தமிழோவியம்
திரைவிமர்சனம் : வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
- மீனா

Vasool Rajaமீண்டும் கமல்-கிரேஸி கூட்டணியில் காமெடிக் கதம்பமாக ஒரு படம். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படம் அப்படியே இந்தி முன்னாபாயின் ரீமேக் என்பதால் கதைக்காக யாரும் பெரிதாக சிரமப்படவில்லை. ஆனால் வசனத்திலேயே இந்தப் படத்தை ஓட்ட முயற்சி செய்திருக்கிறார்கள்.. அதில் நிச்சயம் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். வியாதிகளை மருந்தால் மட்டுமின்றி அன்பாலும் குணப்படுத்த முடியும்.. அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்ற அன்பே சிவம் கருத்தையே நகைச்சுவையோடு சொல்ல முற்பட்டிருக்கிறார்கள்.

வாராக்கடனை வசூலிக்கும் தொழில் செய்பவர்கள் வசூல்ராஜா என்ற ராஜாராமன் (கமல்) மற்றும் அவரது கூட்டளிகளான பிரபு, கருணாஸ் மற்றும் பலர். தன்னுடைய தொழிலைத் தன் அப்பா நாகேஷிடம் சொல்ல முடியாமல், தான் ஒரு டாக்டர் என்று புருடா விட்டுக்கொண்டிருக்கிறார் கமல்.
மகனைப் பார்க்க வரும் நாகேஷ், எதிர்பாராத விதமாக தன்னுடைய பழைய நண்பரான டாக்டர் பிரகாஷ்ராஜை வழியில் சந்திக்கிறார். பிரகாஷ்ராஜின் ஒரே மகளான சிநேகாவை தன் மகனுக்காகப் பெண் கேட்கிறார். எல்லாம் கூடி வரும் வேளையில் வேலைக்காரி கமலின் உண்மைச் சொரூபத்தை அவிழ்த்து விட, பிரகாஷ்ராஜால் அவமானப்படுத்தப்பட்டு திரும்புகிறார்கள் நாகேஷ் அவரது மனைவி ரோகினி மற்றும் கமல். இதனால் வெறுத்துப் போய் கிராமத்திற்கே திரும்புகிறார்கள் நாகேஷ் தம்பதியினர்.

அப்பாவை அவமானப்படுத்திய பிரகாஷ்ராஜை டாக்டராகி பழிவாங்குகிறேன் பார்!! என்று சபதம் போடுகிறார் கமல். தன் தொண்டர் படையுடன் போய் அடாவடி மற்றும் அழுகுனி ஆட்டம் ஆடி பிரகாஷ்ராஜின் காலேஜிலேயே சீட் வாங்குகிறார். இதற்கிடையே நடந்த விஷயம் ஒன்றுமே தெரியாத சிநேகா, கமல் ஏன் தன்னுடைய தந்தையை பழிவாங்கத் துடிக்கிறார் என்பதை கமல் கல்லூரியில் சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே உணர்கிறார்.

கொஞ்ச நாளில் ஆஸ்பத்தரி - கல்லூரியில் உள்ள ஒவ்வொருவருடைய அபிமானத்தையும் பெறுகிறார் கமல். இவரை எப்படியாவது கல்லூரியை விட்டுத் துரத்தவேண்டும் என்று பிரகாஷ்ராஜ் போடும் ஒவ்வொரு திட்டமும் கமலால் தவிடுபொடியாகிறது. கடைசியில் பிரகாஷ்ராஜ் தான் விரும்பியதைப் போல கமலை கல்லூரியிலிருந்து வெளியே துரத்தினாரா இல்லையா? கமல் - சிநேகா சேர்ந்தார்களா? என்பதே மீதிக் கதை.

இது ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் என்பதால் லாஜிக் என்பதை கொஞ்சமும் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்க்க ஆரம்பித்தால் நிறைய இடங்களில் கண்டபடி உதைக்கும். உதாரணம்.. கல்யாணத்திற்கு பெண்ணின் போட்டோவைக் காட்டும் எந்த அப்பாவாவது அவள் குழந்தையாக இருக்கும் போட்டோவைக் காட்டுவாரா? அதே போல சிநேகாவிற்கு கமல் யார் என்பது படத்தின் ஆரம்பம் முதல் தெரியும்.. ஆனால் கடைசி வரையில் சிநேகா யார் என்பது கமலுக்குத் தெரியவே தெரியாது.

படத்தில் நகைச்சுவை சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கிறது. சிரித்துச் சிரித்து வயிற்றுவலி வருவது நிச்சயம். ஒரே காமெடியாக இருந்தால் சரிவராது என்று, செண்டிமெண்டாக காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் ஜெயசூர்யா கதைகளும் படத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

ரெளடி கம் கல்லூரி மாணவராக சரியாட்டம் ஆடியிருக்கிறார் கமல். அவருக்கு கைவந்த காமெடி.. கொஞ்சம் செண்டிமெண்ட். வெளுத்து வாங்கியிருக்கிறார். அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க அனைவரும் திண்டாடியிருக்கிறார்கள். சிநேகா, கிரேஸி மற்றும் பிரகாஷ்ராஜ் மட்டும் தப்பிப்பிழைத்து இருக்கிறார்கள். ஆனாலும் பிரகாஷ்ராஜின் லாப்டர் தெரபி கொஞ்ச நேரத்திலேயே போரடிக்க ஆரம்பிக்கிறது. பிரபுவிற்கு வாய்ப்பு ரொம்பவும் குறைச்சல். பிரபுவின் கதியே இப்படி என்றால் கருணாஸ் மற்றும் மாளவிகா பற்றி கேட்கவே வேண்டாம். ஒப்புக்குத் தலையைக் காட்டிவிட்டுப் போகிறார்கள்.

கேன்சர் பேஷண்டை ஆறுதல் படுத்தவதற்காக என்று கூறிக் கொண்டு, பக்கா கமர்ஷியலாக " சீனா தானா " பாட்டு. கமல் படத்தில் இயக்குனராக சரண். இதைப் பற்றி மேலே சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. பரத்வாஜின் இசை ஓக்கே.

பெரும்பான்மையான மக்கள் படம் பார்க்க வருவதே சிரித்து மகிழ்வதற்காக.. என்ற எண்ணம் கமலுக்கு நிறையவே உண்டு. அதனாலேயே ஒரு சீரியஸ் படம் எடுத்தால் உடனேயே ஒரு நகைச்சுவைப் படம் எடுத்துவிடுவார். அந்த வரிசையில் வரும் படங்கள் எல்லாமே நல்ல வசூலைத் தரும். அதற்கு மகுடம் வைத்தாற்போல் வசூல்ராஜா அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors