தமிழோவியம்
சிறப்பு ஆசிரியர் : கடமை - ஒரு கதை!
- ஜி.கௌதம்

'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே' என்கிறது கீதை.

'கடமையைச் செய்தால் பலன் கிடைத்தே தீரும்' என்பதே இதை நான் படிக்கக் கிடைத்த பாதை!

யாருக்கு என்ன கடமை?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கடமைகள். இடம், பொருள், சூழலுக்கேற்ப கடமைகளின் காரண காரியங்களும் வேறுபடும்.

கணவனுக்கு 'நல்ல கணவன்' எனப் பெயரெடுக்க வேண்டியது கடமை. மனைவிக்கு 'நல்ல மனைவி' எனப் பெயரெடுக்க வேண்டியது கடமை. மாணவனுக்கு படிப்புதான் கடமை.

உழைப்பாளிக்கு உழைப்பு, பேச்சாளனுக்கு பேச்சு, எழுத்தாளனுக்கு எழுத்து... இப்படி கடமைகளின் வரிசை நீளமானது.

கடமையினை அளவிடுவதற்கான கதை ஒன்றை இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன். நான் எழுதி, கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்து, திருத்தப்பட்ட மறுபதிப்புக்காகத் தயாராகிவரும் 'வானமே இல்லை' என்ற புத்தகத்தில் இடம் பெறும் கதை இது..

ஆயர்பாடி...

கையும் களவுமாக, வாயும் வெண்ணையுமாக மாயக்கண்ணனைப் பிடித்துத் தண்டிக்க நினைத்தாள் தாய் யசோதா. ஒரு திட்டம் தீட்டினாள்.

உரிப்பானையில் மணி ஒன்றைக் கட்டிவிட்டாள். கண்ணன் வெண்ணெய் திருட வரும்போது பானையின் அசைவில் மணி ஓசை எழுமல்லவா, அப்போது ஓடிவந்து மடக்கிப் பிடித்து விடலாம் என்பது அவளது திட்டம்.

வழக்கம்போல் சகாக்கள் புடைசூழ வெண்ணெய் வேட்டைக்கு வந்தான் கண்ணன். பானை மீது மணியைப் பார்த்ததும் விஷயம் புரிந்துவிட்டது.

Baby Krishna ButterThief'மணியே மணியே, பசங்களுக்கெல்லாம் ரொம்பப் பசிக்கிறது. நான் வெண்ணெய் எடுத்து தரப்போகிறேன். நீ ஓசை எழுப்பவே கூடாது. இது என் கட்டளை' என்றான் கண்ணன். அடிபணிந்தது மணி.

அள்ளி அள்ளி நண்பர்களுக்கு வெண்ணெய் கொடுத்தான் கண்ணன். எல்லோரும் சாப்பிட்டு ஏப்பம் விட்ட பிறகு கடைசியாகக் கண்ணன் முறை வந்தது. கையில் வழிந்த வெண்ணெயை வாய்க்குக் கொண்டு போனான் கண்ணன்.

அவ்வளவுதான். அதுவரை அமைதியாக இருந்த மணி, 'கிணி கிணி' என ஓசை எழுப்ப ஆரம்பித்துவிட்டது.

ஆளுக்கொருவராகத் தோழர்கள் ஓடி ஒளிய, கண்ணன் கடும் கோபத்துடன் மணியைக் கேட்டான். 'நான் இட்ட கட்டளையை மீறி விட்டாயே மணியே!'

'மன்னிக்க வேண்டும் கண்ணா, உன் நண்பர்கள் சாப்பிடும் போது உன் கட்டளைப்படி அமைதி காத்தேன். ஆனால் நீ சாப்பிடும்போது என்னால் ஓசை எழுப்பாமல் இருக்க முடியாது. காரணம், நீ கடவுள். கடவுளுக்கு நைவேத்தியம் நடக்கும்போது ஒலிப்பது எனது கடமை' என்றது மணி.

'கடவுள் வந்து கட்டளையிட்டாலும் கடமையைச் செய்யத் தவறக் கூடாது' என்ற கருத்து புரிகிறதல்லவா? இதுதான் கடமைக்கான அளவுகோல்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors