தமிழோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : Bipolar depression - Suicide
- பத்மா அர்விந்த்

அதீத சோகத்தின் எல்லைகோட்டை தாண்டும் போது சிலருக்கு தற்கொலை உணர்ச்சி மேலோங்குகிறது. ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்ட இருதுருவ மன அழுத்தம் தற்கொலை எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களே.மனதில் தோன்றும் கவலைகளை கேட்காமல் அலட்சியப்படுத்தும் கணவன், குழந்தை பிறந்தபின் தோன்றும் கவலைகளை பகிர்ந்து கொண்டால் மற்றவர்கள் நம்மை கேவலமாக நினைப்பார்களோ என்ற என்ணம், மற்றும் தொடரும் வழக்கமான வேலைகள் இது போல மன நிலை பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலோர் வெளியே வந்து வழக்கமான குதூகல நிலைக்கு வந்தாலும், சிலர் இருதுருவ மன அ  ழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். ஒரு மாதத்திற்கு நான்கு முறை எதற்கெடுத்தாலும் சினம் கொள்வது அல்லது சோகத்தின் சின்னமாக இருப்பது அல்லது அமைதியாய் இருப்பது  என்று வழக்கப்படுத்தி கொண்டால் கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது அவசியமாகும்.

இதேபோல திருமணம் போது ஆண் பெண் இருவருக்கும் வரும் சில பய உணர்ச்சி, குழந்தை பிறந்தபின் பெற்றோருக்கு வரும் ஒரு பாதுகாப்பு இல்லாத உணர்ச்சி, குழந்தைகள் ஊர் விட்டு ஊர்மாறி பள்ளியில் சேரும் போது வரும் உணர்ச்சிகள் இவை ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட அளவு பாதிப்பை தரும். இந்த மன அழுத்தங்கள் கண்டு கொள்ளாமல் விடப்படும் போது தற்கொலையில் கூட முடியும்.

தற்கொலை ஒன்று திடீரென வரும் உணர்ச்சியில் முடிவெடுப்பது, இன்னொன்று படிப்படியாக திட்டம் போட பட்டு முடிவெடுப்பது. தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையில் இருக்கிறார்களா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

- அதீத சோகம் யாருக்கும் தான் பயனில்லாமல் இருப்பதாக உணர்வது
- தானே ஒரு சுமையாகி போனதாக பேசுவதும் தன் செயல்பாட்டை குறைத்து கொள்வதும்
- அதிக காப்பி போன்ற பானங்கள் குடித்து தன் பசியை அடக்க முயல்வது
- வேண்டும் என்றே ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்களில் ஈடுபடுவது
- குழந்தைகளை விட்டு பிரியாமல் இருக்க முயற்சி செய்வது
- தன்னுடைய உடமைகளை பகிர்ந்தளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

குழந்தைகள் மற்றும் பதின்ம வயதில் உள்ளவர்களுக்கு இருவேறு துருவ மன  அழுத்தம் வந்தால் எளிதில் கண்டுபிடிப்பது கடினம். நிறைய குழந்தைகள் இந்தியாவிலிருந்து பெற்றோர் புலம் பெயர்ந்த காரணத்தால் இங்கு தங்களுக்கு 10இ லிருந்து 15 வயதுக்குள் வரும் போது புதிதாக நண்பர்கள் தேட முடியாமலும் ஆங்கில உச்சரிப்பால் கேலிக்கு உள்ளாவதும் இப்படியான மன அழுத்தங்களை ஏற்படுத்துகிறது.

நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் இது போன்ற பய உணர்ச்சிகளை குழந்ததகளிடம் பேசுவதும் விவரிப்பதும் இல்லை. பெரும்பாலும் நாம் நம் குழந்தைகளின் உணர்ச்சிகளை அலட்சியப்படுத்துகிறோம். We take our children for granted.

குழந்தைகள் அதிக உற்சாகம் காட்டுவதும் திடிரென் தன் உறவினர்கலுடன் பேசாமல் ஒதுங்கி இருப்பதும் எரிச்சல் அடைவதும், இத்தனை நாள் அனுபவித்த சிலவற்றை  வெறுத்து ஒதுக்குவதும் கவனிக்க பட வேண்டியவை.  ஆனால் அதே சமயம் புதிதாக புலம் பெயர்ந்த பெற்றோருக்கும் பல வித கவலைகல் இருப்பதால் தங்கள் பிள்ளைகளின் போக்கில் ஏற்படும் மாற்றங்களை கண்டு கொள்வதில்லை.

இருதுருவ மன அழுத்தம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று ஆராய்ந்ததில் தனி ஒரு காரணம் இதற்கு காரணம் இல்லை என்றும், பலவித காரணங்களின் கூட்டு விளைவே என்றும் முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்தனர்.

இது குடும்பத்தில் பரம்பரையாக வருவதால், மரபணுக்களின்  மாற்றங்கள் காரணமாக இருக்க முடியும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதிலும் தனி ஒரு ஜீன் காரணமாக இருக்க முடியாது. பல வித புரதங்கள் நிலல மாறுவதால் பல வித ஜீன்களும் இதில் மாற்றம் கண்டிருக்க வேண்டும்.

மூளையை படமெடுத்து பார்த்ததில் சில பகுதிகளில் செரோடோனின் போன்ற வேதிப்பொருட்கள் அளவில் அதிகரித்திருப்பதும் இத்தகைய மன நிலைக்கு காரணமாக இருக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இருவேறு துருவ மன அழுத்தத்தை எப்படி குணப்படுத்த முடியும்?

நீண்டகாலத்திற்கு ஒரே அ  ள வில் மருந்து கொடுத்து இரத்தத்தில் அதன் அளாவு சீராக இருக்க செய்தால் மன நிலையை சீராக வைத்திருக்க முடியும். நிறைய மருந்துகள் வந்திருந்தாலும் மருத்துவரின் நேரடி கண்காணிப்பும் மாதம் ஒரு முறை அவசியம். மருந்துகள் மட்டும் இல்லாமல் மனம் விட்டு பேசுவதும் திடீரென்று மாற்றங்கள் ஏற்படுத்தாமல் இருப்பதும் முக்கியம்.

மனத்தை சீர்படுத்தும் சில முறைகள்:  தியானம் அல்லது யோகா போன்றவை கற்று கொண்டால் சீரான மனநிலை வர சாத்தியங்கள் உண்டு. உதாரணமாக அதிக  சோகமோ அல்லது சினமோ அவ்ரும் போது கண் மூடி படுத்து கொண்டு உள்ளங்கைகளை ஒன்றை  வயிற்றில் தொப்புளுக்கு மேலும் மற்றொன்றை கீழும் வைத்து கொள்ளவும். கண்களை மூடி ஒவ்வொரு முறையும்  சுவாசத்தை உள்ளிழுக்கும் போது இரட்டைப்படை எண்ணில் இரண்டிலிருந்து 50 வரையும், சுவாசத்தை வெளியிடும் போது 50 இலிருந்து ஒன்றுவரை ஒற்றை படை எண்ணாக மேலிருந்து கீழும் சொல்லி வர வேண்டும். இவ்வாறு செய்யும் போது கவனம்அனைத்தும் எண்களை சரியாக சொல்வதில் இருப்பதால் மூச்சும் சீராகி மனமும் அமைதி படும். பல மனநிலை கொதிப்படைந்த நிலையில் உள்ள சிலரை பயிற்சி செய்ய சொல்லி அதன் விளைவுகளை பார்த்திருக்கிறேன்.  இதையே இப்போது தியானம் செய்யும் போது ஒரு சீராக ஒரே சொல்லை திரும்ப திரும்ப சொலவதும், (ஓம்) அல்லது கற்பனையில் விடுமுறைக்கு செல்வதும் பலனளிக்க கூடும்.

மனம் விட்டு பேசுவதும் காது கொடுத்து கேட்பதும் பல வித குறைகளை தடுக்க முடியும். சூழ்நிலை காலத்தின் தேவை, சமுதாய மாற்றாங்கள் இவை கூட நம்மிடையே அழுத்ததை அதிகரிக்கும். இந்நிலையில் நம்முடன் வாழ்பவர்களின் தேவைகளை அறிய சில மணிநேரம் செல்வழிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors