தமிழோவியம்
கட்டுரை : அல்பேனியாவைத் தேடி - 3
- கௌரி ராம்நாராயண்

அருவமான உணர்வுகள் ததும்பும் அல்பேனிய கவிதைகளை ஆங்கிலத்தில் வழங்கிய ஸானா மன்சிக்கு (Zana Banci) நன்றி கூறி ஒரு ஈமெயில் அனுப்பி வைத்தேன். "இந்த கவிதைகளைப் படித்ததும் அல்பேனியா எங்கே இருக்கிறது என்று அட்லாஸில் தேடிக் கண்டுபிடித்தேன். நான் வசிக்கும் ஊரின் பெயர் உங்கள் வாயில் நுழையுமோ என்னவோ! ஆனால் கவிதைகளைப் படித்தபின் உங்கள் தலைநகர் திரானாவில் (Tirana) தெரு ஓர டீக்கடை ஒன்றில் செளக்கியமாக உட்கார்ந்து அளவளாவியது போன்ற உணர்வு" என்று எழுதினேன்.
அவர் உடனே பெருமகிழ்ச்சியுடன் எனக்கு அல்பேனியா உதித்த கதையை அனுப்பி வைத்தார். இதோ கேளுங்கள்.

ஒருநாள் மலைச்சரிவில் வேட்டையாடிக்க கொண்டிருந்த இளைஞன் கழுகு ஒன்று பறந்து வந்து உச்சிப் பாறையில் அமர்வதைக் கண்டான். அதன் அலகில் நெளியும் பாம்பு.

கழுகு கூட்டை விட்டுச் சென்றதும் இளைஞன் அதனருகில் சென்று பார்த்தான். கழுகுக் குஞ்சு சர்ப்பத்துடன் விளையாடத் துவங்கியிருந்தது. ஆனால் பாம்பு முழுவதும் சாகவில்லை. திடீரென்று தலையைத் தூக்கி குஞ்சை விஷநாக்கால் தீண்டப் பார்த்தது.

உடனே இளைஞன் அம்பை எய்து பாம்பைக் கொன்றான். பிறகு கழுகுக் குஞ்சைத் தூக்கிக் கொண்டு திரும்பினான். தலைக்குமேல் இறகுகளின் சடசடப்பு. "என் குழந்தையை ஏன் திருடுகிறாய்?" என்று கழுகு வீறிட்டது.

"குஞ்சின் உயிரை நான்தானே காப்பாற்றினேன்? அது எனதாகி விட்டது" என்றான் இளைஞன்.

"என் குழந்தையை விட்டுவிடு. அதற்கு ஈடாக என் கண்களின் கூர்மையையும், என் இறக்கைகளின் வீரியத்தையும், ஏன், என் பெயரையுமே உனக்கு அளிக்கிறேன்" என்று இறைஞ்சியது கழுகு.

இளைஞன் குஞ்சை தாயிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினான்.

குஞ்சு பறக்கக் கற்றுக் கொண்டதும் இளைஞனைத் தேடி வந்தது. எப்போதும் அவன் மேலேயே பறந்து கொண்டிருந்தது. வேட்டையிலும் போர்க்களத்திலும் அவனுக்குத் துணை நின்று வழிகாட்டியது.

மக்கள் இளைஞனின் திறமையும் வலிமையும் கண்டு அவனையே தங்கள் மன்னனாகத் தேர்ந்தெடுத்தார்கள். "ஷ்கிப்தார்" (கழுகுமகன்) என்று அவனுக்கு பெயர் சூட்டினார்கள். அவன் ஆண்ட நாட்டுக்கு "ஷ்கிபரீ" (கழுகுதேசம்) என்ற பெயர் வந்தது. மலைத்தொடர்கள் அடர்ந்த அந்த நாட்டின் மறுபெயர்தான் அல்பேனியா, அல்லது பனிச்சிகர தேசம்.

புதிய நண்பர் மேலும் கூறினார். "உலகத்திற்கு அல்பேனியாவைப் பற்றி ரொம்ப கொஞ்சம்தான் தெரியும். ஆனால் ஒருவருக்குமே இந்த நாட்டைப் பற்றி ஒன்றுமே தெரியாவிட்டாலும் நான் அல்பேனியனாக பிறந்தேன் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறேன்."

நண்பர் சொன்னது சரியல்ல.

பின்னே என்ன? அன்னை தெரசாவைத் தெரியாதவர் உண்டோ? அவர் பிறந்தது அல்பேனிய மண்ணில்தானே? ஸ்கோப்யே (skopie) என்ற அவர் பிறந்த ஊர் கழுகு தேசத்தில் தானே இருக்கிறது. பன்னிரண்டாவது வயதில் ஞான ஒளி பாய்ந்தது. பிறகு கன்னிகாஸ்திரியாக விரதம் பூண்டார். 1928ல் கல்கத்தா வந்து லொரெட்டோ சகோதரிகளுடன் சேர்ந்து பரம தரித்திரர்களுக்கும் தீனர்களுக்கும் தொண்டு செய்யத் தொடங்கினார். இந்திய குடிமகளாக மாறினார். இந்தியா அவருக்குத் தாய் ஆகியது. அவர் இந்தியாவுக்குத் தாய் ஆனார். அவர் நீடித்து செய்த பணிகளை உலகம் போற்றியது. 1979ல் வந்தது நோபல் பரிசு. ஆனால் என்ன பரிதாபம். தம் பிறந்த மண்ணில் புதைந்திருக்கும் அன்னை, சகோதரி, இவர்களுடைய கல்லறைக்குச் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அல்பேனியாவின் அன்றைய கம்யூனிஸ அரசு அங்கீகரிக்கவில்லை. அவருடைய விருப்பம் 1988ல் அரசாங்கம் மாறியபிறகுதான் நிறைவேறியது.

இன்று அன்னையின் பெயரில் எட்டு ஸ்தாபனங்கள் அல்பேனியாவில் சேவை புரிகின்றன. 1992ல் அல்பேனிய அதிபல் மனிதகுலத்திற்கு தன்னலமற்ற தொண்டு செய்பவருக்கு ஒவ்வொரு ஆண்டும் அன்னை தெரசா பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

அன்னை தெரசா அல்பேனியரா? இந்தியரா? என்று கேட்டால் அபத்தமாக இல்லை? அவர் உலகத்திற்கே உரிய புனிதர் என்றால் இதுதான் சரி என்று தலை ஆட்டுகிறோம்.

எங்கோ ஒரு மேற்கு கண்டத்தின் பனிமலை பிரதேசத்தில் பிறந்தார். எப்படியோ கிழக்காசிய விரிகுடாவை முட்டும் ஒரு சூரிய நகரைத் தமதாக்கிக் கொண்டார். அதில் அல்பேனியா என்ன ஆஸ்திரேலியா, அரேபியா, அண்டார்ட்டிகா எல்லாமே அடக்கம்.

அன்பால் அந்நியத்தை வென்ற அமரர்" என்று நெகிழ்ச்சியோடு ஒரு சொட்டு அங்கதத்தோடு - தத்துவம் பேசலாம். எட்டாத பழமப்பா  எஎன்று தோளைக் குலுக்கலாம்.

கிராமமாகச் சிறுத்துவிட்ட உலகத்தில் மின்அஞ்சல்களைப் பார்வையிடுகிறேன். ஷீலாவுக்கு பத்து வயதாகி விட்டது. ஹிந்தி கற்றுக் கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள். நான் ஜெர்மனியில் பிறந்த ஜெர்மன் என்று வாதிடுகிறாள். நான் வகுப்பில் சேர்த்திருக்கிறேன். நப்பாள இசை மூலமாகவாவது என் மகள் தாய்நாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று சிநேகிதி தாரா திரிவேதி பெர்லினிலிருந்து எழுதி இருக்கிறாள். தாரா ஜெர்மன் தத்துவமேதை ஹெகெஸைப் பற்றி நூல்கள் எழுதும் பேராசிரியை.

"நல்லவேளை மிருதங்க வித்வான் ராமமூ¡த்தி பிள்ளையோடு இங்கே வந்து தங்கியுள்ளார். என் மகன் சேகரை அவரிடம் ஒப்படைத்து விட்டேன். மிருதங்கம் வாசிக்க வராவிட்டால் பரவாயில்லை, தமிழ் பண்பு என்ன என்று சிறிதேனும் சேகர் உணர்ந்தால் போதும்" என்கிறாள் நீலா. பாரிஸில் வசிக்கும் நீலா பிரெஞ்சு நாடகக் குழு ஒன்றில் பிரெஞ்சிலேயே பேசி நடிக்கும் கலைஞர்.

அல்பேனிய மொழிபெயர்ப்பாளர் ஸபானா பான்ஸியும் எழுதியிருக்கிறார். "எங்கள் தலைநகர் திரநாவில் தெருநா டீக்கடையில் நாம் சந்தித்து அளவளாவ வேண்டுமானால், நீங்கள் சென்னையிலிருநூது எவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய வேண்டுமோ அதைவிட அதிக தூரம் நானும் பறந்து வர வேண்டியிருக்கும். நான் சிகாகோ வாசி. திரானாவை கனவில்தான் கண்டிருக்கிறேன். என் பெற்றோர் பிறந்ததை அமெரிக்க மண்ணில்தான். என் முன்னோர்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தைத் தாண்டி இந்த கொலம்பஸ் கண்டத்தில் குடிபெயர்ந்து விட்டார்கள். தாய்மொழி கவிதைகளை ஆங்கிலமாக்கினால் என் குழந்தைகளுக்கு அல்பேனியா எட்டாத அந்நியமாக இல்லாமல் தாய்நாடாக உருப்பெறுமோ என்ற ஏக்கம். நானும் இந்தக் கவிதைகளுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு அல்பேனியாவைத் தேடி.

தெருமுச்சோடு மூன்று நண்பர்களுக்கும் ஒரே எண்ண அஞ்சல் அனுப்புகிறேன் நானும்தான்.

( முற்றும் )

<< பக்கம் 2

Copyright © 2005 Tamiloviam.com - Authors