தமிழோவியம்
இந்து மதம் என்ன சொல்கிறது ? : மக்கள் சேவையே மகேசன் சேவை அல்லவா ?
-

அநேகமாக எல்லா ஊர்களிலும், கிராமங்களிலும் கோயில்கள் இருக்கின்றன. அங்கே நிறைய இடமும் இருக்கிறது. ஆனால் தகுந்த இடம் இல்லாததால் மக்களுக்குப் பயன்படும் பள்ளிகூடமோ, ஆஸ்பத்திரிகளோ இருப்பதில்லை. இந்த இடத்தை நாம் ஏன் அப்படி மாற்றிப் பயன்படுத்தக் கூடாது ? மக்கள் சேவையே மகேசன் சேவை அல்லவா ?


Kanchi Periyavaமனிதர்களுக்கு ஆறுதல் கிடைக்கும்படிச் செய்வது, நோயைக் குணப்படுத்துவது, கல்வி அறிவு தருவது எல்லாமே பரம உத்தமமான பணிதான். அதில் பகவான் நிச்சயமாகப் பிரீதி அடைகிறான் என்பதும் உண்மைதான். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது, 'மனித சேவை பகவத் சேவை' என்பதையே திருப்பி வைத்துச் சொல்வதும் ரொம்ப உண்மை என்று தெரிகிறது. அதாவது பகவத் சேவை செய்வதும் மனிதர்களின் நன்மைக்காகத்தான் என்று தெரிகிறது. அதுவே மற்ற சேவைகளைக் காட்டிலும் மனிதனுக்கு நிரந்தரமான நலனைத் தருவதாகும்.

ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளைச் சொஸ்தம் செய்து அனுப்புகிறோம். அவர்கள் அப்புறம் நல்லவர்களாக வாழ வேண்டாமா ? லோகத்துக்குக் கெடுதல் செய்கிறவர்களாவும், தங்களுக்கே அனர்த்தம் செய்து கொள்பவர்களாகவும் இருப்பவர்கள் சொஸ்தமடைந்து, திரும்பி வந்து அக்கிரமமான காரியங்களைத் தொடர்வதால் லோகத்துக்கு என்ன பயன் ? அந்த வியாதி அனுபவம் அவர்களைத் தெய்வ சோதனையாக வந்து அவர்களைப் புனிதப்படுத்துவது என்ற பலன் கிடைக்க வேண்டாமா ? அதற்கு ஆலயம் உதவும் அல்லவா ? ஆஸ்பத்திரி வைத்து நோயாளியின் உடல் வியாதியைத் தீர்ப்பது போதாது. நோயாளிகளது மனத்தில் கெட்ட எண்ணங்கள் என்ற வியாதி இல்லாமல் செய்வதே அதைவிட முக்கியம்.

வித்யாசாலையோடும், வைத்தியசாலையோடும் மனிதனின் வாழ்வு முடிந்து விடுவதில்லை. அவன் நல்லவனாக்கும் நிலையங்களாக ஆலயங்கள் விளங்குகின்றன. ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் இவற்றைக் காட்டிலும் கூட ஆலயங்கள் முக்கியமானவை. நாம் நல்லவர்களாக வாழுவதற்குத் தியானம், பூஜை இவை மிகவும் அவசியம்.

- காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரரேந்திர சுவாமிகள் ('தெய்வத்தின் குரல்' புத்தகத்த்திலிருந்து)

Copyright © 2005 Tamiloviam.com - Authors