தமிழோவியம்
தராசு : முதல்வரின் பகுத்தறிவு கொள்கை
- மீனா

 

தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை ஆள்வோர் மக்களிடம் காட்டக்கூடாது என்பது அந்தக்கால அரசியல் நாகரீகம். மேலும் மக்களுக்காக தங்கள் சொந்த நலனை பெரிய அளவில் விட்டுக்கொடுத்து வாழ்ந்தார்கள் அந்தக்கால அரசியல் தலைவர்கள். நேர்மையான வழியில் - சொந்தங்களுக்கும் சொந்த விருப்பங்களுக்கும் இடம் கொடுக்காமல் நல்லாட்சி புரிந்தார்கள் அந்தத் தலைவர்கள்.

ஆனால் இப்போதுள்ள அரசியல்வாதிகள் பலரும் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை மக்கள் மீது திணித்து வருகிறார்கள். தங்கள் குடும்பத்தையும் குடும்ப நலனையும் மட்டுமே  முன்னிலைப்படுத்தி அரசியல் செய்துவருகிறார்கள். இவர் தான் தவறு செய்கிறார் என்று கூற முடியாத அளவிற்கு இன்றுள்ள அனைத்து அரசியல்வாதிகளுமே இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் என்றாலும் அதில் முன்னிலை வகிப்பவர் நம்  முதல்வர் கருணாநிதி தான்..

பகுத்தறிவு பாசறை, பகுத்தறிவு பகலவன் என்றெல்லாம் பட்டப்பெயர் பெற்ற முதல்வரது பகுத்தறிவுக் கொள்கைகள் நாட்டுக்கே தெரிந்தவை. மற்ற மதங்களையும் அம்மதக்கடவுள்களையும் மதத்தலைவர்களையும் பற்றியும் ஒரு வார்த்தை பேச மறுக்கும் கருணாநிதிக்கு இந்து மதம் என்றால் மட்டும் அப்படி என்ன ஒரு இளப்பமோ தெரியவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்து மத்தத்தைப் மற்றும் கடவுள்களைப் பற்றியும் ஏகடியம் செய்வதை மட்டுமே தனது ஏக கொள்கையாக வைத்துள்ளார்.

தற்போது இந்தியா முழுவதையும் கலக்கும் விதமாக காங்கிரஸ் அரசு கூறிய ராமர் மறுப்புக் கருத்துகளின் தீவிரம் நாடு முழுவதும் தாக்க - தனது அறிக்கையில் உள்ள குறைபாடுகளை அறிந்து உடனடியாக அந்தக் கருத்துகளை வாபஸ் வாங்கியது மத்திய அரசு. ஏற்கனவே இரண்டு தொல்லியல் துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ள அரசு இன்னும் என்னென்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ தெரியவில்லை.

ஆனால் ஈரோட்டில் ஒரு கூட்டத்தில் பேசியுள்ள கருணாநிதி "ராமர் என்பவர் யார்? அவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கினார்?" என்ற ரீதியில் நையாண்டி பேசியுள்ளார். இந்து மதத் தலைவர்கள் யாரும் "பத்வா' என்ற கொலை தண்டனை அறிவிக்க மாட்டார்கள் என்பதாலேயே இவர் இவ்வாறு கூசாமல் உரைக்கிறார். இயேசுநாதர் என்று ஒருவர் வாழ்ந்தார் என்பதற்கும் கூட நிரூபணம் கிடையாது என்று அமெரிக்கர்கள் சிலரே இப்போது கூறி வருகின்றனர். அதனால் இயேசு இல்லை என்று ஆகிவிட்டதா?

தனது கடவுள் மறுப்புக் கொள்கைகளை மற்ற மதங்களிடம் காட்ட மறுக்கும் கருணாநிதி இந்து மதத்தை மட்டும் இவ்வாறு சமயம் கிடைக்கும் போதெல்லாம் தாக்கிவருவது அவரது அனுபவத்திற்கு அழகல்ல.. தனது கடவுள் மறுப்புக் கொள்கைகளை தன் மனைவி - மக்களிடையே கூட சரியாகக் கொண்டு சேர்க்க திராணியற்றவர் இவர். கட்சித் தொண்டர்கள் விஷயமும் அப்படியே. இதற்கான உதாரணங்கள் தான் தயாளு அம்மாள் மற்றும் கருணாநிதி குடும்பத்தாரின் கோவில் விஜயங்களும் துரைமுருகன் உள்ளிட்ட அவரது சகாக்களின் கோவில் விஜயங்களும்.

முதல்வர் வேண்டுமானால் ராமர் யார் என்று கேட்கலாமே தவிர ராமரை வழிப்படும் கோடிக்கணக்கான பக்தர்களில் இவரது குடும்பத்தினரும் கட்சியினரும் அடக்கம் என்பதை யார் இவருக்கு எடுத்துச் சொல்லப்போகிறார்கள்? தன் சொந்த விருப்பு வெறுப்புகளை மக்கள் மீது திணிக்கக்கூடாது என்ற உன்னத ராஜதத்துவத்தை யார் இவருக்கு புரியவைக்கப்போகிறார்கள்?

இந்தியா சமத்துவ நாடுதான். ஆனால் சமத்துவத்திற்கு பொருள் ஒரு மதத்தைப் பற்றியும் அம்மதத்தைச் சேர்ந்த மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதம் அறிக்கை விடுவதும் அல்ல. இதை மத்திய அரசும் மாநில அரசும் உணரவேண்டும். குறிப்பாக கருணாநிதி. தவறான வார்த்தைப் பிரயோகங்களினால் மாபெரும் மதக்கலவரம் ஏற்படுவதை மத்திய அரசு தடுக்க முன்வரவேண்டும். மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் இதை புரிந்துகொள்வார்களா?

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors