தமிழோவியம்
க. கண்டுக்கொண்டேன் : குச்சிப்புடிக்கு உயிர் கொடுத்தார் நவாப்!
- ரமா சங்கரன்

கடந்த வாரம் தொடங்கி இங்கு சிங்கப்பூரில் சிராங்கூன் ரோட்டில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வசந்த மண்டம் கட்டுவதற்காக நிதித் திரட்டும் பணி தொடங்கியது. இது 150 ஆண்டுகால பாரம்பரியச் சின்னமாக  சிங்கப்பூரில் விளங்குகிறது. இதற்காக, "கோபிகா கிருஷ்ணா" என்னும் குச்சிப்புடி நாட்டிய நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகளாவியப் புகழ்பெற்ற முதுபெரும்கலைஞர் டாக்டர் வேம்பட்டி சின்னசத்யத்தின் சென்னயில் உள்ள குச்சிப்புடி ஆர்ட் அகடெமியிலிருந்து 32 கலைஞர்கள் இந்த நாட்டிய நாடகத்தை மேடையேற்ற இருக்கின்றனர்.   இதன் ஆரம்பக்கட்ட வேலைகள் அதிகம் இருந்ததால் படாம்(Batam) செல்லும் என் திட்டத்தை சற்றுத் தள்ளிப் போட்டிருக்கிறேன்.

நாங்கள்  சிலர்  சேர்ந்து ஒரு குழுவாக வேலையைத் தொடங்கும் முன்  குச்சிப்புடி நாட்டிய நாடகத்தைக் கொண்டு நிதி திரட்டமுடியுமா? என்று விவாதித்தோம். நிதித் திரட்டுவதோடு,  ஒரு இந்து பாரம்பரிய சின்னம்,  சிங்கப்பூரில் வாழும்  பல இன கலாசார மக்களுக்கு இந்தியக் கலையின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் எடுத்துச் சொல்லுவதும் கூட முக்கியம் என்பது என் கருத்து. சிங்கப்பூரில் 30 பாரம்பரிய சின்னங்களில் சில இந்திய முஸ்லீம் பள்ளிவாசல்கள். ஆனால்  ஸ்ரீமாரியம்மன் கோயிலும் பெருமாள் கோயிலுமே இந்து பாரம்பரியச் சின்னங்கள்.  மேலும் இக்கோயில் அழகான கோபுரம், ஓவியங்கள், சிற்பங்களைக் கொண்டது.

பழமையானக் கலைச்சின்னமான  இதை பேணிக்காக்கவும்,  காலத்தோடு ஒட்டிய சில நவீன வசதிகளை இந்திய சமூகத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு உருவாக்கவும்   கலைநிகழ்ச்சி மூலம்  பல்லின மக்களின் ஆதரவைத் திரட்டுவது சமய இணக்கத்தை உண்டாக்கும் என்றும் சொல்லலாம். 

சிங்கப்பூரர்கள் அதிகம் அறிந்தது  பரதநாட்டியமே. இருந்தாலும் இங்கு எனக்குத் தெரிந்து முறைப்படிப் பயிற்சிப் பெற்று  குச்சிப்புடி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் தற்போது இருவர் உள்ளனர். மாணவர்கள் கொஞ்சம் சிலரே.  இதற்கு முன்பு 1990களில் சிங்கப்பூரில்  திருமதி ராஜ்யஸ்ரீ இருந்தபோது மிக மும்முரமாக குச்சிப்புடி வகுப்புகள் நடைபெற்றன. 'நூபுரா' என்னும் சிங்கப்பூர் குச்சிப்புடி நாட்டியக் குழுவே இருந்தது. உள்ளூர்வாசிகள் புரிந்துகொள்ளும்படி சிங்கப்பூரைத் தழுவிய கருப்பொருளில் தற்காலத்திய கதைக்கு குச்சிப்புடி, சீன, மலாய்  நடனங்கள், இசையுடன் ஆங்கில வசனங்கள்,  கலந்த நாட்டிய நாடகம் அமைத்து ஹாஸ்பிஸ் ஒன்றிற்கு  நிதித் திரட்டி அப்போது வெற்றி  கண்டோம். ஆனால் சில வருட கால இடைவெளிக்குப் பிறகு, இன்னும் புது மாற்றங்கள் பல கண்ட சிங்கப்பூரில்  தொன்மையான குச்சிப்புடி நாட்டியநாடகம் எந்த அளவு வரவேற்பு பெறும் என்பதை நான் நினத்துப் பார்க்கிறேன்.

குச்சிப்புடியை இந்தியாவிலிருந்து இங்கு வந்து  குறிப்பாகத் தனியாக மேடை நிகழ்ச்சி நடத்திய நடனமணிகள் குச்சிப்புடியைச் சரியாகக் காட்டியிருக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.   குச்சிப்புடியில் நாட்டிய நாடகங்கள்தான் உண்டு. குச்சிப்புடியைத் தனியாக ஆடும் வழக்கம்  வேதாந்தம் லட்சுமிநாரயணய்யா போன்றோர் 1950களில்தான் உருவாக்கினார்கள். ஆனால் தனியாக ஆடத்தொடங்கியவர்கள் 'தரங்கம்' எனப்படும் தாம்பாளங்களின் மேல் ஆடுவது, 'பாலதரங்கம்' என்னும் தலையில் குடத்துடன் ஆடுவது போன்றவற்றையே பிரபலப்படுத்தினர். இதுவே குச்சிப்புடியின் அடையாளமாக  இன்றும் கருதப்படுகிறது. இன்னும் சிலரோ கால் விரலால் கோலம் போடுவது, படம் வரைவது ஆகியவற்றை குச்சிப்புடி நடனமாகக் காட்டி வருகின்றனர்.

ஆனால் காதலும் பெண்மையின் நளினமும் கொஞ்சும் கீத கோவிந்தப்பாடல்கள், ஷேத்தரையாவின் பதங்கள், நாராயணதீர்த்தரின் தரங்கங்கள் போன்றவை குச்சிபுடிக்கு அழகு சேர்க்கின்றன. தேவதாசிகள் தினமும் பக்தியுடன் தெய்வீகம் திகழ ஆடியது நாட்டுவமேளா.இது பிற்காலத்தில் பரதமாக ஆனது.  விசேஷ நாட்களிலும் விழாக்களிலும்  சிறப்பாக அமைக்கப்பட்டு ஆடப்பட்டது  நாட்டியமேளா. இது குச்சிப்புடியாக மாறியது. தனஞ்சயா எழுதிய தஸரூபகத்தில் சொல்லப்பட்ட பத்து விதமான நாடக வகைகளில் ' வீதி நாடகம்' ஒன்று. இதை தெருவில் போடப்படும் நாடகம் என்று பலர் அர்த்தம் கொள்கிறார்கள். 'அன்பே சிவம்' திரைப்படத்தில் வீதிநாடகம் மூலம் தொழிலாளிகள் சுரண்டப்படுவதைக் காட்டுகிறார் கமல். - காதலுடன் நகைச்சுவையுடன் என்று நாட்டியம் வழியாக  ஐந்து வழிகளில் பேசுவது என்று வீதி நாடகத்தைக் கூறலாம்.  இதை முழுமையாக பாமாகல்பம் குச்சிப்புடி நடனங்களில் பார்க்கலாம். இதுபோல நாட்யசாஸ்திரம், அபிநயதர்ப்பணம் போன்ற  பல நூல்களின் விதிமுறைகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட பாரம்பரிய நடனமே குச்சிப்புடி என்று அடித்துக் கூறலாம்.
பரதநாட்டியத்தில் வசனம் கிடையாது. குச்சிப்புடியில் கொஞ்சம் நாடகக்கூறுகள் உண்டு.

ஆனால் 14 ஆம் நூற்றாண்டில்தான் குச்சிப்புடி  உருப்பெற்றது.  கிருஷ்ணர் மேல் பிரேமை கொண்ட சித்தா(சித்தப்பா) என்னும் இளைஞன்  தன் மனைவியையே சத்தியபாமாவாகப் பார்த்து அவளை விட்டு விலகி துறவியாகி விடுகிறார். அன்று முதல் சத்தியபாமாவைப் போற்றி சித்தேந்திர யோகி என்னும் பெயருடன் "பாமாகல்பம்" என்னும் பாடல்களை எழுதி அவர் நடனமாக உருவாக்கினார். பாமாகல்பத்தில் எக்கச்சக்கமாய் காதலும் பக்தியும் வழிந்தது.   தேவதாசிகள் ஏற்கனவே காதல்கலையில் வல்லவர்கள். எனவே தேவதாசிகள் அதை ஆடினால் பாடல்களின் பக்தி அவர்கள் ஆட்டத்தில் வெளிவராது என்று கருதிய சித்தேந்திர யோகி தனது ஊரில் இருந்த அந்தணப் பையன்களுக்கு அதைச் சொல்லிக் கொடுத்தார். அவர்களுக்கு வேதங்களும், உடற்பயிற்சிகளும் கற்றுக் கொடுத்தார். ஆண்கள் மட்டும் ஆடுவதே இந்த நடனம் என்று சித்தேந்திரா வரையறுத்தார். ஊர் ஊராகச் சென்று ஆடிய இவர்கள் "குசிலு" (Kuchilu) எனப் பிறரால் கேலியாக  அழைக்கப்பட்டனர். இது 'குசிலவா' என்னும் சம்ஸ்கிருதச் சொல்லின் சுருக்கம்.  'தாழ்த்தப்பட்ட ஆட்டக்கார சாதியினர்' என்பது இதற்குப் பொருள். இதனால் கவலைப்படவில்லை சித்தேந்திரா. பக்கத்து ஊரில் வீணே கிடந்த தரிசு நிலத்தில் ஒரு ஊரை உருவாக்கி அதில் அந்த ஒன்பது குடும்பங்களையும் குடியேற்றினார்.   அது குசிலபுரம் என அழைக்கப்பட்டது. பின் மருவி "குச்சுப்புடி" ஆனது. இதே பெயரால் குச்சிப்புடி நடனமும் அழைக்கப்பட்டது. 

குச்சிப்பிடி பின் இரண்டு நூற்றாண்டுகளுக்கு தழைத்தோங்கியது. விஜயநகர அரசர்கள் ஆதரவு நல்கினார்கள். அதன்பின் நவாப்புகளும் சுல்தான்களும் குச்சிப்புடிக்கு இடையூறு விளைவித்தனர். எனவே சில குடும்பங்கள் பயந்து தஞ்சை மாவட்டத்தை ஆண்ட  அச்சுதப்ப நாயக்கர் அரசிடம் தஞ்சம் புகுந்தனர். திருமாலை போற்றி ஆடிப்பாடும் "பாகவதமேளா" பாரம்பரியத்தை உண்டாக்கினர். இவர்கள் தஞ்சையில் அச்சுதபுரம் அல்லது இப்போது காணப்படும் மெலட்டூரில் குடியேறினர். இன்றும் பகவதமேளாபாணியில் நரசிம்ம ஜயந்தி விமரிசையாக அங்கு கொண்டாடப்படுகிறது.

ஆனால் குச்சிப்பிடி கிராமத்திலேயே தங்கிய ஒன்பது குடும்பங்களின் வாரிசுகளும்  வறுமையில் வாடினர். அப்போது ஒரு சமயம் குச்சிப்புடி கிராமத்தின் வழியே சென்ற கோல்கொண்டா நவாபான அப்துல் ஹாஸிம் டானிஷா அவர்களின் நாட்டியத்தைக் கண்டு சொக்கிப் போனார். குச்சிப்புடி கிராமத்தையே அவர்களுக்கு உரிமையாக்கினார். தேவையான உதவிகளைச் செய்தார். அந்தண வகுப்பைச் சேர்ந்த தொன்மையான குச்சிப்புடி நாட்டியக் கலைஞர்கள் மறுவாழ்வு காண உதவியது  இஸ்லாமிய வழி மன்னரான ஒரு நவாப். எனவே  இந்து பாரம்பரிய சின்னமான ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலின் கலை, கலாசாரப் பாரம்பரியங்களைக் காக்க  குச்சிப்புடி நாட்டிய நாடகம்  படைத்து சிங்கப்பூரில் சீனர்கள், மலாய்காரர்கள், யுரேஷியர்கள் என பல இன மக்களின் ஆதரவைத் தேடுவது பொருத்தம்தானே! 

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors