தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : 'நீதி தவறாத நல்லவன்'
- என். சொக்கன்

பாடல் 41

சோழன் கிள்ளி வளவனின் மார்பில், அழகான மாலை ஒன்று அசைந்தாடுகிறது - அவனுடைய கம்பீரமான பட்டத்து யானை, ஊரெங்கும் உற்சாகமாய்ப் பறையறைந்து, அவனது நல்லாட்சியின் செய்திகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

அந்த யானையைப் பார்க்கிறவர்களெல்லாம், சோழனின் பெருமையைப் போற்றுகிறார்கள், 'நீதி தவறாத நல்லவன்', என்று அவனை வாழ்த்துகிறார்கள்.

ஆனால், அவன்மீது காதல் கொண்ட இந்தப் பெண் ஒருத்திமட்டும், அவனுடைய செங்கோலின் பெருமையை ஏற்க மறுக்கிறாள், அவனுடைய நீதி, நேர்மையைச் சந்தேகிக்கிறாள்.

ஏன் ? அவளிடமே விசாரிக்கலாம் -

'என்னுடைய முன்கையிலிருந்து வளையல்கள் கழன்றுவிழும்படி என்னை மெலியச்செய்து, எனக்குக் காதல் நோயைத் தந்தான் அவன், பின்னர், என் கண்ணிலேயே படாமல் ஓடி மறைந்துவிட்டான் ! இவனையா நீங்கள் நியாயவான் என்று போற்றுகிறீர்கள் ?'


அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி
முறைசெயும் என்பரால் தோழி இறைஇறந்த
அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன்
செங்கோன்மை செந்நின்ற வாறு.

(அறை பறை யானை - பறை அறைந்து, ஊரெங்கும் தகவல் தெரிவிக்கும் யானை
அலங்கு - அசையும்
தார் - மாலை
முறைசெயும் என்பரால் - நீதிப்படி செய்வான் என்று எல்லோரும் சொல்கிறார்கள்
இறை - முன் கை
இறந்த - கழன்ற / நழுவிய
அங்கோல் - அழகிய கோல்
செந்நின்றவாறு - செம்மை பெற்றுள்ளவாறு)


பாடல் 42

சோழன் கிள்ளி வளவனின்மீது, ஒருதலைக் காதல் கொண்ட பெண்கள் ஏராளம் - அவனுடைய புகழைக் கேட்டு, அவன் சாலையில் வலம் வரும் கம்பீரத்தைப் பார்த்து மயங்கியவர்களாக இந்தப் பெண்கள் சித்தரிக்கப்படுகிறார்கள் !

இந்தப் பெண்களில் யாரும், சோழனிடம் ஒரு வார்த்தைகூட பேசியதில்லை, அவனுடைய மூச்சுக் காற்றுப் படும் தூரத்தில்கூட நெருங்கி நின்றதில்லை - அப்படியிருந்தும், சோழனைத் தங்களின் காதலனாகவே வரித்துக்கொண்டிருக்கிறார்கள், என்றேனும் அவனைச் சேர்ந்துவிடமுடியும் என்று உறுதியாய் நம்புகிறார்கள்.

இதற்கு, அந்தப் பெண்களின் வீட்டில் பலத்த எதிர்ப்பு.

இவர்களை 'காதலுக்கு எதிரானவர்கள்' என்று சொல்லிவிடமுடியாது - ஆனால், அவர்களின் கவலை வேறுவிதமானது, நியாயமானதும்கூட.

'நீ பக்கத்து வீட்டுப் பையனைக் காதலித்தால்கூட பரவாயில்லை, அவன் வீட்டாரிடம் பேசித் திருமணம் செய்துவைக்கலாம். ஆனால் நீயோ, ராஜாவைக் காதலிப்பதாய்ச் சொல்கிறாயே, பைத்தியக்காரி.', என்று அவளுடைய பெற்றோரும், மற்றவர்களும் அவளைத் திட்டித் தூற்றுகிறார்கள், 'சோழனைக் காதலிக்கிறேன் என்று நீ இப்படி உளறிக்கொண்டிருப்பதால், ஊரில் நம் குடும்பத்தின் மானம்தான் போகிறது. நாளைக்கு உன்னை எவன் திருமணம் செய்துகொள்வான் ?', என்று பதைப்புடன் சொல்லி, கோலால் அடித்துத் துன்புறுத்துகிறார்கள், 'இன்னொருமுறை சோழனைப் பார்ப்பதற்காக தெருவுக்கு ஓடினாயென்றால், காலை உடைத்து அடுப்பில் வைப்பேன்.', என்று மிரட்டுகிறார்கள்.

இப்படி, சுற்றியுள்ள எல்லோரும், சுடுசொற்களால் அவளைத் தாக்க, எல்லாவற்றையும் கேட்டபடி, அவள் மௌனமாய்க் கண்ணீர் வடிக்கிறாள் - அப்போது, 'தேரை' நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தேங்காயின் நினைவுதான் வருகிறது அவளுக்கு.

'தேரை நோய்' என்பது, தேங்காயின் உள்பகுதியைச் சிதைத்து, இளநீரைக் குடித்துவிடுகிற ஒருவகையான தாவர நோய். ஆனால், இந்த நோய் கொண்ட தேங்காயைப் பார்க்கிறவர்கள் எல்லோரும், 'அச்சச்சோ, தேங்காயைத் தேரை சாப்பிட்டுவிட்டதே.', என்று உச்சுக்கொட்டுவார்கள்.

இந்த நோய்க்குத் 'தேரை' என்று பெயர் வந்த காரணமே, இந்தப் பேச்சுதான் - கல்லினுள் வசிக்கிற (?) தேரை, தேங்காயினுள்ளும் நுழைவது சாத்தியம் என்று மக்கள் நினைத்திருக்கக்கூடும்.

ஆனால் உண்மையில், கடினமான மூடியைக் கொண்டிருக்கிற தேங்காயினுள், தேரை நுழையவும் முடியாது, அதைச் சாப்பிடவும் முடியாது. என்றாலும், செய்யாத குற்றத்துக்காக, அந்தத் தேரைக்குக் கெட்ட பெயர்.

அதுபோலதான், இந்தப் பெண், சோழனைச் சந்திக்கவும் இல்லை, அவனோடு சேரவுமில்லை, வெறுமனே அவனைப் பார்த்து, ஏங்கி நின்றதற்காக, கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுகிறாள்.

அழகான இந்தப் பாடல் குறிப்பால் உணர்த்தும் செய்தி ஒன்றுண்டு - இந்தத் துன்ப நிலையிலும்கூட, 'நிஜமாகவே சோழன் என்னைக் காதலியாக ஏற்றுக்கொண்டிருந்தால், இத்தனை அடியையும், திட்டையும் சந்தோஷமாய் வாங்கிக்கொள்வேனே.', என்றுதான் அவளுடைய காதல் நெஞ்சம் நினைக்கிறது.

அன்னையும் கோல்கொண்டு அலைக்கும்; அயலாரும்
என்னை அழியும்சொல் சொல்லுவர்; நுண்ணிலைய
தெங்குஉண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
திண்தேர் வளவன் திறத்து.

(அலைக்கும் - அடிக்கும்
அழியும்சொல் - வருத்தம் தரக்கூடிய சொற்கள்
நுண்ணிலைய - நுட்பமான
தெங்கு - தேங்காய்
தேரை - தேங்காயின் ஒரு வகை நோய்
படுவழி - படும் துன்பம்
திண்தேர் - திண்மையான / வலிமையான தேர்
வளவன் திறத்து - வளவனிடம்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors