தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : 'காதல் கோட்டை
- என். சொக்கன்

பாடல் 43

சில ஆண்டுகளுக்குமுன், நம் திரைப்படங்களில் 'பார்க்காமலே காதல்' என்ற தத்துவம் பரவலானது - கண்ணாலே பார்க்கும் காதலெல்லாம் காமக் காதல், ஒருவரையொருவர் பார்க்காமல் வருவதுதான் உன்னதக் காதல் என்ற செய்தி மக்கள்முன் முரட்டுத்தனமாய் வைக்கப்பட்டது.

இந்தத் தத்துவத்தின் சாதக, பாதகங்களை அலசுவது நம் நோக்கமில்லை - ஆனால், இந்த முத்தொள்ளாயிரப் பாடலில் வரும் ஒரு பெண், சோழனைக் காதலிக்கிறாள் - ஆனால், இவள் அவனைப் பார்த்ததே இல்லையாம் !

அதெப்படி ? அந்தக் காலத்திலேயே 'காதல் கோட்டை'யா ? இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்காமல், பனை ஓலைகளில் மடல்கள்
எழுதி, இதயங்களைப் பரிமாறிக்கொண்டார்களா ?

அதுதான் இல்லை - அடிக்கடி சந்தித்துக்கொள்ளும், சண்டையிட்டுக்கொள்ளும், அது தீர்ந்து தழுவிக்கொள்ளும் 'இயல்பான' காதலர்கள்தான் இவர்கள், என்றாலும், இவள், 'அவனைப் பார்த்ததே இல்லை' என்று சாதிக்கிறாள்.

இதற்கு அவள் சொல்லும் காரணங்கள், சுவாரஸ்யமானவை -

முதலாவதாக, 'சோழனுடன் நான் ஊடல் கொண்டிருக்கும்போது, பொய்க் கோபத்தால், அவனைப் பார்க்க விரும்பாததுபோல் தலையைத் திருப்பிக்கொள்வேன். ஆகவே, அவன் முகத்தை நான் பார்க்கமுடிவதில்லை.'

சரி, இந்த ஊடல் சண்டையெல்லாம் தீர்ந்து, அவன் உன்னைத் தழுவினால் ? அப்போதாவது அவனைப் பார்ப்பாய்தானே ?

'அதுவும் இல்லை ! அவன் என்னைத் தொடும்போது, நாணம் என்னைச் சூழ்ந்துகொள்ளும், வெட்கத்தால் தலை கவிழ்ந்து, தரையைப் பார்த்து நிற்பேன். ஆகவே, அப்போதும் நான் அவனைப் பார்ப்பதில்லை.'

அதுவும் நியாயம்தான், ஆனால், ஊடலின்போது இல்லாவிட்டாலும், கூடலின்போதாவது நீ அவனைப் பார்த்தாகவேண்டுமே ?

இப்படி நாம் சொன்னதும், 'அய்யோ, அதைப்பற்றிக் கேட்காதீர்கள்.', என்று வெட்கத்தால் சிவந்த முகத்தை மூடிக்கொள்கிறாள் அந்தப் பெண்,
'கூடலின்போது, அந்த சந்தோஷத்தில் நான் மொத்தமாய் மயங்கிப்போய்விடுகிறேன். அப்படியிருக்க, அந்த நேரத்தில் நான் அவனைப் பார்ப்பது
எப்படி ?'

இப்போது, அவளுடைய தரப்பு வாதங்களையெல்லாம் மொத்தமாய் யோசித்துப் பார்க்கும்போது, செங்கோல் வளையாமல், இந்த பூமியை ஆளும்
சோழன் வளவனை, அவளது காதலனை, அவள் கண்ணாரப் பார்த்ததே இல்லை என்ற வேடிக்கையான உண்மை நமக்குப் புரிகிறது.


புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாண்நிற்பன்
கலவி களிமயங்கிக் காணேன் - நிலவியசீர்
மண்ஆளும் செங்கோல் வளவனையான் இதன்றோ
கண்ணாரக் கண்டறியா ஆறு.

(புலவி - ஊடல்
புறக்கொடுப்பன் - முகத்தைத் திருப்பிக்கொள்ளுவேன்
பில்லிடின் - தழுவினால்
நாண்நிற்பன் - வெட்கப்பட்டு நிற்பேன்
கலவி - கூடல்
களிமயங்கி - களிப்பால் / மகிழ்ச்சியால் மயங்கி
ஆறு - நிலைமை)பாடல் 44

தன் காதலியிடம் சேதி சொல்வதற்காக, மேகத்தைத் தூதாக அனுப்பிய காதலனைப்பற்றி, 'மேக தூதம்' என்ற கவிதை நூலை வடித்திருக்கிறார் மகாகவி காளிதாசர்.

'நள வெண்பா'வில், நளனும், தமயந்தியும், அன்னப் பறவையின் தூதால் இணைந்தார்கள் என்று படித்திருக்கிறோம்

இதுபோல், பிரிந்திருக்கும் காதலர்களிடையே, பறவைகள் தூதாகச் செல்வதும், அந்தப் பறவைகளின்வாயிலாக, ஒருவர் மற்றவரின் நலனை விசாரித்துத் தெரிந்துகொள்வதும், பல காவியங்களில் காணப்படுகிறது - இந்த பறவைத் தூது, பிரிந்திருக்கும் காதலர்களின் துயரத்தை ஓரளவேனும் குறைக்கும் என்பது ஒரு பழமையான கவிதை மரபாகவே தெரிகிறது.

பின்னர் தபால் வசதியும், தொலைபேசிகளும், கணினி வழி மின்னஞ்சல்களும் பெருகியபிறகு, பறவைகளைத் தூதனுப்புவதற்கான அவசியம் குறைந்துவிட்டது. என்றாலும், ஏதேனுமொரு பழம்பாடலில், பறவையிடம் தன்னுடைய காதலை துளித்துளியாய் விவரித்துச் சொல்லும் காதலியைப்பற்றிப் படிக்கும்போது, சிலிர்ப்பும், பரவசமும் கலந்த ஒரு உணர்வு உண்டாவது நிச்சயம் - தூது அனுப்புகிற நோக்கம்கூட இரண்டாம்பட்சமாகிவிட, 'யாரிடமேனும் இதைப் பேசிவிடவேண்டும்.' என்கிற அவளுடைய துடிப்பு, ரசனைக்குரிய அனுபவம் !

இந்தப் பாடலில், ஒரு காதலி, தன் காதலனாகிய சோழனிடம், ஒரு நாரையைத் தூதாக அனுப்புகிறாள்.

'சிவந்த கால்களையுடைய அழகிய நாரையே, நீ இப்போது எங்கே போகிறாய் ? தென்திசையிலிருக்கிற உறந்தை நகருக்குச் செல்கிறாயா ?', என்று கேட்கிறாள் அவள்.

'ஆமாம்.', என்பதுபோல் மெல்லமாய்த் தலையாட்டுகிறது அந்த நாரை.

அதைப் பார்த்ததும், அவளுடைய கண்கள் படபடக்கின்றன, முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு தென்படுகிறது, அந்த நாரையை நோக்கிக் குனிந்து, 'நாரை நண்பா, நான் உன் காலைப் பிடித்துக் கேட்கிறேன், தயவுசெய்து, எனக்கு ஒரே ஒரு உதவி செய்வாயா ?', என்று கெஞ்சுகிறாள்.

'கரையின்மீது மீன்கள் உரசி, துள்ளிக்குதிக்கும் காவிரி ஆற்றின் கரையில் உறந்தை நகரம் இருக்கிறது, அந்த நாட்டின் தலைவனாகிய சோழன்தான், என்னுடைய காதலன்.', என்று அறிமுகப்படுத்துகிறாள் அவள், 'நீ அந்த உறந்தை நகரைச் சென்று சேர்ந்ததும், காவிரி ஆற்றிலிருக்கும் வளமான மீன்களைச் சாப்பிட்டுப் பசியாறிக்கொள், பிறகு, நேராக என் காதலன் சோழனிடம் சென்று, அவனை நினைத்து நான் நோயுற்றிருக்கும் செய்தியைச் சொல்லி வா.'

இப்படிச் சொல்லிவிட்டு, அவள் தனது கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறாய், 'நாரையே, நீ எனக்கு இந்த உதவியைச் செய்வாயா ? நீ மனதுவைத்தால்தான், என் காதலன் மீண்டும் என்னைப் பார்க்க வருவான், இந்தப் பிரிவின் நோய் என்னைத் தின்றுவிடாமல் காப்பாற்றுவது உன் கையில்தான் இருக்கிறது.'

செங்கால் மடநாராய் தென்உறந்தை சேறியேல்
நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் நன்பால்
கரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரி நீர்நாடற்(கு)
உரையாயோ யான்உற்ற நோய்.

(சேறியேல் - அடைந்தால்
நன்பால் - நல்ல இடம்
உரிஞ்சி - உரசி
பிறழும் - துள்ளும்
உரையாயோ - சொல்லமாட்டாயா ?
உற்ற - கொண்ட)

Copyright © 2005 Tamiloviam.com - Authors