தமிழோவியம்
தராசு : திரைப்படங்களும் தொடரும் வழக்குகளும்
- மீனா

முக்கிய நடிகர்கள் நடிகர்கள் நடித்து வெளிவரும் அனைத்து  திரைப்படங்களுக்கும் எதிராக வழக்கு தொடுப்பது தற்போது சகஜமாகியிருக்கிறது. எதற்காக வழக்கு தொடுக்கிறோம், நாம் தொடுக்கும் வழக்கு நீதிமன்றத்தில் நிற்குமா? இதன் மூலமாக நிஜமாகவே மக்களுக்கு ஏதாவது நன்மை செய்கிறோமா? என்ற சிந்தனைகள் ஏதுமில்லாமல் வெறும் பரபரப்பிற்காகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் தான் இவை எல்லாம். நீதிமன்றத்தின் நேரத்தை எவ்வாறு வீணடிக்கிறோம் என்ற குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல் தங்கள் சொந்த லாபத்திற்காக போடப்படும் வழக்குகள் தான் இவை எல்லாம்.

இவற்றுக்கெல்லாம் சம்மட்டி அடி கொடுப்பதைப் போல அரசாட்சி படத்தை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட அல்பத்தனமான வழக்கைப் பதிவுசெய்து கோற்ற் நேரத்தை வீணடித்தற்காக வழக்கு தொடுத்த வழக்கறிஞருக்கு 50,000 அபராதமும் போட்டு நீதி வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இப்படிப்பட்ட அதிரடித் தீர்ப்பை சற்றும் எதிர்பார்க்காத அந்த வழக்கறிஞர் கெஞ்சி, கூத்தாடி " இது போன்ற மனுவை இனி தாக்கல் செய்யமாட்டேன்.. எனக்கு மாத வருமானமே ரூ.500 தான்.." என்றெல்லாம் காரணம் கூறி தான் கட்டவேண்டிய அபராதத்திலிருந்து விலக்கு பெற்றிருக்கிறார்.

ஒரு பாடல் வரிக்காக பாபா திரைப்படத்தின் மீது வழக்கு போடப்போவதாக மிரட்டியது தி.க. இதாவது பரவாயில்லை என்ற ரீதியில் சண்டியர் என்ற பெயருக்காக கமல் படத்தின் மீது வழக்கு தொடுக்கப்போவதாக மிரட்டினார் கிருஷ்ணசாமி. இதுபோன்ற வெட்டிக்காரணங்களுக்காக ஒரு படத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்தாலும் தொடுப்பார்களே தவிர தேவையான - முக்கிய பிரச்சனைகளுக்காக போராட யாரும் தயாரில்லை. ஆபாசத்தின் உச்சகட்டமாக வெளிவந்த நியூ படத்தை எதிர்த்து ஒரு தலைவரும் குரல் கொடுக்காதது ஏனோ?

இனி இந்த மாதிரியான வழக்கு தொடுக்கும் கோமாளித் தனம் ஒழிய, இந்தத் தீர்ப்பைப் போலவே வரும் காலங்களிலும் அதிரடியான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கவேண்டும். அப்போதுதான் பரபரப்பிற்காக திரைப்படங்களின் மீது வழக்கு போடும் வழக்கம் ஒழியும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors