தமிழோவியம்
ஹாலிவுட் படங்கள் : ஒரு பார்வை
- வந்தியத்தேவன்

ஆங்கர் மேனேஜ்மெண்ட் (2003)

ஆடம் சேண்டலரும் (Adam Sandler), ஜேக் நிக்கல்சனும் (Jack Nicholson) இணைந்து கிச்சு-கிச்சு மூட்டும் படம். விமானப் பணிப்பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக பொய்க் குற்றச்சாட்டுடன் ஆடம் 'கோப மேலாண்மை' (Anger Management) சிகிச்சைக்கு கோர்ட்டால் பரிந்துரைக்கப்படுகிறார். அவரது டாக்டர் வேறு யாருமில்லை ஜேக் நிக்கல்சன். விமானத்தில் படம் பார்க்க 'ஹெட் செட்' ஆடம் கேட்க, பணிப்பெண் அலட்சியம் செய்ய வந்தது வினை. அமெரிக்காவில் விமானப் பயணம் செய்தவர்கள் ஆரம்ப காட்சிகளை இன்னும் வெகுவாக ரசிக்கலாம்.

'குழு சிகிச்சை' ((group therapy) பயனளிக்காது போகவே, தனி மேற்பார்வை செய்ய ஆடம் வீட்டிற்குள் அடியெடுத்து வக்கிறார் ஜேக். வேலியில் போன ஓணானை மடியில் விட்ட கதைதான் ஆடமுக்கு.

வெறும் ஆடம் சாண்லரையே சுற்றி வராமல் இன்னும் பல காதாபாத்திரங்களையும் திரைக்கதை அரவணைத்துச் செல்கிறது. பீட்டர் சேகல் இயக்கம். இப்படத்தில் போட்ட காசிற்கு, மனதார சிரித்து விட்டு வரலாம்.

எச்சரிக்கை:

இதெல்லாம் ஒரு நகைச்சுவையா என்று படம் பார்த்தவுடன் உங்களுக்கு கோபம் வந்தால் உமக்கு 'கோப மேலாண்மை' கட்டாயம் தேவை.


50 பர்ஸ்ட் டேட்ஸ் (2004)

பீட்டர் சேகலின் லேட்டஸ்ட் படம். ஆடம் சாண்லர் மற்றும் ட்ரு பாரிமோர் (Drew Barrymore) நாயகர், நாயகி வேஷம் கட்ட இவ்வருட 'காதலர் தினத்தில்' வெளியான படம். 24 மணி நேரத்திற்கு ஒருமுறை உங்கள் மூளை 'புதுப்பிக்கப்பட்டால்' (refresh) எப்படியிருக்கும்? ட்ரூவிற்கு பிரச்சினையே அதுதான். தனது தந்தையின் பிறந்த நாளில் நிகழும் விபத்தில் தலையில் பலத்த அடிபட்டு 'short-term memory loss' ஏற்படுகிறது.

ஆடமோ 'பிரிகின்ற உரிமையோடு உறவு வேண்டும்' என்னும் 'சுதந்திரப் பிரியர்'. காலைச் சிற்றுண்டி சாப்பிடும் போது ஆடம், ட்ரூவிடம் வழிய முதல் சந்திப்பு ஆரம்பமாகின்றது. மறுநாள் ட்ரூ அவரைத் தெரியாதது மாதிரி ரகளை நடத்த ஆடம் அதிர்ச்சிக்குள்ளாகிறார். பின்னர் நடந்த விபத்து அவருக்கு தெரியப்படுத்தப் படுகின்றது.

இருப்பினும் ட்ரூவை குணப்படுத்திவிட முடியும் என்ற ஆடத்தின் போராட்டமே மீதிக் கதை. மாட்டிக் கொண்டோமே என்னும் பயமின்றி ஒருமுறை பார்க்கலாம். 


91/2 Weeks (1986)

அன்பெய்த்புல் மற்றும் இண்டீஸண்ட் ப்ரொப்போஸல் பார்த்த பிறகு நைன் அண்டு ஹால்ப் வீக்ஸ் (91/2 Weeks) பார்க்க யாருக்குமே ஒரு 'உந்துதல்' வரும். நவீன ஓவியங்களைக் கையாளும் யுவதிக்கும், அபாயமதிகமுள்ள பங்கு சந்தையைப்போல் நடத்தி பணம் பார்க்குமிளைஞனுக்கும் இடையே ஒரு 'இது' ஏற்படுகிறது. இதைக் காதலென்று கொச்சைப்படுத்த மனம் வரவில்லை. அழகான கிம் பாசிங்கரை (Kim Basinger) வீணடித்திருக்கின்றார்கள். மற்றபடி வழமையான ஆட்ரியன் (Adrian Lyne) படங்களைப் போல 'ஸீன்'களுக்கு குறைவில்லை. அதற்காக படம் பார்க்கச் செல்வதை விட, மலிவு விலையில் இதை விட 'மே(ப)லான' படங்கள் அநேகமுண்டு.

Copyright © 2005 Tamiloviam.com - Authors