தமிழோவியம்
பேட்டி : நனவுலகில் கனவுகளுடன் ஒரு நிலவு - நிர்மலா ராஜூ (3)
- மதுமிதா

சென்ற வார தொடர்ச்சி

பொறியியல் துறை குறித்து சொன்னீர்கள். உங்கள் கல்வித் தகுதி உங்களின் எழுத்து, பத்திரிகை போன்ற இதர ஆர்வங்களில் எவ்வாறு உதவுகிறது?

அண்ணா பல்கலைக் கழகத்தில் வேதிப்பொறியியலில் பி.டெக்  முடித்தபின் திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியில் எம்.டெக் பட்டம் பெற்றேன்.  படித்துக் கொண்டிருக்கும்போது இவற்றின் முக்கியத்துவம் தெரியாமல்தான் இருந்தது. படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்த புதிதிலும் கூட கற்ற கல்வியின் அருமை புரியவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் துறை மாற நேரிடும்போதெல்லாம் அதிக சிரமப்படாமல்  காலூன்ற முடிந்தபோதுதான் நான் பெற்ற கல்வியின் மகத்துவம் புரிந்தது.  சில அடிப்படைக் கூறுகள் வாழ்வின் எல்லா அம்சங்களுக்கும் பொருந்தும். நான் கற்ற கல்வி,  அப்படிப்பட்ட பல கூறுகளை எனக்குள் விதைத்துவிட்டது. தேவையான சமயங்களில் இவை எனது இதர ஆர்வங்களில் மட்டுமல்ல, நான் செய்யும் எல்லா செயல்களுக்குமே உதவியாக இருக்கின்றன.


பொறியியலில் முதுகலை வரை படித்திருக்கிறீர்கள். இது உங்கள் சிறுவயது ஆர்வமா? சிறுவயதிலிருந்தே படிப்பில் மிகவும் ஈடுபாடு உண்டா?

அம்மா ஆசிரியை என்பதால் பிறப்பதற்கு முன்பே பாடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். 3 வயதிலேயே 3ம் வகுப்பு ஆங்கிலப்பாடப் புத்தகத்தின் அனைத்துப் பாடங்களையும் பார்க்காமல் சொல்வேன் என்று அம்மா சொல்லி இருக்கிறார்கள். சிறு வயதில் நன்றாகப் படிக்கவும் செய்வேன். அதே நேரத்தில் விளையாட்டுத்தனமும் மிக அதிகம். (அந்த விளையாட்டுத்தனம் இன்று வரை தொடர்கிறது.) அந்த விளையாட்டுத்தனம் இல்லாதிருந்தால் படிப்பில் இன்னும் சாதித்திருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்.  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெண்கள் பள்ளியில் முதல் மதிப்பெண்ணும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வேதியியலில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண்ணும் பெற்றேன். கல்லூரியில் பெரிய சாதனை ஒன்றும் செய்யவில்லை என்ற வருத்தம் உண்டு. பொறுப்பில்லாமல் திரிந்த காலங்கள் அவை. ஆனால் ஒன்று - பெற்றோர்கள் ஆசிரியர்களாக இருந்தாலும் பள்ளியில் இருக்கும்போதும் சரி கல்லூரி சென்றுவிட்ட போதும் சரி - என்னைப் படிக்கச் சொல்லி நிர்பந்தித்ததுமில்லை; மதிப்பெண் குறித்து கேள்வி எழுப்பியதுமில்லை. அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த நம்பிக்கைக்கு கைமாறாய் ஏதேனும் பெரிதாய் சாதித்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்.

பொறியியல் படிக்கவேண்டுமென்று பெரிதாய் ஆர்வமெல்லாம் ஒன்றுமில்லை. நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மருத்துவமோ பொறியியலோ படிப்பது வழக்கம். எனக்கு மருத்துவத்தில் துளியும் ஆர்வமில்லாததால் பொறியியலில் சேர்ந்தேன். உண்மையாக எனக்கு சிறுவயது முதல் ஆர்வமெல்லாம் எழுத்திலும் கலையிலும்தான். 3 வயது முதல் மேடையில் ஆடியிருக்கிறேன். 8 வயதில் நடனம் அமைத்திருக்கிறேன். 7 வயதில் பாட ஆரம்பித்தேன். ஆனால் இன்றுவரை எதையும் முறையாகக் கற்றுக் கொள்ளவில்லை என்ற பெரிய மனக்குறை உண்டு.


இந்தக் கலை ஆர்வம்தான் குறும்படம் எடுக்கத் தூண்டியதா?

கலை ஆர்வம் - ஏன் தாகம் என்று கூடச் சொல்லலாம் - விபரம் தெரிந்ததிலிருந்தே இருந்து கொண்டுதானிருந்தது. ஆனால் அதனைப் பெரிதாய் செயல்படுத்துகிற தைரியம் இருந்ததில்லை. யாராவது மேடையில் ஏற்றிவிட்டால் செய்யவேண்டியதை ஒழுங்காகச் செய்வேன். ஆனால் மேடையில் ஏறும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளும் திறமை அவ்வளவாகக் கிடையாது. அப்படித்தான் குறும்பட அனுபவமும்.

நிறப்பிரிகை என்ற 5 நிமிட குறும்படம் எடுக்க நேர்ந்ததே ஒரு சுவாரஸ்யமான கதைதான். ஐரோப்பிய குறும்பட விழாவுக்காக ஒரு இணைய தளம் வடிவமைத்துக் கொடுத்தேன் . அந்த விழாவின் அமைப்பாளர் அஜீவன் அந்த விழாவிற்கு ஒரு படம் எடுத்து அனுப்பலாமே என ஆலோசனை தெரிவித்தார். 'சான்ஸே இல்லை. கொஞ்சம் கூட அனுபவம் இல்லாமல் அது சரிவராது'' என்று உதறிவிட்டேன் . ஆனால் அவர் தொடர்ந்து ஊக்கப் படுத்திக் கொண்டே இருந்தார். சுற்றிப் பார்த்ததில் ஒப்பேற்றும் அளவுக்கு நண்பர்கள் சிலரிடம் படம் எடுக்கத் தேவையான கருவிகளும் திறமையும் இருததது கொஞ்சம் உற்சாகத்தைத் தந்தது.

ஆனால் கதை வேண்டும், அதில் நடிக்க ஆள் வேண்டும். கதையை எழுதிவிட்டு ஆள் தேடி கிடைக்காமல் சிரமப் படுவதை விட நடிக்க ஆளைத் தயார் செய்துவிட்டு ஸ்கிரிப்ட் எழுதலாம் என்று முடிவெடுத்தேன். தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்த தோழி ஒருவர் தன் குழந்தைகளையும் மாணவிகளையும் நடிக்க வைக்க ஆர்வம் தெரிவித்தார்.

குழந்தைகளை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டு கதை எழுதவேண்டும். ஆனால் அது குழந்தைகளுக்கான படமாய் மட்டும் அமைந்துவிடக்கூடாது என்று எண்ணினேன். அப்படி உருவானதுதான் நிறப்பிரிகை. மத நல்லிணக்கத்தில் குழந்தைகளின் பங்கு மகத்தானதாக இருக்கும் என்று சொல்ல விழைந்தேன்.

ஷ¥ட்டிங் ஸ்பாட்டிற்கு ஒளிப்பதிவாளர் உரிய நேரத்தில் வரக் காணோம். நடிக்க வரவேண்டிய குட்டிப் பெண் வரவில்லை. வெறுத்துப் போய் கைவிட்டுவிடலாமென்ற நிலையில் ஒளிப்பதிவாளர் வந்து சேர, தன் அம்மாவுடன் வேடிக்கை பார்க்க வந்த பெண்ணை முக்கியப் பாத்திரத்தில் நடிக்க வைத்தோம் (அவள் பின்னி எடுத்துவிட்டாள் என்பது வேறு கதை). தாமதமானதால் வெளிச்சம் போய்விட்டது. வெளியில் எடுக்க வேண்டிய காட்சிகளைப் படமாக்க முடியாமல் போக, திரைக்கதையில் அவசர மாற்றம் தேவைப்பட்டது.

கேமரா ஆங்கிள், லைட் செட்டிங் எல்லாம் குத்து மதிப்பாய் வைத்து படம்பிடித்து முடித்தோம். லைவ் சவுண்ட் வேறு! 5 நிமிடப் படத்திற்கு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை பெண்டு நிமிர்த்தியது. இசைஞானமுடைய யாரும் பின்னணி இசைக்கு இல்லை. எடிட் செய்த பின்னும் காட்சிகளின் •ப்ளோ சீராக இல்லை. எப்படியோ முடித்து அனுப்பி வைத்தோம். விழாவுக்கு வந்திருந்த 83 படங்களில் 27 படங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில் நிறப்பிரிகையும் ஒன்று. கொஞ்சமும் எதிர்பார்க்காத சந்தோஷமான ஆச்சரியம்!

சினிமாவுக்குப் போகும் எண்ணமுண்டா?

இந்தியத் திரை உலகில் என்னால் காலம் தள்ள முடியாது என்பது என் எண்ணம். எனக்கு  Professionalism  மிகவும் முக்கியம். அதனை நம் திரை உலகில் எதிர்பார்க்க முடியாது. அதனால் கோடம்பாக்கம் பக்கம் தலைவைத்துப் படுப்பதாய் எண்ணம் எதுவுமில்லை - தமிழ் ரசிகர்கள் தப்பித்தார்கள்!


பெரும்பாலான உங்கள் சிறுகதைகளில் ஒரு மெல்லிய சோகம் இழையோடுகிறதே, அது எதனால்?

சக மனிதர்களின் உணர்வுகள் என்னை மிகவும் பாதிக்கும். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவருக்குத் துணை தேவையில்லை. வருத்தத்திலிருக்கும்போதுதான் அவருக்கு ஆறுதல் தேவை. அப்படிப்பட்ட பல தருணங்களில் என்னை அறியாமல் நான் என் நண்பர்களின் அருகில் இருப்பேன்.  மனிதர்களின் மெல்லிய உணர்வுகளை எளிதாய் என்னால் கிரகிக்க முடியும் என நினைக்கிறேன். அதனால் அத்தகைய உணர்வுகள் என் கதையில் முக்கியத்துவம் பெறலாம். இப்படித்தான் எழுத வேண்டும் என எழுதுவதில்லை. தானாக அப்படி அமைந்துவிடுகிறது. ஆனால் ஒரு சில நண்பர்கள் இதனை ஏற்கனெவே சுட்டிக் காட்டியதால் அப்படி ஒரு முத்திரை விழுந்துவிடக்கூடாது என்பதில் இப்போது கவனம் செலுத்துகிறேன்.

கலை தவிர வேறென்ன ஆர்வமெல்லாம் உண்டு?

ஆர்வத்துக்குக் குறைவே இல்லை. சுய முன்னேற்றம், மதம் கடந்த ஆன்மிகம், மாற்று சிகிச்சை முறைகள், குழந்தைகளின் மனோதத்துவம், கையெழுத்து ஆராய்ச்சி, மரணத்துக்குப் பின்னான வாழ்க்கை...  இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவையெல்லாம் குறித்து இன்னும் அதிகம் ஆராய்ச்சி செய்து நிறைய எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.


கவிதை, சிறுகதை, கட்டுரை, இணைய இதழ் ஆசிரியர், குறும்பட இயக்குநர், தயாரிப்பாளர், வலைப்பதிவர் இத்தனை பரிமாணங்களிலும் உங்களை நெகிழ்வித்த நிகழ்வுகள்? உங்களை ஒவ்வொன்றிலும் செம்மைப்படுத்திய அதிர்வுகள்?

நல்ல கேள்வி. ஆனால் இதற்கென தனி புத்தகமே போடலாம் என்கிற அளவுக்கு அனுபவங்கள்.

நிலாச்சாரல் ஆரம்பித்து இரு வருடங்களுக்கு பெரிய உதவியெதுவுமில்லாமல் மிகுந்த சிரமத்துக்கிடையில்தான் நடத்திக் கொண்டிருந்தேன். அவ்வப்போது எதற்கு இத்தனை சிரமப் படவேண்டும்  என்று தளர்ந்து போனதுண்டு. ஆனால் அம்மாதிரி சமயங்களில் சொல்லி வைத்தாற்போல சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் அவருடைய கட்டுரைகளை வெளியிடுவதற்கு நன்றி சொல்லி பின்னூட்டம் அனுப்புவார்கள். இது போல் பல முறை நடந்திருக்கிறது. அந்த பின்னூட்டங்களில் ஊக்கம் பெற்று திரும்பவும் முழு மூச்சுடன் ஓட ஆரம்பிப்பேன்.

அதே போல் முதன் முதல் எனக்கு பத்திரிகை ஆசிரியராக அங்கீகாரம் கொடுத்து தனது புத்தகத்திற்கு முன்னுரை எழுதச் சொன்னதும் சிவசங்கர் பாபா அவர்கள்தான்.

2005 பெண்கள் தின சிறப்பிதழுக்காக மாலன் அவர்கள் படைப்பு அனுப்பச் சொல்லி என்னைக் கேட்டது எனது எழுத்துப் பயணத்தில் ஒரு திருப்புமுனை என்றே கருதுவேன். அதன் பிறகுதான் என்னை நான் ஒரு எழுத்தாளாராக எண்ணவே ஆரம்பித்தேன். பின்பு கல்கியில் வெளிவந்த எனது குலதெய்வம் சிறுகதையைப் படித்த ஒரு கோடம்பாக்கத்து உதவி இயக்குநர் அதனைக் குறும்படமாகச் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தது பெரிய உற்சாகத்தைத் தந்தது.

குறும்படத்தைப் பொறுத்தவரை, நானே சற்றும் எதிர்பாராத அளவில் பாராட்டுகள் கிடைப்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. நான் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சென்றிருந்த போது எனது குறும்படக் குறுந்தகடு கொடுத்துவிட்டு வந்திருந்தேன். பின்பு அவர்கள் தொலைபேசியில் அழைத்து படத்தைப் பார்த்த நிர்வாக இயக்குநர் எழுந்து நின்று கைதட்டியதாகக் கூறி பாராட்டு தெரிவித்தார்கள். பின்பு கிட்டத்தட்ட என் குறும்படத்தை நான் மறந்துவிட்ட நிலையில் தமிழ்மண நட்சத்திர வாரத்தில் அதை வலையிடும் வாய்ப்பு கிடைத்தது. வலைபதிவர்களின் பின்னூட்டங்கள் அனைத்துமே எனக்கு மிகுந்த ஊக்கத்தைத் தந்தன. குறிப்பாக அன்பு அவர்களின் இந்த பின்னூட்டம்: இந்தக் குறும்படம் தயாரிப்பில் இருந்த சில சிரமங்களை நீங்கள் பட்டியலிட்டிருந்தாலும்... படம் முடிந்தபின் அதையெல்லாம் மறந்து ஒரு அருமையான கருத்தை மனதில் தைக்க கூறியுள்ளது புரிந்தது. நல்ல கருத்து, எளிமையான அதேநேரம் அருமையான காட்சியாக்கம். டைட்டில், சப்-டைட்டில், தேவையான இசை, ஒளிப்பதிவு என்று ஒரு நல்லதொரு முழுக் குறும்படமாகவே வந்துள்ளது.
நான் தொழில்நுட்பக் குறைகளைச் சுட்டிக்காட்டியிருந்ததற்கு, பெரும்பான்மையானவர்கள் கோடம்பாக்கத்து திரைப்படங்களே எவ்வளாவோ சொதப்பல்களோடு வரும்போது இதெல்லாம் ஒரு குறையே இல்லை எனக்கூறி எனக்கு பெரும் ஊக்கம் அளித்தார்கள்.

தயாரிப்பாளராக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு குழந்தைகள் நிகழ்ச்சி தயாரிப்பதற்கு முன் அந்த நிகழ்ச்சிக்கு ஒரு ஒரு நிமிட விளம்பரம் தயாரிக்கச் சொன்னார்கள். எனக்கு முன் அனுபவம் எதுவும் கிடையாது (குறும்படம் எடுப்பதற்கு முன் நடந்த நிகழ்வு இது)

குழந்தைகள் சிலரை அழைத்து வந்து நான் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது அனுபவம் மிக்க தயாரிப்பாளர் ஒருவர் மற்றொரு தயாரிப்பாளரிடம் என்னைக் குறித்து 'அவருக்கு ஒன்றுமே தெரியாதே. அவரை எப்படித் தனியாக இதைச் செய்ய அனுமதித்தீர்கள்?' என்று கடிந்து கொண்டதை நான் கேட்க நேரிட்டது. நான் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முடித்து எடிட் செய்து போட்டுக் காண்பித்த போது கடிந்து கொண்ட அதே தயாரிப்பாளர் வியந்து, 'நம் தொலைக்காட்சி வரலாற்றில் இப்படி ஒரு நல்ல விளம்பரம் வந்ததில்லை. வசதிகள் ஒன்றுமே இல்லாமல் இவ்வளவு அழகாகத் தயாரித்துவிட்டீர்கள். நீங்கள் கெட்டிக்காரி' என்று மனதாரப்பாராட்டினார். அவரது பாராட்டு எனக்கு பெரும் தன்னம்பிக்கையைத் தந்தது. அந்த விளம்பரத்தில் நடித்த குழந்தைகளுக்கு அப்படியொரு மகிழ்ச்சி. மிகவும் நுணுக்கமாக ஒவ்வொரு ஷாட்டாகச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள். அந்தப் பிஞ்சு முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியை இன்று நினைத்தாலும் பெரும் மன நிறைவு ஏற்படுகிறது.


இந்திய குழந்தைகளுக்கான விளையாட்டுகள் குறித்த உங்கள் சிந்தனை?

(தொடரும்...)

Copyright © 2005 Tamiloviam.com - Authors