தமிழோவியம்
தராசு : முன்னேற விடுங்கள்
- மீனா

Saniya Mirzaடென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விளையாட்டின் போது அணியும் ஸ்கர்ட், டிஷர்ட் முதலிய ஆடைகளைக் குறித்து சில முஸ்லீம் அமைப்புகள் "படு கவர்சியான ஆடைகளை அணிந்து முஸ்லீம் மதத்தையும், மதப்பண்பாடுகளையும் சானியா அவமதிக்கிறார்" என்று கண்டனம் தெரிவித்திருக்கும் வேளையில் அகில இந்திய ஷியா முஸ்லீம் சட்ட வாரியம் "இப்பிரச்சனை தேவையில்லாத ஒன்று" என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் விளையாட்டுத்துறையில் ஆண்கள் மட்டுமே அழுத்தமாக தடம் பதித்து வரும் இக்காலத்தில் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கால் இறுதிக்கு முன் சுற்றுவரை முன்னேறிய முதல் இந்தியப் பெண் வீராங்கனை - பெண்கள் தரவரிசையில் 42வது இடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைகளைப் படைத்துள்ள சானியாவை பாராட்டி ஊக்கப்படுத்துவதுதான் நமது கடமையே தவிர விளையாடும் போது அவர் இப்படித்தான் ஆடை அணியவேண்டும் என்றெல்லாம் கூறுவது தேவையற்றது.

நம் நாட்டில் நடிப்புத் துறையில் ஈடுபட்டுள்ள பல முஸ்லீம் நடிகைகளிடம் போய் இத்தகைய முஸ்லீம் அமைப்புகள் "நீங்கள் கவர்சியாக உடை அணியக்கூடாது... இப்படி நடிக்கக்கூடாது.. " என்றெல்லாம் பிரசங்கம் செய்ய ஆரம்பிப்பார்களா? நடிகைகளுக்கு நடிப்பு எவ்வாறு ஒரு தொழிலோ அதைப் போலவே சானியாவிற்கு டென்னிஸ் ஆடுவது ஒரு தொழில். தொழில் ரீதியாக அவர் அணியும் உடைகளுக்கு, தனிமனித வாழ்வில் அவர் தவறு செய்வதைப் போல இத்தகைய அமைப்புகள் பேசியிருப்பது தேவையே இல்லாத ஒன்றாகும்.

அரசியல், பணபலம் மற்றும் ஏகப்பட்ட போட்டிகள் என்று நம் நாட்டில் விளையாட்டுத்துறையைப் பொறுத்தமட்டில் பலவிதமான நெருக்கடிகள் ஒவ்வொரு வீரருக்கும் - வீராங்கனைகளுக்கும் இருந்து வருகின்றன. இவை எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடி தான் சானியா தனது இளம் வயதில் டென்னிஸ் விளையாட்டரங்கில் ஒரு முக்கிய இடத்திற்கு வந்துள்ளார். அவர் விளையாட்டு உலகில் சாதிக்க இன்னமும் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அப்படிப்பட்ட நிலையில் இந்த இளம் பெண்ணை மதரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாக்குவது தேவையா? விதண்டாவாதம் செய்யும் முஸ்லீம் அமைப்புகளே.. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்கள் தவறு உங்களுக்கே புரியும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors