தமிழோவியம்
மேட்ச் பிக்சிங் : இந்த வார கிரிக்கெட் அலசல்
- பத்ரி சேஷாத்ரி

பிரச்னை என்பது இந்திய கிரிக்கெட் கூடப் பிறந்தது போல. சென்ற வார இறுதியில் பிசிசிஐ - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் யாருக்கு தொலைக்காட்சி உரிமத்தைத் தரவேண்டும் என்பதை முடிவு செய்தனர். ஜீ டிவி நிறுவனம் இந்த உரிமத்தை US$308 மில்லியன் கொடுத்துப் பெற்றுக்கொண்டது. ஆனால், இந்த முடிவு தவறானது என்று இ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மும்பை உயர் நீதிமன்றம் சென்றனர்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் பிசிசிஐ மீது இ.எஸ்.பி.என் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர். அதில் ஏன் இந்திய அரசு, பிசிசிஐ-இடம் இருக்கும் இந்திய கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் தனியுரிமையை  நீக்கக்கூடாது என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தனர். இதெல்லாம் தேவையில்லை என்பது என் கருத்து. இன்று மும்பை நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பில் மறு ஏலம் நடைபெறும் என்றும், இ.எஸ்.பி.என், ஜீ இருவருமே மீண்டும் தொலைக்காட்சி உரிமையைப் பெற எத்தனை பணம் தரவிருக்கிறார்கள் என்பதனை கோர்ட்டாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் கோர்ட் யாருக்கு உரிமை போகவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் என்றும் சொல்லியுள்ளனர்.

இது முட்டாள்தனமாக உள்ளது. ஓர் உயர் நீதிமன்றத்துக்கு இதுதான் வேலையா? இதென்ன, அப்படி ஒரு தலைபோகும் விஷயமா? பிசிசிஐ-இடம் உள்ள அதிகாரங்களை மும்பை உயர்நீதிமன்றம் தன் கையில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? ஏலமுறையில் ஏதேனும் தவறிருந்தால் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது மட்டும்தான் கோர்ட்டின் வேலை. இடைக்காலத் தடை விதிப்பது, அந்தத் தடையை விலக்கிக் கொள்வது ஆகியவற்றோடு தன் வேலையை நிறுத்திக்கொள்ளாமல் இப்பொழுது கிரிக்கெட் உரிமையை ஏலம் விடுவதிலும் இறங்கியுள்ளது மும்பை உயர் நீதிமன்றம். இப்படி தன் வேலையை காசு வாங்கிக்கொள்ளாமலேயே  கோர்ட் செய்யும் என்று எதிர்பார்த்திருந்தால், பிசிசிஐ முன்னமேயே கனம் கோர்ட்டாரவர்களிடம் வேலையை ஒப்படைத்திருக்கலாம்!

O

ராகுல் திராவிட் ஐசிசியின் இந்த ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதையும், சிறந்த கிரிக்கெட் வீரர் (டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என இரண்டும் சேர்ந்து) விருதையும் தட்டிச் சென்றுள்ளார். ஆகஸ்ட் 19 கட்டுரையில் ராகுல் திராவிட்தான் டெஸ்ட் கிரிக்கெட் விருதைப் பெறுவார் என நான் சொல்லியிருந்தேன். ஜாக் கால்லிஸ்தான் இரண்டு வகையான ஆட்டங்களிலும், மேலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் என்பது என் எண்ணம். அதனால் அவருக்குத்தான் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் வாக்குகளில் திராவிட் முதலாவதாகவும், கால்லிஸ், பிளிண்டாஃப் இருவரும் இரண்டாவதாகவும் வந்துள்ளனர்.

திராவிடின் டெஸ்ட் விளையாட்டு அனைவரையும் அந்த அளவிற்கு மயக்கியுள்ளது!

விருது என் கணிப்பு யாருக்குக் கிடைத்தது
சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் ராகுல் திராவிட் ராகுல் திராவிட்
சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர் ரிக்கி பாண்டிங் ஆண்டிரூ பிளிண்டாஃப்
சிறந்த புதுமுகம் இர்ஃபான் பதான் இர்ஃபான் பதான்
வருடத்தின் சிறந்த ஆட்டக்காரர் ஜாக் கால்லிஸ் ராகுல் திராவிட்
சிறந்த "சமர்த்தான அணி" நியூசிலாந்து நியூசிலாந்து
சிறந்த நடுவர் பில்லி பவுடன் சைமன் டாஃபெல்
 
ஐசிசி நியமித்த விருது கமிட்டி டெஸ்ட் ஆட்டத்திற்கும், ஒருநாள் ஆட்டத்திற்கும் என 11 சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் டெஸ்ட் 11இல் முத்தையா முரளிதரன் பெயர் இல்லை, ஷேன் வார்ன் பெயர் உள்ளது. இதனால் முரளிதரன் கடுங்கோபம் அடைந்துள்ளார். கடந்த வருடத்தில் நடந்த விளையாட்டுகளை மட்டும் வைத்துப் பார்த்தால் அதில் பாதி வருடத்தில் ஷேன் வார்ன் விளையாடவேயில்லை - ஊக்க மருந்து உட்கொண்டிருப்பார் என்ற சந்தேகத்தில் வார்ன் ஒரு வருடத் தடையை அனுபவித்துக்கொண்டிருந்தார்! ஆனால் முரளியின் பெயருக்குப் பதில் வார்ன் பெயர் இருப்பது முரளியின் பந்துவீச்சின் மேல் சிலருக்கு இருக்கும் சந்தேகம் காரணமாகவே என நினைக்கிறார் முரளி.
 
முரளியின் கோபம் நியாயமானதே. சென்ற வருடத்தில் பெற்ற விக்கெட்டுகளை மட்டும் முன்வைத்தால் முரளியின் பெயர்தான் இருந்திருக்க வேண்டும்! அது சென்ற வருடத்தைய ரெகார்டை மட்டும் முன்வைத்து. ஆனால் இருவரில் யார் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர் (அதாவது ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிட்டுப் பார்க்கையில்!) என்றால் அதில் ஷேன் வார்ன் பெயர்தான் மிஞ்சும் என்னும் என் கருத்தை நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன்.
 
O
 
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் டெண்டுல்கர் இல்லாமல் இந்தியா என்ன சாதிக்கப் போகிறது? டெண்டுல்கர் இருந்திருந்தால் மட்டும் என்ன சாதித்திருக்கப் போகிறது என்றெல்லாம் கேட்கலாம். இந்தியா முக்கியமாக சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும்.
 
கடந்த சில வாரங்களில் நான் சொன்னவற்றையேதான் மீண்டும் சொல்லப் போகிறேன். அவை: (1) திராவிடை விக்கெட் கீப்பராக வைக்காமல் வேறொருவரைக் கொண்டுவர வேண்டும். (2) ஓரிரண்டு "வயதான" விளையாட்டு வீரர்களை ஒருநாள் போட்டி விளையாடுவதிலிருந்து நீக்க வேண்டும் - லக்ஷ்மண், கும்ப்ளே பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. (3) ரோஹன் கவாஸ்கரை சமர்த்தாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
இதை நான் மட்டும் சொல்லவில்லை. இந்த வாரம் தெஹல்காவில் பீட்டர் ரோபக் இதையேதான் - அப்படியே ஒரு வார்த்தை மாறாமல் எழுதியுள்ளார். மேலும் இம்மாதிரியான முடிவுகளை எடுக்காமல் ஆஸ்திரேலியா எப்படி சில காலங்கள் கஷ்டப்பட்டது, இங்கிலாந்து எப்படியெல்லாம் தடுமாறியது என்பதையும் விளக்குகிறார். மார்க் டெய்லர், ஸ்டீவ் வா ஆகியோரை ஆஸ்திரேலியா தன் ஒருநாள் அணியில் தேவைக்கு அதிகமாகவே வைத்திருந்ததால் பல தொல்லைகள் வந்தன. இங்கிலாந்து அதுபோலத்தான் நாசெர் ஹுசைனை சற்று அதிகமாகவே அணியில் வைத்திருந்தனர்.
 
இந்தியா தன் தவறுகளை உடனடியாக சரிசெய்வது அவசியம்.
 
சேவாகின் ஆட்டத்தின் குறைவு தாற்காலிகப் பிரச்னைதான். இரண்டு ஆட்டங்கள் வெளியே வைத்து, ஒழுங்காக நெட் பிராக்டீஸ் செய்தால் எல்லாம் சரியாகி விடும்!
 
இப்பொழுதுள்ள ஃபார்ம் படி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதுவர். விளைவு எல்லோருக்கும் தெரிந்ததாகவே இருக்கலாம்.
Copyright © 2005 Tamiloviam.com - Authors