தமிழோவியம்
கோடம்பாக்கம் : கஜேந்திரா பட விவகாரம் முடிவடைந்தது
- என்.டி. ராஜன்

Gajendraகஜேந்திரா படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகும் என்றும் அப்படத்திற்கு பா.ம.க.வினரால் ஒரு பிரச்சனையும் வராது என்று படத்தின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை செய்தி வெளியிட்டுள்ளார். பத்திரிக்கையாளர்களிடையே பேசிய துரை, தான் பா.ம.க தலைவர் ராமதாசை நேரில் சந்தித்ததாகத் தெரிவித்தார். அச்சந்திப்பில் கஜேந்திராவிற்காக தான் செய்துள்ள செலவுகளைக் குறிப்பிட்ட துரை, பா.ம.க.வினரின் மிரட்டலால் தன்னுடைய பட வினியோகம் பெருமளவு பாதிக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த ராமதாஸ், தன்னுடைய கட்சியினர் மூலமாக கஜேந்திராவிற்கு இனி எந்தத் தொந்தரவும் ஏற்படாது என்று உறுதியளித்துள்ளதாக துரை கூறினார். இதன் மூலமாக பட ஹீரோ விஜயகாந்திற்கும் பா.ம.க.வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும், படம் வெகு விரைவில் திரைக்கு வரும் என்றும் துரை நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் நுழைவதைப் பற்றிய விஜயகாந்த் கருத்து

மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்த் - பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சற்று சுமாராகத்தான் முடிவடைந்தது. தன்னுடைய அரசியல் நிலைப்பாடைப் பற்றி விஜயகாந்த் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று அறிவிக்காததே இதற்குக் காரணம். வேகவேகமாய் அரசியல் கட்சியை ஆரம்பித்துவிட்டு, பிறகு தான் தோற்றுப்போவதை அவர்  விரும்பவில்லை என்பதை இக்கூட்டம் வெகு தெளிவாக உணர்த்தியது. இதைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், " நான் தவறு செய்துவிட்டு பிறகு அதற்காக வருந்தத் தயாராக இல்லை. ஒரு வேளை நான் ஏதாவது தவறான முடிவை எடுத்துவிட்டால் பிறகு ஒருவரும் என்னை மதிக்கமாட்டார்கள். நான் இருக்கிறேனா? இல்லையா என்பதைக் கவனிக்க கூட யாரும் இருக்க மாட்டார்கள். பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் கூட என்னைக் கண்டுகொள்ளவே மாட்டீர்கள்!! " என்று குறிப்பிட்டார். அப்போது " நீங்கள் ரகசியமாக கட்சி ஆரம்பித்துவிட்டீர்களா? " என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்த் தான் கட்சியை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றும், கட்சியைத் தொடங்கும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் தான் ஆரம்பிக்கப்போகும் புதிய கட்சிக்கு பெயர் வைத்துவிட்ட வதந்தியைக் கடுமையாக மறுத்தார்.

எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட தான் சமய சந்தர்பங்களையும், சரியான நேரத்தையும் மட்டுமே எதிர்பார்த்து காத்திருப்பதாக குறிப்பிட்ட விஜயகாந்த், ஒரு முடிவை எடுத்துவிட்டு பிறகு பின்வாங்கும் ஆள் தானில்லை என்று வெடித்தார். " நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வருவீர்களா? " என்ற கேள்விக்கு, " இதற்கான பதிலை நான் என் ரசிகர்களிடமே விட்டுவிடுகிறேன். அடுத்த வருடம் நடக்கப்போகும் ரசிகர்மன்ற மாநாட்டில் இதைப் பற்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். " என்று கூறினார்.

வேறு கட்சியில் சென்று தான் இணைவதற்கான சாத்தியங்களே இல்லை என்ற விஜயகாந்த், மக்களிடையே தனது ரசிகர்மன்ற கொடி பெற்றுள்ள மதிப்பையும் சொல்லத் தவறவில்லை.

தனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் விமர்சித்ததைக் குறித்து கேட்ட கேள்விக்கு, தான் தன்னுடைய 12வது வயதிலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தான் பங்குபெற்றதைக் குறித்து பேசினார். மேலும் சினிமாவைப் பற்றி இவ்வளவு கிண்டல் செய்யும் ராமதாஸே 3 திரைப்படங்களில் நடித்துள்ள தகவலையும் வெளியிட்டார். சினிமாத் துறையில் உள்ள எவ்வளவோ கலைஞர்கள் உலக அளவில் பெரிய பதவிகளில் இருப்பதைக் குறிப்பிட்ட விஜயகாந்த், காவிரி பிரச்சனையில் தமிழக திரைப்படக் கலைஞர்கள் போராட்டம் நடத்தியதைப் பற்றியும் குறிப்பிட்டார். பா.ம.கவிற்கும் தனது ரசிகர்களுக்கும் நடந்த பிரச்சனை, முடிந்துபோன விஷயம் என்ற விஜயகாந்த், மேற்கொண்டு அதைப் பற்றி எதுவும் கூற மறுத்துவிட்டார்.


விஜயகாந்த் கட்சி அடுத்த தேர்தலில் போட்டியிடுகிறது

விஜயகாந்தும் அவரது கட்சித் தொண்டர்களும் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று இயக்குனர் லியாகத் அலி கான் தர்மபுரியில் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். 40,000 க்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்களைக் கொண்ட விஜயகாந்த்தும் அவருடைய ரசிகர்களும் வரும் தேர்தலில் போட்டியிட எல்லாவிதமான ஆயத்தங்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அவருடையத் தலைமையில் நல்லாட்சி அமைய அனைத்துச் சாத்தியங்களும் இருப்பதாக தானும் ரசிகர்களும், பொதுமக்களும் நம்புவதாக லியாகத் அலிகான் தெரிவித்தார். புதிய கட்சியின் பெயர் விரைவிலேயே வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors