தமிழோவியம்
தராசு : கேலிக்கூத்தாகும் நீதிமன்ற நடவடிக்கைகள்
- மீனா

Uma Bharathiசில மாதங்களாக ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே நடைபெறும் கைது விளையாட்டுகளில் பெருமளவிற்கு கேலிக்கூத்தாகியிருப்பது நீதிமன்ற நடவடிக்கைகள் தான். ஜார்கண்டில் 29 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ சில காரணங்களுக்குக்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சிபுசோரனை ஆடி அசைந்து இப்போதுதான் கைது செய்துள்ளது ஜார்கண்ட் கோர்ட். அதே கதைதான் உமாபாரதி விவகாரத்திலும். 10 ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போதுதான் அவரைக் கைது செய்ய கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இதில் உமா பாரதி மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக கர்நாடக அரசு தற்போது அடித்துள்ள பல்டி ரசிக்கத்தக்கது என்றாலும் சட்டத்தை செயலாற்றுவதில் ஏன் இந்த மெத்தனம்?

இவர்கள் ஒவ்வொருவருக்கும் பல முறை பிடிவாரண்ட் அனுப்பப்பட்டும் அதை அவர்கள் லட்சியம் செய்யவில்லை. அதனால் தான் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கோர்ட் தரப்பில் கூறப்பட்டதை அப்படியே ஏற்க இயலவில்லை. இந்திய ஜனநாயகத்தின் உச்சகட்ட அதிகாரத்தை கையில் வைத்திருப்பது நீதித் துறை. அப்படிப்பட்ட துறையிலிருந்து வரும் ஆணைகளை ஒருவர் மதிக்கவில்லை என்றால் அவருக்கு உடனடியாக அதற்கும் சேர்த்து தண்டனை வழங்கப்படவேண்டுமே தவிர, அவர் மீதான நடவடிக்கைகளை இப்படி வருஷக்கணக்கில் ஒத்திப்போடுவது எந்த விதத்திலும் சரியாகாது. இத்தகைய மந்த கதியில் நீதித்துறை செயல்பட்டு வந்தால் குஜராத் கலவரங்களுக்காக முதல்வர் மோடி மீது வண்டி வண்டியாய் குவிந்திருக்கும் வழக்குகளை விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பு சொல்வதற்கு எத்தனை ஆண்டுகளாகுமோ?

குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றவேண்டும். அத்தகைய அதிகாரத்தை நீதித்துறைக்கு அரசு வழங்க வேண்டும். உதாரணத்திற்கு - தற்போது தமிழக அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் இடையே நடந்து வரும் காவிரிப்ப்பிரச்சனையில் உச்சநீதி மன்றத் தீர்பையே மதிக்காமல் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் இன்று வரையில் இதற்காக யாரும் அந்த அரசைக் கண்டிக்கவில்லை. ஆக சர்வ வல்லமையுள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கே இதுதான் மதிப்பு என்பது வேதனைக்குரிய விஷயம்.

காலதாமதமாய் வழங்கப்படும் சரியான தீர்ப்பு கூட மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. சுதந்திரம் பெற்ற காலத்தில் எழுதப்பட்ட பல சட்டங்கள் தற்போதைய நடைமுறைக்கு சற்றும் ஒத்துவராதவை. இவைகளை எல்லாம் நீதித்துறை தாமதமின்றி புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கிற்கும், அதன் தன்மைக்கேற்ப இத்தனை நாட்களில் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்ற சட்டம் இயற்றப்படவேண்டும். இவ்வாறு பல புதுமைகள் செய்தால்தான் நீதிமன்ற நடவடிக்கைகள் கேலிக்கூத்தாவதைத் தடுக்கமுடியும். நீதித்துறைக்கு முன்பு இருந்துவந்த மரியாதையும் பெருமையும் மீண்டும் கிடைக்கும். ஒரு குற்றவாளி தான் என்ன குற்றம் செய்தோம் என்பதை மறந்துபோவதற்குள் (குறுகிய காலத்தில்) அவனுக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும். இல்லையென்றால் குற்றவாளிகள் அனைவரும் தியாகிகளாகி விடுவார்கள் - கோர்ட்டு காலதாமத உபயத்தில்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors