தமிழோவியம்
பேட்டி : சிநேகாவுடன் சிநேகமாய் ஒரு அரட்டை
- என்.டி. ராஜன்

வசூல் ராஜாவில் நடித்ததைத் பற்றி?

வசூல் ராஜா படத்தில் கமலுடன் நடித்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன். அதுவும் சரணின் டைரக்ஷனில்.


ஒரு பேட்டியில் நீங்கள் வயதான ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தீர்களே?

நான் வயதில் சிறியவள். என்னுடைய வயதிற்கு ஏற்ற பாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும். நல்ல நடிகர்களுடன் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை நான் மறுக்க மாட்டேன். ஆனால் அந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைக்குமா என்று நிச்சயம் யோசிப்பேன். யாருடனும் நடிக்க எனக்கு எந்த விதமான தடையும் கிடையாது. ஆனால் கதை எனக்கு நிச்சயம் பிடித்திருக்கவேண்டும்.


முத்தத்தைப் பற்றிய தங்கள் கருத்து என்ன?

முத்தம்? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உண்மையான காதல் இருந்தால் அங்கே முத்தத்திற்கு வேலையே கிடையாது. கண் ஜாடைகளே போதும். என்னுடைய காதலை வெளிப்படுத்த நான் என் கண்களை மட்டுமே நம்புவேன். கட்டிப்பிடித்தல், தழுவுதல் எல்லாம் எனக்கு இரண்டாம்பட்சம் தான்.


வரப்போகும் தங்களுடையப் படங்களைப் பற்றி?

ஒரே ஒரு பாடலைத் தவிர போஸ் படத்தில் எல்லாப் படப்பிடிப்பும் முடிந்தாகிவிட்டது. ஆயுதம் படத்திலும் இதே நிலைதான். ஒரே ஒரு பாட்டு மட்டும் எடுக்கவேண்டும். அது முழுமையாக நிறைவடைந்துவிட்டது. எல்லாப் படங்களும் நன்றாக வந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.


ஆட்டோகிராப் படத்தில் தங்களுடைய பாத்திரப் படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அந்தப் படத்தில் நான் கொஞ்ச நேரம் மட்டுமே வந்திருந்தாலும் அந்தப் படம் எனக்கு மிகவும் நல்ல பெயர் வாங்கித் தந்துள்ளது. சில படங்களில் ரசிகர்களின் விருப்பத்திற்காக நான் கெளரவத் தோற்றங்களில் நடிக்க வேண்டியுள்ளது.


ஆட்டோகிராப் படம் பீஜிங் திரைப்பட விழாவிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதே?

உண்மையாகவே நம்முடையத் தென்னிந்தியப் படங்கள் சீன விழாவிற்காகத் தேர்தெடுக்கப்பட்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அதிலும் நான் நடித்த படம் என்பதால் இரட்டை மகிழ்ச்சி.

Copyright © 2005 Tamiloviam.com - Authors