தமிழோவியம்
பேட்டி : காவேரியுடன் ஒரு சந்திப்பு
- என்.டி. ராஜன்

அம்மனம் கிலி மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று தமிழ் தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றிகரமான கதாநாயகியாக பவனிவரும் காவேரியுடன் ஒரு சந்திப்பு. அவர் தற்போது நடிக்கும் ஆங்கிலப் படமான "Nothing But Life" வெகு விரைவிலேயே அமெரிக்காவில் வெளியாக உள்ளது.

ராஜீவ் ஆஞ்சலுடன் தாங்கள் பணியாற்றிய அனுபவத்தைக் குறிப்பிடமுடியுமா?

ஆரம்பம் முதல் குறிப்பிடவேண்டும் என்றால ராஜிவின் படமாகிய அம்மனம் கிலியில் தான் நான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். இது குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட படம். என்னுடைய சமீப கால நடிப்பைப் பார்த்து, இயக்குனர் தான் இயக்கும் "Nothing But Life" படத்தில் என்னை நடிக்க அழைத்தார். இந்தப் படம் மலையாளத்திலும் "Made in USA"  என்ற பெயரில் வருகிறது.

"Nothing But Life" இந்தப் படத்தைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

அமெரிக்க மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு நர்சைப் பற்றிய கதை இது. நான் நர்ஸாக நடித்துள்ளேன். மாதவன் எங்கள் மருத்துவமனையில் சேரும் ஒரு நோயாளி. ஏதோ சில காரணங்களால் அவர் என்னை அவருடைய சிறுவயது தோழியாக நினைத்துப் பழகுகிறார். மருத்துவர்களுடைய ஆலோசனையில் படி நானும் அவருடைய தோழியாகவே நடிக்கிறேன். பிறகு எப்படி அவருக்கு நாங்கள் அனைவரும் சேர்ந்து உண்மையைப் புரியவைக்கிறோம் என்பதே கதை. இந்தப் படத்தை முழுவதும் அமெரிக்காவிலேயே படம் பிடித்துள்ளார் இயக்குனர் ராஜீவ்.

இந்தப் படத்தில் நீங்கள் நர்ஸாக நடிப்பதைத் தவிர வேறு சிறப்பம்சம் ஏதும் இருக்கிறதா?

மாதவன் என்னைத் தன்னுடைய சிறு வயது தோழியாக நினைக்கும்போது நான் உண்மையிலேயே சின்ன வயது பெண்ணாகத் தோன்றுவேன். அம்மனம் கிலியில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை இயக்குனர் இந்தப் படத்தில் புகுத்தியுள்ளார். படம் பார்பவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

நீங்கள் சமீபகாலமாக மலையாளப் படங்களில் நடிப்பதை தவிர்த்துவருவதாக ஒரு வதந்தி உலவுகிறதே - இதைப் பற்றி?

நான் மலையாளப் படங்களில் நடிப்பதை மிகவும் விரும்புகிறேன். ஆனால் ஏற்கனவே தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதால் மலையாளத்தில் நடிக்க தேதி கொடுக்க இயலவில்லை.

உங்களுடைய தெலுங்கு ஹிட் படங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்

தமிழ் சேதுவின் மறுபதிப்பான சேஷ¤வில் ராஜசேகருடன் நடித்துள்ளேன். ரவி தேஜாவுடன் இரண்டு படமும், ஜெகபதி பாபுவுடன் கபடி கபடியிலும், வசந்தம் படத்தில் வெங்கடேஷ¤டனும், பனி என்டியில் வேனுவுடனும் நடித்துள்ளேன். இது எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள்.

கன்னடப் படங்களில் யார் யாருடன் நடித்துள்ளீர்கள்?

கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த், குமார் பங்காரப்பா மற்றும் ரவிச்சந்திரனுடன் நடித்துள்ளேன்.

உங்களுடைய தமிழ் திரையுலக அனுபவம் பற்றி..

தமிழில் விஜயுடன் கணுக்குள் நிலவு, விக்ரமுடன் காசி, சமுத்திரம் மற்றும் புன்னகைப் பூவே படங்களில் நடித்துள்ளேன். தற்போது பார்த்திபனுடன் கன்னாடிப் பூக்கள் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் படம் தீபாவளி ரிலீஸ்

கவர்சியாக நடிக்க சம்மதமா?

கொஞ்சம் கவர்ச்சி என்றால் ஓக்கே. ஆனால் கவர்ச்சி காட்டுவதில் ஒரு எல்லைத் தாண்ட விரும்பவில்லை. அழகான குடும்பப்பாங்கான வேடங்களே எனக்குச் சரியாகப் பொருந்தும் என்ற அசாத்திய நம்பிக்கை எனக்கு உண்டு.

நீங்களும் டைரக்டர் சூர்ய கிரணும் திருமணம் செய்து கொள்ளப்போவதாய் வெளிவரும் செய்திகளை நீங்கள் மறுக்கவில்லையே?

எங்கள் திருமணம் இன்னும் நடக்கவில்லை. என்னுடைய தாயாரும் கிரணின் பெற்றோரும் ஜாதக பரிவர்தனைகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் நல்லபடியாக முடிந்து திருமணத் தேதி நிச்சயிக்கப்பட்டதும் உங்கள் அனைவருக்கும் கட்டாயம் அறிவிப்பேன்.

உங்கள் குடும்பத்தைப் பற்றி

என்னுடைய தந்தை முரளிதரன் கேரள அரசாங்கத்தில் பணிபுரிந்துவந்தார். கடந்த வருடம் தான் நான் அவரை இழந்தேன். அவருடைய மரணம் எங்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். என் தாயார்தான் தற்போது குடும்ப நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்கிறார். என் இளைய சகோதரன் விஸ்காம் சென்னையில் படித்து வருகிறார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors