி வெங்கட்ராமன்

நெடுங்காலம் தொட்டுப் பழமொழிகள் பல வழக்கில் இருந்து வருகின்றன.  ஆங்கிலத்தில் இதனை pithy அல்லது maxim என்று கூறுவார்கள். இவைகளும் குறளைப் போன்று சிறிய வடிவாயின.  ஆழ்ந்த பொருள் செறிந்தன.  ஆனால் காலப் போக்கில் பேச்சுத் தமிழின் தாக்கம் காரணமாக அவைகளே தேய்ந்து வழங்கப் படவோ, அல்லது அவைகளின் உள்ளர்த்தம் மாறி உரைக்கப்படவோ ஆயின.  சிறு வயதில் தமிழ்ப் புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் நிறையப் படிக்கும் வாய்ப்பும் ஆர்வமும் இருந்த படியால், சிலவற்றின் உண்மையான அர்த்தங்களை புரிந்து கொள்ள முடிந்து இருந்தது.  அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.

1. நாயை கண்டா கல்லைக் காணோம், கல்லை கண்டா நாயைக் காணோம்

இது பெரும்பாலும் இப்போது ஒரு காரியத்தை செய்யத் தேவையான இரு காரணங்களில் இரண்டில் ஒன்று எப்போதும் கூடி வராமல் போவதால், காரியமும் நடை பெறாமல் இருப்பதைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றது.  ஆனால், இது அதற்காகப் பயன்படுத்தப் பட்டதன்று.  ஒரு சிற்பி மிக அழகான ஒரு நாயின் சிலையை செதுக்கினான்.  அந்த கலை வடிவைக் கண்ட இருவரில் ஒருவர், கலை விற்பன்னர்.  அவருக்கு அது கற்சிலை என்பதே மறந்து போனது.  அவர் அதனை நாய் என்றே நினைத்து விடும் அளவிற்கு அச்சிற்பி வடிவமைத்து இருப்பதாகப் புகழ்ந்தார்.  மற்றவர் கொத்தனார்.  கட்டுமானப் பணிகளில் பல்வேறு கற்களைக் காண்பவர்.  நல்ல கல்லினால் ஆன அந்த சிலையைக் கண்டவுடன் - "மிக உயர்ந்த தர கல் ஆயிற்றே" என்று அதிசயப்பட்டார். முன்னவருக்கு நாயும் பின்னவருக்கு கல்லுமாக காட்சி தருகின்ற ஒரே பொருள். இருவர் மீதும் தவறில்லை. நாம் ஒரு விஷயத்தில் அடைகின்ற அறிவானது, நமது சிந்தையின் தரத்தைப் பொறுத்தே அமைகின்றது.  அதற்காக வழங்கப் பெற்று வந்த இந்த பழமொழியானது இப்போது சற்றே சிதைந்து வேறு விதமாக வழங்கப் பெறுகின்றது.

2. அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்

ஒரு குழந்தையை வளர்க்கும் காலம் இதனைச் சொல்லித் தான் வீட்டார் அடித்து வளர்க்கின்றனர். அண்ணனையோ தம்பியையோ பார்த்து நல்ல ஒழுக்கம் கற்றுக் கொள்ள வேண்டும்.  அப்படி இல்லையேல் தண்டிக்கப் படவேண்டும் என்று இப்போது பொருள் திரிந்து வழங்கப் படுகின்றது. (இதுவே நிறைய பேருக்கு தெரியாது).  ஆனால், இதன் உண்மையான பொருள் இதல்ல.  அடி = பாதம் = இறைவனின் பாதம்.  எந்தக் காரியத்திலும் இறைவனின் அருளே மிகவும் நம்பத்தகுந்த உதவியாகும்.  மற்றவர் எல்லாரையும் நம்புவதை விட, இறைவனை நம்புதல் நலம் என்று அறியப் பெற்று வந்த பழமொழி இன்று திரிந்து விட்டது.

3. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்

புதிதாக கல்யாணம் ஆனவுடன் இருக்கும் ஈர்ப்பினைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றது.  மோகம் குறைந்து காணப்படும் நேரத்தில் சொல்லப்படுகின்ற ஒரு வாக்கியம்.  ஆனால், பொருள் அது அல்ல.  ஆசை அறுபது + மோகம் முப்பது = தொண்ணூறு நாட்கள் = 3 மாதம் = பெண் கர்ப்பம் :-) முதலிரவிற்கு பின் ஆசையாலும் மோகத்தாலும் விளைகின்ற அந்த அற்புதப் பரிசு, தொண்ணூறு நாட்கள் கழித்து தான் உலகில் வர இருப்பதை தலை சுற்றல் மற்றும் வாந்தியின் மூலமாக சமிக்ஞை செய்கிறது என்று அழகாக கோடிட்டுக் காட்டினர்.  நீங்கள் கேட்கலாம், அதெப்படி 3 மாதத்தில் என்று நிச்சயமாக சொல்கிறீர்கள் என்று.  இது ஒரு அளவுமொழி தான்.  உண்மையில் பெண் மகப் பேறு அடைய மேலும் நாட்கள் பிடிக்கலாம் தான் இந்த யுகத்தில்.

4. வக்கத்தவன் வாத்தியார் வேலைக்கு, போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு.

இது முதலில்

"வாக்கு கற்றவன் வாத்தியார் வேலைக்கு
போக்கு கற்றவன் போலீஸ் வேலைக்கு"

என்று தான் வழங்கப்பட்டது.  வாக்கு கற்றவன் = நன்றாக சொல்லித்தரும் திறமையினை கல்வி மூலம் பெற்றவன் வாத்தியார் வேலைக்கு செல்ல வேண்டும்.  மனிதர்களின் மனப்போக்கினைக் கற்றவன், போலீஸ் வேலைக்கு போகவேண்டும் - ஏனனெனில், அவனுக்கு திருடர்களின் மனப்பாங்கும் சாமானியனின் மனப்பாங்கும் நன்கு தெரிந்து இருக்கும்.  இது திரிந்து இப்போது இந்த முட்டாள்தனமான உருமாற்றத்துடன் வழங்கப் படுகின்றது.

5. ப்ராமணோ போஜனப் ப்ரியஹ

இது பழமொழி இல்லை.  பொதுவாக பிராமணர்களைக் கிண்டல் அடிக்கப் பயன்படும் வடமொழி வாக்கியம்.  பிராமணர்கள் வக்கணையாக சாப்பிடக் கூடியவர்கள் என்று பொருள் தருகின்றது.  இதன் உண்மையான வடிவம் "ப்ராமணோபோ ஜனப் ப்ரியஹ".  பிராமணன் என்பவன் ஜனங்களால் விரும்பப் படுகின்றவன் என்று பொருள் படும்படி வழங்கப் பெற்றது. எந்தப் புண்ணியவானோ அதை திரித்து பிராமணர்களை சாப்பாட்டு ராமர்கள் ஆக தெரியும்படி ஆக்கி விட்டார்.


 

Copyright © 2005 Tamiloviam.com - Authors