தமிழோவியம்
தராசு : கிலோ அரிசி 1 ரூபாய்
- மீனா

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் விற்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம் கிட்டத்தட்ட 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் சமீப காலமாக அதிகரித்து வரும் ரேஷன் கடை ஊழியர்கள் முறைகேட்டை தடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. ஏழைமக்களுக்கு விநியோகிக்க கூடிய ரேஷன் அரிசியை கள்ள மார்க்கெட்டில் விற்கும் கும்பலின் செயல்பாட்டை அமலாக்க பிரிவு கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தர விட்டுள்ளது. முறைகேட்டில் ரேஷன் கடை ஊழியர்களோ, சமூக விரோதிகளோ ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தண்டனை பெற வழிவகை செய்யும் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யவும் உணவு கடத்தல்பிரிவு போலீசாருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவிப்புகள் எல்லாம் சரி - ஆனால் ஏற்கனவே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதன் தரம் குறித்தும், அவை வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவது குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் இத்தகைய கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பெரும்பாலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தான் என்ற வலுவான குற்றச்சாட்டும் பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் மத்தியில் உள்ளது.

தற்போது அரசு அறிவித்துள்ள இந்தச் சலுகையினால் ரேஷன் அரிசி கடத்தல் இன்னும் அதிகமாகும் என்பதில் ஐயம் இல்லை. அரிசி கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பெல்லாம் ஆளும் கட்சியினரிடம் பலிக்காது என்பது குழந்தைக்குக் கூடத் தெரிந்திருக்கும் நிலையில் அரசு அரிசிக்கடத்தைலை எப்படித் தடுக்கப்போகிறது என்பது உண்மையிலேயே ஒரு சவாலான கேள்வி. மேலும் தற்போது வழங்கப்படும் அரிசியின் தரத்தை விட இனி வழங்கப்படும் அரிசியின் தரம் உயர்ந்ததாக இருக்கும் என உணவு அமைச்சர் எ.வ.வேலு கூறியிருப்பதில் இருந்து ஏற்கனவே தரம் குறைந்த அரிசிதான் வழங்கப்பட்டு வருகிறது என்கிற குற்றச்சாட்டு வலுப்பெறுகிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக இதுவரையில் கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகியிருக்கும் சூழ்நிலையில் வெகு சீக்கிரத்தில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு தான் இந்த திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது நிச்சயம்.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு பொதுமக்களை மட்டுமன்றி தொழிலதிபர்களையும் பெரும் சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது. பெருகி வரும் விலைவாசி உயர்வு, உரத்தட்டுப்பாடு, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த அரசு எவ்வித உடனடித் தீர்வையும் காணமுடியாத நிலையில் உள்ளது. பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக மக்களை திசை திருப்புவதற்காகவே அரசு 1 ரூபாய் அரிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்ற எதிர்கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை.

குறைந்த தரம், கடத்தல் போன்ற விவகாரங்களை மீறி ஏழை மக்களுக்கு உண்மையிலே பயன்படும் வகையில் செயல்பட்டால்தான் இந்த 1 ரூபாய் அரிசித் திட்டத்தை உளமாற வரவேற்க முடியுமே தவிர வெறும் அறிவிப்பால் மட்டும் மக்கள் மனம் குளிர்ந்து விடாது என்பதை அரசும் முதல்வரும் உணர்வாகளா? அல்லது 2 ஏக்கர் நிலம் வழங்குவதைத் போல இந்தத் திட்டமும் வெறும் ஏட்டளவில் நின்றுவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors