தமிழோவியம்
தராசு : ஐதராபாத் பெண்களின் அவல நிலை
- மீனா

அரபு ஷேக்குகளின் செக்ஸ் சொர்கமாக ஐதராபாத் இருந்துவருகிறது என்றும், ஐதராபாத்தைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்டு சில நாள் மனைவியாக அவர்களை வைத்திருந்துவிட்டு பிறகு அவர்களை விவாகரத்து செய்து விடுகிறார்கள் என்ற செய்தி தற்போது ஐதராபாத் முழுவதும் பரவிவருகிறது. இது ஒன்றும் எங்கள் நகருக்கு புதிதல்ல.. கடந்த 25 ஆண்டுகளாகவே இப்படி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போதுதான் இந்த அவலம் வெளியில் தெரியவந்திருக்கிறது என்று போலீசார் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அரபு தேசத்திலிருந்து வரும் ஷேக்குகளுக்கு முஸ்லீம் பெண்களை அறிமுகம் செய்து வைப்பவர்கள் புரோக்கர்கள். தனக்கு விருப்பமான பல பெண்களையும் ஷேக் ஒரே நேரத்தில் மணந்துகொள்வார். சில நாட்கள் அவர்களுடன் குடும்பம் நடத்தியபிறகு ஷேக் அவர்களை விவாகரத்து செய்துவிட்டு அரபு தேசத்திற்கு திரும்பிவிடுவார். இத்தகைய பேரங்கள் பணத்திற்காக நடப்பதால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலரும் வாயை திறப்பதே இல்லை... என்றெல்லாம் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் தினந்தோறும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

பணத்திற்காக செய்யப்படும் இந்தகைய சிலநாள் கல்யாணங்களை திருமண வகையில் எவ்விதம் சேர்ப்பது? மும்பையில் ரெட்லைட் ஏரியா என்று ஒரு தனியிடத்தில் நடக்கும் விபசாரங்களுக்கும் இதற்கும் எவ்விதத்திலும் வேறுபாடு காணமுடிவதில்லை என்பதே பல சமூகசேவை நிறுவனங்களின் கருத்து. திருமணம் ஆகி ஷேக் விட்டுச்சென்ற வேகத்தில் அவர்களைப் பற்றி புகார் செய்யும் பெண்கள் தொடர்ந்து தங்களுடன் ஒத்துழைப்பதில்லை என்று போலீசாரும், போலீஸ் இத்தகைய வழக்குகளில் ஆர்வம் காட்டுவதே இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்களும் மாறிமாறி புகார் கூறிவருகிறார்களே தவிர உருப்படியாக இவ்விஷயத்தில் ஒன்றுமே நடக்கவில்லை என்பது வேதனைதரும் விஷயமாகும்.

நம்நாட்டில் வறுமையினால் விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் பலர். இத்தகைய சிலநாள் திருமணங்களும் அதற்காகவே. பெண்களின் குடும்ப சூழ்நிலையையும் அவர்களது வறுமையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இத்தகையை கீழ்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரையும் சட்டம் பாகுபாடின்றி கடுமையாக தண்டிக்க வேண்டும். அதற்கு முதற்படியாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் சம்மந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை முன்வரவேண்டும். மேலும் ஷேக்குகளுக்கு பெண்களை விற்கும் புரோக்கர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கெல்லாம் மேலாக, பணத்திற்காக தங்களையே அடமானம் வைக்கும் நிலையை சம்மந்தப்பட்ட பெண்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும்.

ஏதோ டூரிஸ்ட் விசாவில் வந்துவிட்டு சிலநாட்கள் அனுபவித்துச் செல்லும் போகப்பொருட்கள் இல்லை நம் நாட்டுப் பெண்கள் என்ற உண்மை உலகிற்கு புரியவேண்டும். அதை புரிவைப்பது நம் அனைவரின் கடமை. குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாட்டவர் என்ற ஒரே காரணத்தை வைத்து அவர்கள் தப்பிவிடாதபடி சட்டத்தின் பிடியை இருக்கவேண்டியது நம் கடமை. மத்திய மாநில அரசுகள் இவ்விஷயத்தில் நம் சட்டத்துறைக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவியாக இருந்து காவல்துறை தன் கடமையை செய்ய அனுமதிக்கவேண்டும்.

முடிவாக, எத்தனை பேர் எவ்வளாவு முயன்றாலும் இவ்விஷயத்தில் பாதிக்கப்பட்ட - பாதிக்கப்படப்போகும் பெண்கள் தங்களது நிலையை நன்கு உணரவேண்டும். தன்னை நாடிவருபவர் எதற்காக தன்னிடம் வருகிறார் என்பதையும் அவரது பசப்பு வார்த்தைகளில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பதையும் சிறிது சிந்தித்தால் போதும். ஆசைவார்த்தைகள் ஒருபோதும் வேலைக்கு ஆகாது என்ற உண்மையை அவர்கள் உணர்ந்தால் அதுவே இப்பிரச்சனைக்கு முடிவாக அமையும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors