தமிழோவியம்
கோடம்பாக்கம் : எஸ்.பி.பியின் இன்னிசை நிகழ்ச்சி
- என்.டி. ராஜன்

எஸ்.பி.பியின் இன்னிசை நிகழ்ச்சி

SPB Concertசென்ற ஜூலை மாதம் 31ஆம் தேதி 'கன்சர்ன் இந்தியா பவுண்டேஷன்' நிறுவனத்திற்காக நிதி திரட்டும் நிகழ்சியாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் அவரது குழுவினரால் காமராஜர் நினைவரங்கில் 2 மணி நேர திரை இசைப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ்.பி.பி யுடன் எஸ்.பி.பி சரண் மற்றும் எஸ்.பி. சைலஜாவும் இணைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படப் பாடல்களைப் பாடி, நேயர்களை மகிழ்வித்தார்கள்.

முதலில் அமெரிக்க கான்சலேட் ஜெனரல் டாக்டர். ரிச்சர்டு, கன்சர்ன் இந்தியா பவுண்டேஷனின் சென்னை நிறுவன மேலாளார் சுஹாசா ராவ், எஸ்.பி.பி, எஸ்.பி.சைலஜா மற்றும் லங்கா ஏர்லைன்சின் சூரஜ் நாயர் முதலானோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்கள். சுஹாசாராவ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ரேடியோ மிர்சியின் செந்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து அருமையாக நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார். பாடிய பாடகர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இந்திய கிரிகெட் வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டை அரங்கத்திலேயே ரூ.30,000 ஏலம் விடப்பட்டது.

O

ஸ்வர்ணமால்யாவுடன் வாழ விருப்பம்

நடிகை ஸ்வர்ணமால்யாவின் கணவர் அர்ஜுன் தன் மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்குமாறு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தன்னுடைய மனுவில் ஸ்வர்ணமால்யாவுடன் தான் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், கடந்த காலத்தில் தன் குடும்பத்தினருக்கும், ஸ்வர்ணமால்யாவின் குடும்பத்தினருக்கும் இடையே நடைபெற்ற கசப்பான சம்பவங்களுக்காகத் தான் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் ஸ்வர்ணமால்யா 2 மாதங்கள் மட்டுமே அமெரிக்காவில் வாழ்ந்ததாகவும் அதன் பிறகு தன் குடும்பத்தினருடன் சண்டை போட்டுவிட்டு இந்தியாவிற்கு வந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

O

முன்னாள் பிரபலத் திரைப்பட பின்னனிப் பாடகி ஜிக்கி (ஜி.கிருஷ்ணவேணி) ஆகஸ்ட் 16ஆம் தேதி காலமானார். 70 வயதான ஜிக்கி வயிற்றுப் புற்று நோய் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஞானசெளந்தரி படத்தின் மூலம் தன் இசை வாழ்க்கையைத் துவங்கிய ஜிக்கியின் பல பாடல்கள் பிரபலமடைந்துள்ளன. அவற்றில் முக்கியமானது கல்யாணப் பரிசு படத்தில் வரும் " துள்ளாத மனமும் துள்ளும் " பாடல். சில ஆண்டுகளுக்கு முன் ரயில் விபத்தின் காலமான பிரபல திரைப்படப் பாடகரும், இசையமைப்பாளருமான ஏ.எம். ராஜாவின் மனைவி ஜிக்கி. இவர் தமிழக அரசின் கலைமாமணி பட்டமும், ஆந்திர அரசின் உகாதி புரஸ்கார் பட்டமும் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடிப் புகழ்பெற்றவர். ஜிக்கி - ராஜா தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் நாலு மகள்களும் உள்ளனர்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors