தமிழோவியம்
சிறப்பு ஆசிரியர் : ஓர் அதிர்ச்சி ! - நெஞ்சை உலுக்கும் நிஜம்!
- ஜி.கௌதம்

பத்திரிகையாளன் என்பவன் பெரும்பாலும் அதிர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவனாகவே இருக்க வேண்டும். இருப்பினும் அவனும் மனிதன்தானே ! எத்தனையோ அதிர்ச்சிகரமான நிஜங்களை துப்பறிந்து கட்டுரைகளாக எழுதி இருந்தாலும் என்னை அதிர்ச்சிப்படுத்திய கட்டுரைகளில் இது முக்கியமான ஒன்று. குங்குமம் வார இதழில் வெளிவந்தது. நீங்களே படித்துப் பாருங்கள் நான் ஏன் அதிர்ந்தேன் என்பது தெரியும்...

ஐயோ! ஐயோ' என அலறியது மொபைல் போன்!

எடுத்ததும் எதிர்ப்பக்கம் கதறல். "சார் ஒரே பதட்டமாக இருக்கு. என் நெஞ்சு துடிக்கும் சத்தமே என்னைக் கொன்னுடும்போல இருக்கு. ராத்திரி பூரா தூக்கமில்ல. ரெண்டு 'காம்பஸ்' மாத்திரை போட்டும் தூக்கம் வரலை'' என்றார் ஒரு ஆண் - 'குங்குமம்' வாசகர்.

"உடனே உங்களைப் பார்க்கணும்'' என்று கெஞ்சினார்.

அடுத்த சில நிமிடங்களில் அவர் முன் நான்.

நடுங்கும் விரல்களுடன் தன் பாக்கெட்டில் இருந்து கேமரா செல்போனை எடுத்து நீட்டினார். வாங்கிப் பார்த்தேன். பிறந்த குழந்தையைப் பலவித கோணங்களில் படம் எடுத்திருந்தார்.

குழந்தையின க்ளோஸ்-அப் முகங்களில் உயிருக்குப் போராடும் வலி தெரிந்தது. பசி!

சென்னையின் புறநகர்ப் பகுதியான ராமாவரத்தில் வசிக்கும் தம்பதி அவர்கள். மனைவியின் வயிற்றுக்குள் எட்டு மாத கரு.

'கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து சொல்வது சட்டப்படி குற்றம்' என்கிறது அரசு. அதெல்லாம் சம்பிரதாயச் சட்டம் தான் போலிருக்கிறது!

'உள்ளே இருப்பது ஆண் குழந்தை' என்று கூறுகிறார் ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்க்கும் டாக்டர், தயங்கியபடியே அவர் அடுத்துச் சொல்லும் அணுகுண்டு வார்த்தைகள்...

"உங்கள் குழந்தை நார்மலாக இல்லை. தலை கொஞ்சம் பெரிதாக இருக்கிறது. முதுகில் பெரிய கட்டி இருப்பதுபோல் தெரிகிறது. கால்கள் வளைந்திருக்கின்றன. உயிரோடு பிறப்பது கஷ்டம். அப்படியே பிறந்தாலும் உயிரோடு ரொம்ப நாட்கள் இருப்பது கஷ்டம்.''

துடிதுடித்துப் போகிறார்கள் கணவனும், மனைவியும்.

'கருவைக் கலைக்க முடியுமா?'

'முடியாது' என்கிறார் டாக்டர். 'எட்டு மாத சிசுவை அபார்ஷன் செய்வது முடியாத காரியம். அது தாயின் உயிருக்கே சிக்கலாகப் போய்விடும்' என்ற மருத்துவ உண்மையைச் சொல்கிறார் டாக்டர்.

வேறு வழியில்லாமல் டெலிவரி நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அந்த அப்பாவி சிசுவின் அம்மாவும், அப்பாவும்.

'வயிற்றுக்குள்ளேயே குழந்தை இறந்து விடக் கூடாதா' என கடவுளை வேண்டுகிறார்கள் உறவினர்கள் அனைவருமே.

எதிர்பார்ப்புகளையெல்லாம் எதிர்த்து உயிரோடு பிறக்கிறது குழந்தை ! டாக்டர் பயம் காட்டிய அளவுக்கு பயங்கரமாக இல்லை என்றாலும், அவலட்சணத் தோற்றம்தான்.

வேண்டா வெறுப்போடு பெற்றுப் போட்ட வாரிசு என்பதால் தாய்க்குக் கூட குழந்தையைப் பார்க்கப் பிடிக்கவில்லை. உறவுக்காரர்கள் ஒவ்வொருவராக வந்து பார்க்கிறார்கள்.

எழவு வீட்டுச் சோகம்!

'வேறு வழியில்லை. குழந்தையைக் கொன்று விடலாம்' என்ற முடிவுக்கு வருகிறார்கள் பெற்றோரே. பிரசவம் நடந்த ஆஸ்பிடலின் தலைமை டாக்டரிடம் 'தகவல்' சொல்லி விடுகிறார் குழந்தையின் அப்பா.

பாலுக்கு அழ ஆரம்பித்த குழந்தையைத் தாயின் மாருக்குக்கூட காட்டாமல் பிரித்தெடுக்கிறார்கள்.

தனி அறையில் தொட்டிலில் போட்டு விட்டுக் கதவைச் சாத்துகிறார்கள். ஒன்பது மாத கருவறைச் சிறை முடித்து உலகம் பார்க்க வெளியே வந்த அந்தப் புத்தம்புது உயிர், பசிக் கதறலுடன் தனியறைச் சிறை வைக்கப்படுகிறது!

துளியூண்டு தண்ணீர்கூட குடிக்கக் கொடுக்கவில்லை அந்தப் பச்சைக் குழந்தைக்கு.
முதல் நாள், இரண்டாவது நாள், மூன்றாவது நாள்... நகர்கின்றன நாட்கள்!

'செத்துடுச்சா' என எட்டிப் பார்ப்பதற்காக ஆயாக்கள் கதவைத் திறக்கும்போது, ஆளரவம்கேட்டு 'ங்கா' என மரணக் குரலெடுத்து அழுகிறது குழந்தை!

"அந்த அழுகைச் சத்தத்தைக் கேட்டப்ப எனக்கு ஈரல் குலை நடுங்கிடுச்சு சார்'' - அதே நடுக்கத்தோடு பேசினார் என்னை அழைத்த வாசகர்.

"என் உறவினர் ஒருத்தருக்கு அந்த ஆஸ்பத்திரியிலதான் பிரசவம் நடந்தது. பார்க்குறதுக்காக போனப்பதான் இந்தக் கொடுமை தெரிய வந்தது. நைட் ட்யூட்டி பார்க்கும் நர்ஸ்கள் அரசல் புரசலா ஏதோ பேசிக்கிட்டதைக் கேட்டதும் எனக்கு லேசா சந்தேகம் வந்தது. அதுக்கேத்த மாதிரி ஒரு அறையில் இருந்து ஈனஸ்வரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. துருவித் துருவி விசாரிச்சப்பதான் இந்த பயங்கர உண்மையைச் சொன்னாங்க'' என்றார். அவரது பதைபதைப்பும், பரபரப்பும் தொடர்ந்தது...

"ஒரு ஆயாவுக்கு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தோன். யாருக்கும் தெரியாம அந்தக் குழந்தைக்கு ஏதாச்சும் குடிக்கக் கொடுக்கச் சொன்னேன். 'மாட்டேன்'னுட்டாங்க. ஆறாவது நாள்வரை அழுது ஓய்ந்த அந்தக் குழந்தை அப்புறமா அகோரமாக கத்தியிருக்கு. பயந்து போன ஒரு நர்ஸ் க்ளுகோஸ் வாட்டரைக் கொஞ்சம் குடிக்கக் கொடுத்துட்டாங்களாம். அடுத்த நாள் விஷயத்தைக் கேள்விப்பட்ட டாக்டர்கள் கோபத்துல கத்தியிருக்காங்க. 'அந்தக் குழந்தை அதுவா சாகட்டும். அந்தப் பாவம் நமக்கு  வேணாம்னு நாங்க நினைக்கிறோம். நீங்க என்னடான்னா... க்ளுகோஸ் கொடுக்குறீங்க. இப்ப இருக்கும் நிலையில அந்தக் குழந்தைக்கு ஒரு ஸ்பூன் க்ளுகோஸ் கிடைச்சாலும் ரெண்டு மூணு நாள் தாக்குப் பிடிக்கும்'னு திட்டினாங்களாம் டாக்டர்கள்.''
- பேசப் பேச முகமெல்லாம் வியர்த்து வழிந்தது அவருக்கு.

"எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. ஆனா, ஏதாவது பண்ணனுமேன்னு தோணுச்சு. யாருக்கும் தெரியாம அந்த ரூமுக்குப் போயி என் மொபைல் போன்ல படமெத்துக்கிட்டேன். ஒரு ஆயாம்மா அதைப் பார்த்து சத்தம் போடவும் ஓடி வந்துட்டேன். ராத்திரி பூரா மரண வேதனை அனுபவிச்சுட்டேன். நீங்கதான் ஏதாச்சும்...' வெடித்துக் கதறினார் வாசகர்.

அவரது பரபரப்பும் பதட்டமும் எனக்குள்ளும் 'திகுதிகு'வெனப் பற்றிக் கொண்டது.

'இது எப்ப நடந்தது?'

"நேத்து நைட்டுதான் சார். குழந்தை பிறந்து நேத்தோட எட்டு நாளாச்சுன்னாங்க.''

தொண்டு நிறுவனம் நடத்திவரும் நண்பர் ஒருவருக்குப் பேசினேன்.

"குழந்தையை மீட்டுக்கிட்டு வாங்க. அது எவ்வளவு அவலட்சணமா இருந்தாலும் நான் காப்பாத்திக்கறேன்'' என்றார் அவர்.

அடித்துப் பிடித்துக் கொண்டு அந்த ஆஸ்பிடலுக்கு ஓடினேன்.

ப்ச்.. எது நடந்து விடக் வடாது என்று நமது மனது கிடந்து அடித்துக் கொண்டதோ அது நடந்து விட்டது!

"அதுவா.. பிறந்ததுமே அந்தக் குழந்தைக்கு ஜான்டிஸ். காலைலதான் செத்துடுச்சு!'' என கூசாமல் சொன்னார்கள் அந்தத் தனியார் மருத்துவமனையில்.

'குழந்தை பிறந்த மூன்றாவது நாளே டிஸ்சார்ஜ் செய்து கொண்டு போய் விட்ட பெற்றோர், திரும்ப வந்து உடலை வந்து வாங்கிக் கொண்டு போய் விட்டனர்' என்ற தகவலும் கிடைத்தது.

விவரம் விசாரித்துக் கொண்டு மயானத்திற்கே விரைந்தேன்.

"அடப்போங்கப்பா நீங்க வேறு! குழந்தைக்கு மலேரியாவாம். செத்துப் போச்சு. டாக்டர் சர்டிஃபிகேட் இருக்கு. அப்பாரு வந்து பிணத்தை கொடுத்தாரு. புதைச்சுட்டேன். எத்தனை தடவை கேட்டாலும் இதான் என்னோட பதில்!'' என்றார் போதை வாயுடன் இருந்த சுடுகாட்டுப் பணியாளர்.

பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உண்மையையும் சொன்னார்...

"அந்தக் குழந்தை அசிங்கமாத்தான்ப்பா இருந்துச்சு. அந்த உடம்போட பிறந்து, இந்தப் பூமியிலே அது கிடந்து கஷ்டப்படணுமா சொல்லு. சரிவிடு. அதோட தலையெழுத்து அப்படித்தான்'' என்றார் நம்மைத் தேற்றும் மனநிலையுடன்.

எனக்குத் தெரிந்த குழந்தை நல மருத்துவர் ஒருவரிடம் பேசினேன்...

"போட்டோக்களை வெச்சுப் பார்க்குறப்ப... அந்தக் குழந்தைக்கு இருந்த கோளாறுக்கு Spinabifida-ன்னு மருத்துவ ரீதியான பெயர். நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு. குணமாக்க நிறைய செலவாகும். செலவழிச்சாலும் பூரணமா குணமாகிவிட வாய்ப்பில்லை'' என்றார் டாக்டர்.

அப்படியானால் கொல்லப்படுவதற்காகத்தான் உதித்ததா அந்தப் பிஞ்சு?

அடப்பாவிகளா?

அந்த அப்பாவிக் குழந்தையைக் கொன்ற பாவி யார் ?

அதை அசிங்கமாகப் பெற்றெடுத்த அம்மாவா ?

கொல்லச் சொன்ன அப்பாவா ?

பட்டினிச் சிறை வைத்த டாக்டர்களா ?

ஓர் இரவு தாமதித்து நம்மிடம் தகவல் சொன்ன அந்த வாசகரா ?

அல்லது... ஒன்பது மாதங்கள் கருவாகி ஒன்பதே நாளில் அதை இறக்கச் சபித்த ஆண்டவனா ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors