தமிழோவியம்
பாடல்களால் ஒரு பாலம் : அன்பு வடிவமாக
- அபுல் கலாம் ஆசாத்

தமிழில்,

திரைப்படம்: பல்லாண்டு வாழ்க (1975)
பாடலாசிரியர்: புலமைப்பித்தன்
இசை
: கே.வி.மகாதேவன்
பாடியவர்
: கே.ஜே.ஜேசுதாஸ்
திரையில்
: எம்.ஜி.ஆர்., குழுவினர்

இந்தியில்,

திரைப்படம்: தோ ஆங்கேன் பாரா ஹாத் (1957)
பாடலாசிரியர்: பாரத் வியாஸ்
இசை
: வசந்த் தேசாய்
பாடியவர்
: மன்னாடே (லதா மங்கேஷ்கர் பாடியதும் உண்டு)
திரையில்: வி.சாந்தாராம், குழுவினர்


Shatharamசாந்தாராம், இந்தியத் திரை உலகின் புத்தகத்தில் அழுத்தமாக எழுதப்பட்டிருக்கும் பெயர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் சாந்தாராம் இயக்கிய திரைப்படங்கள் ஆழ்ந்த சிந்தனைகளை ரசிகர்களிடம் உண்டாக்கியிருக்கின்றன. இந்தியாவில் வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட முதல் படமான 'ஜனக் ஜனக் பாயல் பாஜே' (1955) சாந்தாராம் உருவாக்கியது. சாந்தாராமின் திரைச் சேவையைக் கவுரவிக்க இந்திய அரசு தபால்தலை வெளியிட்டிருக்கிறது. தபால்தலையில் பொரிக்கப்பட்டிருக்கும் உருவம், சாந்தாராம் நடித்த ஒரு திரைப்படத்தின் ஒரு கதாபாத்திரம்.

அந்தத் திரைப்படம்தான், தோ ஆங்கேன் பாரா ஹாத் (இரு விழிகள் பன்னிரண்டு கரங்கள்).

இப்படிப்பட்ட புகழை அந்தக் கதாபாத்திரம் அடைந்திருப்பதிலிருந்து பாத்திரத்தின் பிரபலம் வடக்கே எத்தனை என்பதை விளங்கிக்கொள்ளலாம். பெர்லினில் நடைபெற்ற 7வது சர்வதேச திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி விருது பெற்றது இந்தப் படம். சிறந்த வெளிநாட்டுப் படமாக ஹாலிவுட் பத்திரிகையாளர்களால் 1958இல் தேர்வு பெற்றது.

சாந்தாராமுக்கு நிலையான புகழை ஈட்டித்தந்த இப்படம் 1975இல் எம்.ஜி.ஆர். நடித்து 'பல்லாண்டு வாழ்க' என தமிழில் எடுக்கப்பட்டது.

ooOoo

கொடூரமான முறையில் கொலைகளைச் செய்துவிட்டு ஆயுள்தண்டனைக் கைதிகளாக சிறையில் இருக்கும் ஆறு குற்றவாளிகளை சிறை அதிகாரி நல்வழிக்கு அழைத்துச் செல்லும் கதை.

அரசின் அனுமதியுடன் தனியான இடத்தில் ஆறு குற்றவாளிகளும் சிறை அதிகாரியும் அனுப்பிவைக்கப்படுகிறார்கள். தனியாக இருக்கும் வீட்டைச் சுற்றிலும் புதர்கள் மண்டிக்கிடக்கும் வெளி. குற்றவாளிகளின் கைவிலங்குகள் அவிழ்க்கப்பட்டு விடுதலைக் காற்றை அனுபவிக்கிறார்கள். சிறை அதிகாரி தனது கண்டிப்பை கடுமையாக வெளிக்காட்டாமல் அன்பையும் பொறுமையையும் மட்டுமே முன்னிறுத்தி குற்றவாளிகளுக்கு நல்ல தன்மையைப் போதிக்கிறார். துவக்கத்தில் சிறை அதிகாரியின் அணுகுமுறை குற்றவாளிகளுக்குப் பிடிக்காமற் போகின்றது. தப்பிப்பதற்கு முயற்சிகள் செய்கின்றார்கள், முடியவில்லை. காரணம், சிறை அதிகாரியின் சாந்தமான பார்வைக்கு அவர்கள் தங்களையும் அறியாமல் கீழ்ப்படியத் துவங்கினார்கள்.

குற்றவாளிகளை மனிதர்களாக நடத்துவதில் அதிகாரியின் முதல் வெற்றி துவங்குகிறது. அவரது சாந்தமான பார்வை கொஞ்சம் கொஞ்சமாக அனைவரையும் ஆட்கொள்கிறது, அன்பு காட்டுகிறது, அடக்கி வைக்கிறது. அதிகாரியக் கொலை செய்யவும் துணியும் சமயத்திலும் அவர் கண்களைப் பார்த்தவுடன் கொலைவெறி தணிந்து சாந்தமாகின்றார்கள். தப்பிச்செல்ல முயற்சி செய்கின்றார்கள், ஊரின் எல்லையிலிருக்கும் சிலையைப் பார்த்ததும் அதிகாரியின் கண்கள் நினைவுக்கு வர தப்பிக்கும் எண்ணத்தைக் கைவிடுகின்றார்கள்.

கடைசியில் அவர்கள் உழைப்பால் பொட்டல்காடாகக் கிடந்த நிலம் சீரமைக்கப்பட்டு விளைச்சல் நிலமாகின்றது. இடையில் ஏற்படும் பல சிக்கல்களை அதிகாரியும் குற்றவாளிகளும் சந்தித்து கடைசியில் அன்பு வழியே என்றைக்கும் வெல்லும் என்னும் தத்துவத்தை நிரூபிக்கிறார்கள்.

குற்றவாளிகளிகளின் மனதில் பக்தியை வளர்க்கவேண்டுமென்று அதிகாரி ஒரு பாடலைப் பாடுகிறார். இந்தியில் கடவுளை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பாடல் தமிழில் அன்பையும் தமிழில் அன்பிலாரெல்லாம் தமக்குறியர் குறளையும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் குறளையும் முன்னிறுத்தித் துவங்கும். இந்தியிலும் தமிழிலும் கூட்டாகப் பாடுவதற்கு ஏற்றபடி இசையமைக்கப்பட்ட பாடல். ஜேசுதாஸ் பாடிய சிறந்த திரைப் பாடல்களின் பட்டியலில் அவசியம் இடம்பெறக்கூடிய பாடல்.

கே.வி.மகாதேவனின் இசைக்கு தமிழ்த்திரையில் தனி இடம் இருக்கின்றது. .பி.நாகராஜனுடன் இணைந்து அவர் பணியாற்றிய பாடல்கள் காலத்தை வென்று நிலைத்திருக்கின்றன. தேவருக்காக அவர் இசையமைத்த எம்.ஜி.ஆர். பாடல்கள் அனைத்தும் வெற்றிப் பாடல்கள். எம்.ஜி.ஆர். - கே.வி.மகாதேவன் கூட்டணியில் அமைந்த இதுவும் எழுபதுகளில் மிகவும் பிரபலமாக இருந்த பாடல். இப்பொழுதும் அமைதியான பொழுதுகளில் கேட்பதற்கேற்ற பாடலாக இருக்கிறது.

ooOoo

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே
தேவனென்று போற்றுவோம்
அன்னை
இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்

(ஒன்றே குலமென்று)

கடவுளிலே கருணைதன்னைக் காணலாம் - அந்தக்
கருணையிலே கடவுளையும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு
ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

(ஒன்றே குலமென்று)

பாவம் என்ற கல்லறைக்கு பல வழி
என்றும் தருமதேவன் கோவிலுக்கு ஒருவழி
இந்த
வழியொன்றுதான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாது நடைபோடுவோம்

(ஒன்றே குலமென்று)

இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொளகை தீபமேற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

(ஒன்றே குலமென்று)

ooOoo

இந்தியில் இருக்கும் வரிகள், மனிதன் கடவுளிடம் சரணாகதி அடைந்து நீயன்றி யாருமில்லை என்று பாடுவதாகப் பொருள் கொண்டிருக்கிறது.

படா கம்சோர்ஹை ஆத்மி
அபி லாக்கோன்ஹை இஸ்மே கமி
மனிதன் பலவீன உருவானவன்
இன்னும் ஒருகோடிக் குறையுள்ளவன்
பர் து ஜோ கடா ஹை தயாலு படா
தேரி கிருபாஸே தர்தி தமீ
இறை நீ எம் துணை வழிகாட்டும் ஒளி
இந்த மண்மீது அருள் காட்டினாய்
!

இப்படித் தொடரும் சரணங்களின் முன்னே பல்லவியாக ஒலிக்கும் 'யே மாலிக் தேரே பந்தே ஹம்' வரிகள் மன்னாடேயின் குரலிலும் லதா மங்கேஷ்கரின் குரலில் மனதை ஈர்க்கும்.

யே மாலிக் தேரே பந்தே ஹம்
ஐஸே ஹோ ஹமாரே கரம்
நேக்கிபர் சலேன்
அவுர் படிஸே டலேன்
தாக்கி ஹஸ்தே ஹுவே நிக்லே தம்
இறையோனே உன்னிடம் ஏகினேன்
நல்வழி தேடி அருள் வேண்டினேன்
நன்மை நினைந்தே
தினம்
உண்மை உணர்ந்தே தினம்
என்றும் நேர்மைக்குப் உனை நாடினேன்
!

(சரியான மொழிமாற்றமன்று. மெட்டிற்குப் பொருந்தும்படி தமிழில் எழுதியது)

 

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors