தமிழோவியம்
க. கண்டுக்கொண்டேன் : சுதந்திரக் காற்றை சுவாசிக்கலாம் வாங்க!
- ரமா சங்கரன்

 
வீட்டில் கொசு இருக்கிறது. எப்படி அதை நிரூபிப்பது? ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு கொசுக்களை அதில் ஒரே அமுக்காக அமுக்குங்கள். செத்து விடும். சரி, அப்புறம் என்ன பண்ணுவது? சிங்கப்பூரில் நீங்கள் வசித்தால் கவலை வேண்டாம். அந்த பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு உங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரிடம் கொண்டு காட்டுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும் அடுத்த நாள் ஒரு பெரிய குழாமே வீட்டிற்கு வந்து விசாரணை நடத்துவர். சில நாட்களுக்கு முன் இதைத்தான்  செய்தார் ஒரு சிங்கப்பூரர். 'கருத்தறிதல்' -மக்கள் சந்திப்பின்போது  அவர் அதை எடுத்துப் போய் சிங்கப்பூரின் புதுப் பிரதமர் லீசியான் லூங்கிடம் காண்பித்தார்.

Lee Hsien Loongகடந்த 12 ஆகஸ்டு லீசியான் லூங் சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராக பதவியேற்றார். ஆசியாவில் அதிகாரத்துவ ஆட்சிக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் சிங்கப்பூரின் முதல் பிரதமரான  லீகுவான் இயூவின் புதல்வர். தந்தையார் சிங்கப்பூரில் "மக்களைப் பேணிக் காக்கும் Nanny State ஐ உருவாக்கியவர் என்று விமர்சிக்கப்பட்டவர். மக்களை அரசாங்கம் தம் கட்டுக்குள் வைத்திருக்க "கொஞ்சம்  ஜனநாயகம் + கொஞ்சும் கெடுபிடியான தாய்மை அரசாங்கம்" என்பதைக் கருத்தாகக் கொண்டவர் தந்தையார் லீ.  அவருடைய புதல்வரான லீ சியான் லூங்  சிங்கப்பூர் அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக 1984ல் அடியெடுத்து வைத்தார். லீகுவான் இயூவிற்குப்பின் பிரதமரான திரு கோ சோக் டோங்கின் வழி நின்றவர். இவர் அப்பாவை போலவே நிர்வாகத்தில் கடுமையான முதலாளி. ஆனால் சாமர்த்தியமாகவும் கனிவாகவும் நடந்து  தமக்குக் கீழ் பணியாற்றுபவர்களை சரிகட்டுவதிலும் வேலை வாங்குவதிலும் கெட்டிக்காரர். அரசாங்கத்தின் புடவைத்  தலைப்பைப் பிடித்துக் கொண்டு நடக்கும் மக்களை கண்ணைத் திறந்து பார்த்து,   பேச வேண்டும் என்று  வலியுறுத்தியவர். கொசு விஷயங்களுக்கு அவர் நடவடிக்கை எடுக்கச் சொல்லுவார். ஆனால் வாழ்க்கையில் இதை விட சிக்கலான. பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்தும் சமாசாரங்களை  மக்கள் பேச வேண்டும் என கூட்டங்களில் கண்டிப்பார்.    

சிங்கப்பூரும் மலேசியாவும் தண்ணீருக்காக அடித்துக் கொண்டதைப்  படித்திருப்பீர்கள். சிங்கப்பூர் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க அப்போது பல ஆய்வுகளில் இறங்கியது. பரிசோதனைகள் பல நடத்தப்பட்டன. மழைத்தண்ணீரையும் கடல்தண்ணீரையும் சுத்திகரித்து  தேவையான அளவு வீட்டு உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தொழிற்சாலைகளின் பயனீட்டிற்குத் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வது இன்னும் அவசியம். இதற்காக ஒரு தண்னீர் திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்று சொன்னார் இதன் பொறுப்பை ஏற்றிருந்த சிங்கப்பூர் அமைச்சர். அதன்படி இதை முக்கியமாகக்  கொண்டு  புதிய   'நியூவாட்டர்' திட்டம் தொடங்கப்பட்டது. வீட்டுப்பயனீட்டிற்கு தண்ணீர் கிடைப்பதை எப்படியோ சமாளித்து விடலாம்; இதற்காக நியூவாட்டர் திட்டம் வேண்டியதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் அந்த அமைச்சர்.

ஆனால் 50 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பின் மழைத்தண்ணீர் குறைந்தால் அல்லது சிங்கப்பூரின் தட்பவெப்ப சூழ்நிலை மாறினால் மக்கள் குடிநீர் அருந்த என்ன செய்வார்கள்? என்று ஆலோசனைக் கூட்டத்தில் அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரதமர் லீசியான் லூங்  கவலைப்பட்டார். நியூவாட்டர் திட்டத்தின் கீழ் செயல்படும் பில்டர் இதர விஞ்ஞான சாதனங்களை இப்போதே சிங்கப்பூரின் நீர்த்தேக்கங்களில் பொருத்தி தண்ணீர் பிரச்னைக்கு அனைத்து வழிகளிலும் தீர்வு காண வேண்டும் என அவர் அமைதியாகப் பொறுமையாக எடுத்துரைத்தார்.  சிங்கப்பூரின் அரசாங்கக் கொள்கைகளை தீர்மானம் செய்யும்போது  மறுபரிசீலனை செய்வது, , ஆலோசனைகளை செவி மடுப்பது,  மக்கள் கருத்துகளுக்கும் இடமளிப்பது என   சுதந்திரக் காற்றை படிப்படியாக அனுமதித்தவர் பிரதமர் லீசியான் லூங்.

சிங்கப்பூர் அரசியல், பொருளியல்,  கொள்கைகளைப் பற்றி  மக்கள் உரக்கப் பேசலாம் என்னும் தைரியம்  பிரதமர் கோ சோக் டோங்கின் காலத்தில் 1990களில் வளர ஆரம்பித்தது. "softer and gentler"  சிங்கப்பூரை உருவாக்குவோம் என்று முதன் முதலாக   குரலெழுப்பியவர் திரு கோ. புதுப் பிரதமர்  லீசியான் லூங்  இவ்வகையிலான குழுக்களில் தலைமைப்  பொறுப்புகளை ஏற்று மக்களின் கருத்துகளை முன் வைத்தார். அதே சமயம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அவர்களுக்கு சமூகப் பொறுப்புகளை புரிய வைத்தார். தனக்கு என்ன வேண்டும்? என்ன அரசாங்கம் சாதிக்கவில்லை? என்பது பற்றி  மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம். யோசனைகளைக் கூறலாம். வாதிடலாம். எதிர்த்துப் பேசலாம் என்று மக்களுக்கு புதிய தெம்பூட்டினார். நான் முதன்முதல் சிங்கப்பூர் குடிமகளாக வாக்கு அளிக்கும்போது பல வியக்கத்தக்க ஆதாரமற்ற  செய்திகளை என் நண்பர்கள் சொல்வார்கள். எந்த கட்சிக்கு ஓட்டு போடுகிறோம் என்பதை மக்கள் செயல் கட்சி அறிந்து தனக்கு எதிராக வாக்களித்த குடிமக்களை ஏதாவது வகையில் பிரச்னைக்குள்ளாக்கும் என்பதுதான் அது. முதன்முதல் சிங்கப்பூரில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது மக்களிடம் நான் கண்ட பரபரப்பு இன்னும் என்னை வியப்பிலாழ்த்தியது. பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் இல்லாத நாடாக சிங்கப்பூரை  பத்திரிகையாளர்கள் பிறநாடுகளில் காட்டும் பாரம்பரியம் பரவியிருந்தது.  

பிரதமர் லீசியான் லூங் தானே வெளிப்படையாக ஆனால் கண்டிப்பும் ஆக்கப்பூர்வமும் நிறைந்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி சிங்கப்பூரில் புது அரசியல் ஸ்டைலை வழிநடத்தினார்.  உதாரணத்திற்கு, சிங்கப்பூரின் நாணயவாரியத்திற்கு அவர் பொறுப்பேற்றபோது மீட்டிங்குகளில் அறிவுப்பூர்வமாக வாதிட்டு முடிவெடுக்க வேண்டும்  என்பதில் அக்கறைக் காட்டினார். திரு லீயுடன் இப்படி மோத நேர்ந்ததை ஒரு அமைச்சரே அனுபவப்பட்டுக் கூறுகிறார். சிலசமயங்களில் முழுக்க முழுக்க 'softer and gentler" ஸ்டைலும் பின்பற்றப்படும். சமயங்களில் தேவையானால் மூஞ்சியிலடித்தாற் போல பிரதமர் லீ சியான் லூங் பதில் சொல்லி இருக்கிறார்.  வெறுமனே மீட்டிங்கில் அமர்ந்து பேசுவதில் மட்டும் நம்பிக்கை கொள்ளாமல் சில சமயங்களில் அது சம்பந்தப்பட்ட ஊழியர்களை அணுகி நடைமுறையிலான சிக்கல்களை அறிந்து கொள்ள முற்படுவார். லீசியான் லூங் அரசியலுக்குள் புகுந்த உடனேயே "கருத்தறிதல் பிரிவு" (Feed Back) மற்றும் பொருளியல் மறுஆய்வுத்திட்டம் இரண்டிலும் முதன்மையாகக் கடமையாற்றினார். பொருளியல் சரிவு ஏற்பட்ட 1985ல் சிங்கப்பூரர்கள் 1000பேருக்கு மேல் சமர்ப்பித்த ஆய்வுகளையும் கட்டுரைகளையும் கொண்டு பொருளியல் மீட்சிக்கான புதுக் கொள்கைகளை கண்டறிந்தார்.

"Malay Nuts in the Chinese Nutcrackers" என்று மேற்கு நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் சிங்கப்பூரை விமர்சனம் செய்ததை ஒருதடவை படிக்க நேரிட்டது. பெண்களின் திருமணம், குழந்தைப் பெற்றுக் கொள்வது என்று எல்லாவற்றிலும் அரசாங்கம் தலையிடுகிறது என சிங்கப்பூர் கிண்டல் செய்யப்பட்டது. ஆனால்  சிங்கப்பூர் மக்களின்  "Nanny Government" அணுகுமுறை  வெளிநாட்டு பத்திரிகைகளுக்குத் தெரியாது. நான் வசிக்கும்  தாம்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் ஒருசில  மக்கள் சந்திப்பு வைபவங்களுக்கு போயிருக்கிறேன். அப்போது ஒரு இந்தியத்  தாய் தம் பிள்ளையைக் கறுப்பாக இருப்பதால் பிற சீனப்பிள்ளைகள் கேலி செய்து அழ வைக்கிறார்கள் என்றும் அதனால் தம் பிள்ளை எதிர்காலத்தில் ஏதேனும் மனநோய் சிக்களுக்கு ஆளானால் என்ன செய்வது என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்.

மக்கள் தம் 'பிரெட் அண்ட் பட்டர்' சமாசாரங்களை விட்டு விட்டு அதைவிட முக்கியமான பிரச்னைகளை பேசுவது அவசியம் என்று அண்மையில் சிங்கப்பூரின் ஹார்வார்டு கிளப் நடத்திய விருந்தில் புதுப்பிரதமர் பேசினார். அதே சமயம் இன்று மக்கள் செய்தித் தாள்களில் "விவாதம்" பக்கங்களில் மனம் விட்டு அலசும் சமாசாரங்கள் முன்பை விட அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.  ஆனால் மக்களுக்கும் அவர்களின் பொறுப்புகளை உணரவைப்பது அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் கடமை என்பதையும் புதுப் பிரதமர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரர்களில் 100க்கு 93 பேருக்கு அரசாங்கத்தின் மேல் பயம் பேசமாட்டார்கள் என்று ஒரு எதிர்கட்சியினரின் இணையதளம்  கருத்துக் கணிப்பைக் காட்டுகிறது. . நான் 1985ல் என்னுடைய ஹானர்ஸ் பட்டத்திற்காக உள்நாட்டின் யந்திர உற்பத்தி  தொழில்களின் பிரச்னைகள், சவால்கள், எதிர்காலம் பற்றி ஆய்வு செய்தேன். அப்போது தலையாயப் பிரச்னையாக இருந்தது  50% பிராவிடண்ட் பண்ட் விகிதாச்சாரம். ஊழியரின்  பிராவிடண்ட் பண்ட் கணக்கிற்கு முதலாளியும் ஊழியரும் சரிசமமாகப் பகிர்ந்து வழங்கும் இந்த தொகை கம்பெனிகளின் உற்பத்திச் செலவை கணிசமாக அதிகரித்தது. சிங்கப்பூரின் போட்டித்தன்மைக் குறைந்து வந்தது. ஆய்வின்போது அரசாங்கத்தைப்  பற்றி முழநீளம் குறை சொல்வார்கள். ஆனால் எதையும் எழுத வேண்டாம். அரசுக்குத்  தெரிந்துவிட்டால்  முதலாளிகளுக்குப் பிரச்னைகள் வரும் என்று கவலைப்படுவார்கள். சிங்கப்பூரில் சுதந்திரக்காற்றுக்குப் பஞ்சம் என்று அப்போதெல்லாம் நான் நினைத்ததுண்டு. 

இப்போது 'வாய்விட்டுப் பேசுதல்' ஒரு அரசியல் கலாசாரமாக மெதுவாக வளர்ந்து வருவதை என்னால் உணரமுடிகிறது.  தேசிய நாள் என்றால் வீடுகளின் வெளியே  கொடி கட்டப்பட வேண்டும். ஏன் கட்டப்படவில்லை என்று பக்கத்தில் உள்ள சமூக மன்றங்களின் உறுப்பினர்கள் வீடுகளுக்குச் சென்று  கேட்ட காலங்கள் உண்டு. ஆனால் சிங்கப்பூரர்களின் வாழ்க்கை முறைகளும் குணாதிசயங்களும் எனக்கு பல உண்மைகளை புரிய வைத்தன.  அக்கம்பக்கத்தினரைக் கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை. அமெரிக்கக் கிளப் உறுப்பினர்கள் சிங்கப்பூரின் வசதி குறைந்தோர், உடல் குறையுற்றோர் ஆகியோருக்கு இங்கே நிதி திரட்டுகின்றனர். ஆனால் சிங்கப்பூரர்கள் இலவசமாக ஏதாவது ஒன்று கிடைக்கும் என்றால் முந்திக்கொள்ளும் "கியாசு" வகை ஆக வாழ்கின்றனர். மெள்ள மெள்ள  சிங்கப்பூரர்களின் சாயம் வெளுக்கத் தொடங்கியது. சிங்கப்பூரர்கள் தம் சமூகக் கடமைகளை சரியாகச் செய்கிறார்களா? என்னும் கேள்விக்குறி எழுந்தது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சிங்கப்பூர் வந்தபோது "Diplomats were spared for Chewing Gums" என  செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. சிங்கப்பூரின் பத்திரிகை சுதந்திரம் இது போல் சர்ச்சைகளை எழுப்பியதுடன் பிறநாட்டு சஞ்சிகைகளின் தலைப்புச் செய்திகளாக மாறியதும் இன்றும் உண்டு. பார் டாப் டான்சிங் வேண்டும் என்று அரசாங்கத்தை மக்கள்  நச்சரித்த காலம் மறைந்து விட்டது. கடந்த வாரம் இங்கு "Gay Street Carnival"  நடந்தபோது 6000பேர் கலந்து கொண்டனர்.  மலேசியாவின்  கெண்டிங்க் சூதாட்ட மையம்  போல சிங்கப்பூரின் செந்தோஸாவை சிங்கப்பூர் அரசாங்கம் மாற்ற வேண்டும் என்று பயமில்லாமல் சொல்லும் காலம் வந்து விட்டது. ஒரே கட்சி கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக  ஆட்சி செய்து வருவதால் 'அரைகுறை ஜனநாயகம்" என்று சிங்கப்பூர் பழிக்கப்படுகிறது.

ஆனால் இந்த அரைகுறை ஜனநாயகம் சிங்கப்பூருக்கு இரண்டு மாபெரும் பலன்களைத் தந்திருக்கிறது. முதலாளித்துவமும் அதன் பயனால் கிடைத்தப் பொருளியல் பலமும்; பரிவான சமூகமும் அதன் பயனால் கிட்டிய சமூக ஒருமைப்பாடும். நம் சட்டைப் பை நிறைய வேண்டுமா? அல்லது சாலையில் எச்சில் துப்பும் சர்வ சுதந்திர வாழ்க்கை வேண்டுமா? இதற்கு நான் விடையை  இப்போது  கண்டு கொண்டேன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors