தமிழோவியம்
தராசு : மத்திய அரசின் தீவிரவாத கொள்கை
- மீனா

ஆகஸ்ட் 25 மாலை ஹைதராபாதில் நடந்த இரு வேறு குண்டுவெடிப்பில் நாற்பது உயிர்களுக்கு மேல் பலியாகி இருக்கின்றன.  மூன்று மாதங்களுக்கு முன்னால் ஹைதராபாதின் மெக்கா மசூதியில் வெடித்த குண்டு வெடிப்பில் தொழுகைக்குப் போயிருந்த பனிரெண்டு பேர் பரிதாபமாக பலியானார்கள். தற்போது பூங்காவிலும் உணவு விடுதியிலும்.

உலகம் முழுவதும் தற்போது வெகுவேகமாக தீவிரவாதம் பரவி வருகிறது. இந்நிலையில் தங்கள் நாட்டில் உள்ள தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவதும் ஒவ்வொரு அரசும் செய்ய வேண்டிய இன்றியமையாத விஷயம். அந்த விஷயத்தில் நமது அரசு தனது கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

பயங்கரவாத பிரச்னையைக் கையாளும்போது "சிறுபான்மை, பெரும்பான்மை அரசியலை' அரசு மறந்துவிட வேண்டும். எந்த இனத்தை - மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் பயங்கரவாதி பயங்கரவாதிதான். தீவிரவாதிகளைப் பொருத்தவரை அவர்களால் பாதிக்கப்படுகிறவர்கள் யார் என்று பார்ப்பது கிடையாது. அதேபோல அரசும் அவர்களுக்கு ஜாதி, மத, மொழி, இன முத்திரைகளைக் குத்த வேண்டிய அவசியம் கிடையாது.

ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தங்கள் சுயலாபத்திற்காக முஸ்லீம் தீவிரவாதிகள் மீடு கடுமையான நடவடிக்கைள் எதுவும் எடுக்காமல் சிறுபான்மை பிரிவினரை திருப்திப்படுத்த முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. தீவிரவாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்று தவறாக இவர்கள்  நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. உதாரணம் நாடாளுமன்ற வளாகத்தை தாக்கிய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி முகமது அ·ப்சலை இன்று வரை தூக்கில் போடாமல் இருக்கிறது மத்திய அரசு.

முறையான கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவது மற்றும் பிடிபடும் தீவிரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவது போன்றவற்றின் மூலம்தான் தீவிரவாதத்தை நாட்டில் ஓரளவிற்காவது கட்டுக்குள் கொண்டுவர முடியுமே தவிர நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் பாகிஸ்தான் மீதும் வங்கதேசத்தின் மீதும் பழிபோடுவது நாட்டில் பெருகிவரும் தீவிரவாத பிரச்சனைக்கு சரியான தீர்வாகாது. இனியாவது மத்திய அரசு தீவிரவாதிகளுக்கு எதிரான தன் பிடியை இறுக்குமா ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors