தமிழோவியம்
கட்டுரை : கண்ணீர் அஞ்சலி
- சுமித்ரா ராம்ஜி

Padminiநாட்டிய பேரொளி, நடிப்பின் சிகரம் பத்மினி அவர்கள் நேற்று மறைந்தார் என்னும் துயரச் செய்தி கேட்டு அதிர்ந்து போனது அவரது நன்பர் மற்றும் ரசிகர் கூட்டம். தமிழ் திரையுலகின் பொக்கிஷமான அவர் தம் நடிப்பாலும், நாட்டியத்தாலும் பல சிகரங்களையும் பல இதயங்களையும் தொட்டவர். அழகு என்னும் வார்த்தைக்கு அர்த்தம் தந்தவர்.

தெய்வப்பிறவியிலும், சித்தியிலும், தில்லானா மோகனாம்பாளிலும் இவரின் நடிப்பு நடிகர் திலகத்தையும், நடிகவேளையும் கூட பிரமிக்க வைத்து இருக்கிறது. இந்த காலத்தை போல குரல் டப்பிங் வசதிகள் இல்லாத காலத்தில் தம் சொந்தக் குரலிலேயே பல மொழிகளில் பேசி நடித்த மாபெரும் நடிகை அவர்.

புகழின் உச்சியில் இருக்கையில் மணமுடித்து தாயாகி அமெரிக்காவில் குடித்தனம் நடத்த வந்து கூடவே பரதத்தையும் பரப்பியவர். அமெரிக்காவில் இன்று கிளை பரப்பியுள்ள பரதத்தை இங்கு வேரூன்றியவர் பப்பிம்மா என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பத்மினி அவர்கள்தான்.

இவரிடம் பேசுகையில் திரயுலகின் என்சைக்லோபீடியாவை புரட்டிப் பார்ப்பது போல் இருக்கும். தம் அசாத்திய நினைவுத் திறனினால், கோர்வையாக நம்மிடம் பகிர்ந்து கொண்ட ஆர்வம், கள்ளமில்லா அவர் நட்பு, கர்வமில்லா அவர் நடத்தை, ஒருவரையும் குற்றம் சொல்லாத அவர் பண்பு, தன் மனதை புண் படுத்தியவரிடமும் மறு கன்னம் காட்டி அவர்களை மன்னித்த பெருந்தன்மை, நம் குரல் கேட்டு அவர் அடைந்த பரவசம் அனைத்துமே அவருடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

கடந்த ஜுலை மாதம் அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பாக நியூ யார்க்கில் பெட்னாவிலும், மற்றும் நியு ஜெர்சியிலும் அவரை கவுரவிக்க ஒர் வாய்ப்பு நமக்கு கிடைத்தது நமக்குப் பெருமை.

அமெரிக்காவில் அவர் வாழ்ந்த நாட்கள் நம்மால் மறக்க முடியாதவை. பல லட்சக்கணக்கான இதயங்களில்sivaji ganesan, Padmini வாழும் அந்த நாட்டியப் பேரொளி தாயகத்தில் மறைந்தது அதுவும் கேரளாவில் பிறந்த அவரை வளர்த்து வாழ வைத்த தமிழ்க் காற்றில் அவர் கடைசி மூச்சு கலந்தது கடவுளின் அருள் என்றே சொல்ல வேண்டும். அங்குதானே முதல்வரின் அஞ்சலியும், திரையுலகின் அஞ்சலியும் அவரை கம்பீரமாக வழியனுப்பி வைக்கும்?

உடல் நலக்குறைவினால் சற்றும் அதைரியப்படாமல், நான் வாழும் வரை ஒவ்வொரு நாளும் வாழ்வேன் சாகும் அன்று மட்டும்தான் சாவேன் என்ற வைராக்கியத்துடன் கடைசி நாள் வரை வாழ்ந்து காட்டியவர் பத்மினி அவர்கள். ஒரு பேட்டியில் அவர் சொன்னது. "அடுத்த ஜென்மத்திலும் நான் பத்மினியாகவே பிறந்து இந்த ஜென்மத்தில் நான் சாதிக்காததை சாதிக்கப் போகிறேன்".

அவரின் அடுத்த ஜென்மத்திலும் இந்த நட்பை வேண்டி கண்ணீருடன் அமெரிக்க நண்பர்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors