தமிழோவியம்
சிறப்பு ஆசிரியர் : ஓர் அனுபவம் ! - நினைக்கவும் தயாரில்லை!
- ஜி.கௌதம்

Vikatan Logoஆனந்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்துக்கு விண்ணப்பம் அனுப்பி, முதல் கட்டத்தில் தேர்வாகி, இரண்டாம் கட்டமாக மதுரையில் நடந்த எழுத்துத் தேர்வில் கலந்துகொண்டு, அதையும் கடந்து, மூன்றாம் கட்டமாக விகடன் அலுவலகத்தில் நடைபெற இருந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்தேன்.

'752 அண்ணாசாலை'. வாழ்வில் மறக்க முடியாத விலாசம். வரவேற்பறையில் நானும் தேர்வுக்காக வந்திருந்த இன்னும் சில நண்பர்களும் காத்திருந்தோம்.

கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நேரம் காலை பத்து மணி. பத்தாக பத்து விநாடிகள் இருந்த சமயம் அலுவலக உதவியாளர் வந்து அழைத்தார். ராக்கெட் போல எழுந்து எல்லோரும் உள்ளேறினோம்.

கைகாட்டப்பட்ட அறைக்குள் கோயில் கருவறைக்குள் நுழையும் பக்தர்களைப்போல் நுழைந்தோம்!

கதவுக்கு அந்தப்பக்கம் ஊட்டிக் குளிர்! ஏ.ஸி. ஜில்!

வாங்க வாங்க" என்றபடியே எழுந்து நின்று வரவேற்றார் ஒருவர். அந்தக் காலத்து 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' ஜெய்சங்கர் சாயலில் ஸ்மார்ட் ஆக இருந்தார் மனிதர். 'யார் இவர்? அவராக இருக்குமோ?! இவராக இருக்குமோ?!' என்றெல்லாம் நானும் யோசிக்க ஆரம்பிக்க, அவராகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்..

'வணக்கம். நான் பாலசுவாமிநாதன். ஜெனரல் மேனேஜர். ஜூனியர் விகடனில் ஸோனா என்ற பெயரில் பிசினஸ் கட்டுரைகளும், ஆனந்த விகடனில் சிறுகதைகளும் எழுதியதுண்டு." என்றவர், எங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்தார். அதற்கு முன்பாகவே 'ஸீட்'களை 'டேக்'கிக்கச் சொன்னார். வரிசையாகப் போடப்பட்டிருந்த இருக்கைகளில் பட்டும் படாமலுமாக ஒட்டிக் கொண்டோம்.

அறிமுகப்படலம் முடிந்ததும் தொடர்ந்தார்.. 'ஆயிரக்கணக்கானோர் அப்ளை செய்து, அதிலிருந்து திறமையின் அடிப்படையில் தேர்வான ஒரு சிலரே இங்கே  வந்திருக்கிறீர்கள். நீங்கள் என்ன ஜாதி, என்ன மதம் என்பதெல்லாம் விகடனுக்குத் தெரியாது. விகடன் குடும்பத்துக்கு நல்வரவு!"

நறுக் என ஒரு பத்து நிமிடங்கள் பேசினார். மாடியில் வேறு அறையில் நடைபெற இருந்த குரூப் டிஸ்கஷனுக்கு வழியனுப்பி வைத்தார். மந்திரித்துவிட்ட கோழிகள் கணக்காக தெம்போடு படியேறினோம்!

படியிறங்கினேன். என் தோள்களில் கை போட்டபடியே பாலசுவாமிநாதனும் இறங்கிக் கொண்டிருந்தார்! இது நடந்தது ஆறு வருடங்கள் கழித்து!

கீழ்த்தளத்தில் ஸ்டுடியோ இருந்தது. அங்கே இன்னும் சிறிது நேரத்தில் ஷூட்டிங் ஆரம்பம்! கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன் தன் குழுவினருடன் படப்பிடிப்புக்காகக் காத்திருந்தார். மூன்று கேமராக்கள். நான் தான் இயக்குநர். பாலசுவாமிநாதன் தயாரிப்பாளர்.

எங்களுக்குள் இருந்தது இயக்குநர் - தயாரிப்பாளர் உறவைக் கடந்த சினேகம். என்னையும் தனது நெருங்கிய நண்பர்கள் வரிசையில் சேர்த்துப் பெருமைப் படுத்தியிருந்தார் அவர். தான் சிகரெட் பற்றவைக்கும்போது 'இத்தோட தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஒன்பது சிகரெட் ஆகிடுச்சு, எப்போ கடனைத் திருப்பித் தர்றதா உத்தேசம்?!" என கிண்டல் பண்ணியபடியே எனக்கும் ஒன்றை எடுத்துத் தருவார்.

உருவு கண்டு எள்ளாமல் நட்பு பாராட்டிய இவர் போல பலர் இருக்கிறார்கள் என் வெற்றிகளுக்குப் பின்னால்.

அவரது தயாரிப்பில் எனது இயக்கத்தில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விஜய் டி,வி.யிலும் ஜெயா டி.வி.யிலும் ஒளிபரப்பாகியிருக்கின்றன. ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து இருவரையும் பேசவைத்து 'மேக்கிங் ஆஃப் வந்தேமாதரம்' கூட எடுத்திருக்கிறோம்.

சரி, பாலசுவாமிநாதனை அறிமுகப்படுத்துகிற சாக்கில் ஓவராகவே சுயபுராணம் பாடியாகி விட்டது!

அவர் இப்போது ஜெயா டி.வி.யின் துணை தலைவர். நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் இவரிடமிருந்து. உதாரணத்துக்கு ஒன்று..

ஒரு மாலை வேளை.. பாலசுவாமிநாதன் அவர்களின் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கழுகு கணக்காக வட்டமிடும் மொச்சைக்கொட்டை சைஸ் கொசுக்களைச் சமாளிப்பதற்காக காலில் கொசுவிரட்டிக் களிம்பைப் பூசிக்கொண்டு சுவாரசியமாகப் பேசினோம்.

ஒரு கட்டத்தில் ஆயுள் காப்பீடு, அதாங்க லைஃப் இன்ஷூரன்ஸ் பற்றி பேச்சு வந்தது. 'என் பெயரில் இரண்டு பாலிஸி எடுத்திருக்கிறேன். மனைவி பெயரில் ஒரு பாலிஸி. குழந்தை பெயரில் எடுக்க வேண்டும்" என்றேன்.

'நான் நாலைந்து பாலிஸிகள் எடுத்திருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் என் பெயரில் மட்டுமே. வீட்டில் வேறு யார் பெயரிலும் நான் இன்ஷூரன்ஸ் செய்வதில்லை" என்றார்.

'இதென்ன சுயநலம்! வரி விலக்குக்காக இப்படிச் செய்கிறாரோ?' என எனக்குள்ளாக யோசித்தபடியே, 'ஏன்?" என்றேன் வெளியே.

'இன்ஷூரன்ஸ் பண்றதோட தாத்பர்யம் என்ன கௌதம்?" எனக் கேட்டுவிட்டு அவரே பதிலையும் சொன்னார்.. 'யார் பேர்ல பாலிஸி செஞ்சுக்கறோமோ அவரோட உயிருக்கு ஏதாவது ஒண்ணு ஆகிடுச்சுன்னா, அந்தப் பணம் நாமினிக்குக் கிடைக்கும்."

'ம்"

'என் மனைவிக்கோ அல்லது குழந்தைகளுக்கோ ஏதாவது ஒண்ணு நடந்து, அந்தப்பணம் எனக்குக் கிடைக்கணுமா? அப்படி ஒரு சூழ்நிலையில எனக்கு அந்தப்பணமா முக்கியம்?"

'..."

'நான் இருக்கவரை என் மனைவியையும் குழந்தைகளையும் நல்லபடியா கவனிச்சுப்பேன். ஒருவேளை எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துடுச்சுன்னா, என் பெயரில் இன்ஷூரன்ஸ் செய்யப்படும் பணம் என் குடும்பத்துக்கு பயன்படட்டும்."

'.."

'ஆனா.. 'அவங்களுக்கு ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்தால்' என நினைத்து அதற்காக பாலிஸி செய்து வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி நினைக்கக் கூட நான் தயாராக இல்லை"

நல்ல கணவனாக, நல்ல தந்தையாக, மிக நல்ல மனிதநேயராகப் பேசிய பாலசுவாமிநாதனை நெகிழ்ச்சியோடு பார்த்தேன் நான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors