தமிழோவியம்
திரைவிமர்சனம் : தாஸ்
- மீனா

ஜாதி, மதப்பிரச்சனைகள் காதலுக்கு குறுக்கே நிற்க, அதை எல்லாம் முறியடித்து உண்மைக்காதல் எப்படி ஜெயிக்கிறது என்பதுதான் தாஸின் ஒன்லைன் கதை.

Dass Movie, Jeyam Raviஜாதிவெறி பிடித்த திருநெல்வேலியைச் சேர்ந்தவர் அண்ணாச்சி சண்முகராஜன். இவரது மகள் ரேணுகாமேனனும் அவருடன் கல்லூரியில் படிக்கும் கிறிஸ்தவரான ஆண்டணி தாஸ¤ம் (ஜெயம் ரவி)ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இடையே தனது நண்பன் மற்றும் ரேணுகாவின் சித்தப்பா மகள் காதலுக்கும் ரவி உதவுகிறார். ஜாதி விட்டு ஜாதி காதலா என்று கொதித்தெழும் சண்முகராஜன் காதலர்கள் இருவரையும் உயிரோடு கொளுத்துகிறார். இதைக்கண்டு ஆத்திரமடையும் ரேணுகாமேனன் ரவியுடன் தனது அப்பாவிற்கு எதிராகவே ஒடத் தீர்மானிக்கிறார். நாங்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டு வந்து உன் முன்னால் நிற்போம். அப்போது முடிந்தால் எங்களையும் கொளுத்து பார்க்கலாம் என்று பகிரங்கமாக அப்பாவிற்கே சவால் விடுகிறார் ரேணுகாமேனன்.

சினிமா வழக்கம்போல வில்லன் கோஷ்டியினர் காதலர்களை துரத்த, ஒரு முஸ்லீம் நண்பன் வீட்டில் தஞ்சம் புகும் ரவி, ரேணுகா இருவரும் முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். திருமணம் நடக்க சில மணிநேரமே இருக்கும் வேளையில் அவ்வீட்டில் நடக்கும் ஒரு சதிதிட்டத்தை ரவி கண்டுபிடிக்கிறார். திட்டமிட்டபடி காதலர்கள் திருமணம் செய்துகொண்டார்களா அல்லது திருமணத்தை ஒதுக்கிவிட்டு ரவி சதியை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறாரா? இவர்களைத் தேடி அலையும் சண்முகராஜன் இருவரையும் கண்டுபிடித்து பழிவாங்குகிறாரா? இதுதான் மீதிக்கதை.

படம் முழுக்க ஆக்ஷனில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் ரவி. நகைச்சுவை இயல்பாக வருவது இவரது பெரிய பிளஸ்பாயிண்ட். சண்முகராஜனால் கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படும் ரவி, ரேணுகா புட்பாலைத் திரும்பக் கொடுத்துவிட்டு ரவியின் காதலை நிராகரித்து அழுதுகொண்டே செல்லும்போது நண்பணிடம் " நிஜம்மாவே இப்போதான் என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கடா" என்று சொல்லும் காட்சியில் தனக்கு நடிக்கவும் வரும் என்று நிரூபித்திருக்கிறார்.

நாயகி ரேணுகாமேனன்.. பாந்தமாக வந்து போகிறார். பல காட்சிகளில் நடித்தும் இருக்கிறார். ஜாதிவெறி பிடித்த அண்ணாச்சியாகவே வாழ்ந்திருக்கிறார் சண்முகராஜன். இவரது வில்லத்தனத்திற்கு டிஸ்டிங்ஷனே கொடுக்கலாம். விருமாண்டிக்கு அடுத்தபடி சண்முகராஜனுக்கு பேர் சொல்லும் படமாக இது நிச்சயம் அமையும். என்னடா முதல் 2 காட்சிகளில் பெப்ஸி விஜயன் நல்லவராக வருகிறாரே என்று யோசிக்கும்போதே வில்லனாக மாறிவிடுகிறார். வில்லத்தனத்தில் சண்முகராஜனுக்கு சரியான ஜோடி பெப்ஸி விஜயன்.

வடிவேலுவின் காமெடி சுமார் ரகம். இருந்தாலும் பரவாயில்லை. படத்தில் லிவிங்ஸ்டன் வருவதே 2 சீன் என்றால் அதிலும் ஏகப்பட்ட டபுள் மீனிங் வசனங்கள். இயக்குனர் நிச்சயம் லிவிங்ஸ்டன் பாத்திரத்தை தவிர்த்திருக்கலாம். மேலும் படத்தில் நிரோஷா, காந்திமதி உள்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள். எல்லோரும் சும்மா வந்து போகிறார்கள். அவ்வளவே.

இசை யுவன் ஷங்கர் ராஜா. ஓஹோ கிடையாது - ஒக்கே ரகம் தான். ஆரம்பத்தில் நன்றாக ஆரம்பிக்கும் கதை கிளைமாக்ஸை நெருங்க நெருங்க தொய்வது படத்தின் பெரிய மைனஸ். ஜாதிப்பிரச்சனையை வைத்து ஆரம்பிக்கும் கதையில் தேவையே இல்லாமல் முஸ்லீம் மதக்கலவரங்களை காட்டுவதும், அவர்களது சதித்திட்டத்தை ஒற்றை ஆளாக ரவி முறியடிப்பதும் கொஞ்சம் அபத்தமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக வெடிகுண்டை வெடிக்க விடாமல் இருக்க ரவி செய்யும் முயற்சிகளும் அப்போது காட்டப்படும் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மத ஒற்றுமைக் காட்சிகளும் அலுப்பை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் ஜாதி மதப் பிரச்சனையை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கும் இயக்குனரின் துணிச்சலான முயற்சிக்கு நம் பாராட்டுகள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors