தமிழோவியம்
திரைவிமர்சனம் : செல்வம்
- மீனா

Selvam Tamil Movie, Nandha Umaஒரு காலத்தில் யாருமே சொல்லாத காதல் கோட்டை கட்டிய அகத்தியன் என்று எல்லோரும் ஏற்கனவே சொல்லிவிட்ட அம்னிஷியா நோயாளி - முக்கோண காதல் கதையைத் தனக்கேயுறிய பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார்.

ஒரு வேலை விஷயமாக சென்னை வரும் நந்தா விபத்துக்குள்ளாகி தான் யார் என்பதையே மறந்துவிடுகிறார். இவருக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர் உமா ஒரு கட்டத்தில் நந்தாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். கள்ளம் கபடமில்லாத உமாவின் காதலை முழுமனதாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறும் நந்தா தன்னை மறந்து ஒரு ஊருக்குச் செல்கிறார். பார்த்தால் அங்கே தான் அவரது பிளாஷ்பேக் ஆரம்பிக்கிறது. நந்தாவின் மேல் உயிரையே வைத்திருக்கும் வாணி மற்றும் உமாவிற்குள் யார் நந்தாவைத் திருமணம் செய்துகொள்வது என்ற போட்டி ஆரம்பிக்கிறது. யார் ஜெயித்தார்கள் என்பதுதான் முடிவு..

ஆரம்ப காலங்களில் நந்தாவின் நடிப்பு பெருமளவில் பேசப்படவில்லை என்றாலும் இப்படத்திற்குப் பின் அவர் நிச்சயம் ஒரு சுற்று வருவார் என்று நம்ப வைக்கும் அளவிற்கு அவ்வளவு தத்ரூபபமான நடிப்பு. நகைச்சுவையும் இவரது நடிப்பில் இசைந்து இழையோடுவது பெரிய பிளஸ். அருமையான, பாந்தமான குடும்பபெண் முக அமைப்பு உமாவிற்கு. கூடவே தனக்கு நன்றாக நடிக்கவும் வரும் என்பதையும்  பல படங்களில் நிரூபித்து வருகிறார். உமாவின் நடிப்புத் திறமையை சரியாக பயன்படுத்திக்கொண்ட இயக்குனர்களில் ஒருவராகிறார் அகத்தியன். நந்தாவின் முறைப்பெண்ணாக வரும் வாணி அருமையான தேர்வு. தன் துடுக்கான நடிப்பால் தனக்கும் நடிக்க வரும் என்பதை நிரூபிக்க முயன்றிருக்கிறார்.

Selvam எத்தனையோ படங்களில் வில்லனாக - குணசித்திரமாக வந்து தலையைக் காட்டும் அலெக்ஸை கொடுமைக்கார அப்பாவாக மாற்றிய புண்ணியம் இயக்குனரைச் சேரும். தன் மகளுடன் இயல்பாக பழகும் நந்தாவைக் கேள்விகளால் இவர் வாட்டும் இடம்.. இப்படிப்பட்ட அப்பாக்கள் இன்று மட்டுமல்ல என்றைக்குமே இருப்பார்கள் என்ற யதார்தத்தைப் புரியவைக்கிறது.

தேவாவின் இசை ஓக்கே ரகம். இயக்குனராக மட்டுமல்லாது கவிஞராகவும் தன்னை நிலைநாட்டிக்கொள்ளும் அகத்தியனின் பாடல் வரிகள் சூப்பர். இன்றைய மசாலா தைரைப்பட உலகில் அப்படிப்பட்ட மசாலா எதுவுமே இல்லாமல் என்னால் படம் தரமுடியும் என்று அகத்தியன் பெருமைப்பட்டுக் கொண்டாலும் படத்தின் சில காட்சி அமைப்புகள் பயங்கரமாக நெருடுகின்றன. ஆனாலும் செல்வம் தரமாகவே இருக்கிறது என்பதில் மகிழலாம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors