தமிழோவியம்
தராசு : பள்ளி மாணவர்களுக்கு போதைப் பழக்கமா?
- மீனா

புதுதில்லிப் பகுதிகளில் பள்ளி மாணவர்களிடையே போதைப் பழக்கம் பரவி வருவதாகவும் போதை பழக்கத்திலிருந்து விடுபடவைக்கும் மருத்துவ மையங்களில் தற்போது பள்ளி மாணவர்களும் அதிக அளவில் இடம் பிடித்திருப்பதாகவும் பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன. இந்த லட்சணத்தில் தில்லி வசந்தவிகார் பகுதியில் போதை மருந்துகள் விற்றதாக குற்றம்சாட்டப்பட்டு நைஜீரிய தூதரக அதிகாரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளானாம். இவனிடம் விசாரித்ததில் தில்லியில் உள்ள பலருக்கும் தான் போதை மருந்துகள் விற்றதை ஒப்புக்கொண்டுள்ளானாம்.

மாணவர்கள் ஏழாவது எட்டாவது படிக்கும்போதே பெற்றோரிடமிருந்து பணம் வாங்கி தாராளமாக செலவழிக்கிறார்கள். இதுதான் போதைப்பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகக் காரணமாக இருக்கும் முதல் விஷயம் என்று மனோதத்துவ மருத்துவர் சமீர் கூறியுள்ளார். பெற்றோர்களைக் குற்றம் சாட்டும் தொனியில் சமீர் கூறியிருப்பது சரிதானா என்று ஆராய ஆரம்பித்தால் நிச்சயமாக முதலில் நாம் குற்றம் கூற வேண்டியது பெற்றவர்களைத் தான். இன்றைய நாகரீக சூழ்நிலையில் பெற்றவர்கள் இருவருமே வேலை பார்க்கும் நிலையில் பிள்ளைகளின் மீதான அவர்களது கவனம் வெகுவாகக் குறைகிறது. தன் பிள்ளையைத் தன்னால் சரியாக கவனிக்க முடிவதில்லையே என்ற குற்ற உணர்சியால் தூண்டப்படும் இவர்கள் அளவான அன்பையும் பாசத்தையும் பிள்ளைகள் மீது பொழிவதற்கு பதிலாக பிள்ளைகளுக்கு தேவைக்கு மீறிய அளவிற்கு பணத்தைக் கொடுத்து தங்கள் குற்ற உணர்சியை மறைக்க வடிகால் தேடுகிறார்கள். விளைவு - அதீத பண வரவால் முன்பெல்லாம் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கதை முடிந்து இன்று பள்ளி மாணாவர்களே போதைக்கு அடிமையாகி நிற்கிறார்கள்.

மேலும் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர் மாணவர்கள் நலனில் எடுத்துக்கொள்ளும் அக்கறை வெகுவாக குறைந்துகொண்டே வருவதும், பள்ளிகளுக்கு அருகிலேயே பான்பராக், குட்கா போன்ற ஆரம்ப நிலை போதை வஸ்துக்கள் விற்கும் கடைகள் பெருகிவருவதும், இத்தகைய கடைகளை அகற்ற சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் போதிய அக்கறை காட்டாததும் குறிப்பிடவேண்டிய காரணங்களாகும்.

பெரியவர்களிடையே பரவியிருக்கும் போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதே கஷ்டமாக இருக்கும் இக்காலகட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே பரவி வரும் போதைப் பழக்கத்தை நாம் எவ்விதம் கட்டுப்படுத்தப்போகிறோம்? பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அளவான அன்பு மற்றும் கண்டிப்பிற்குத்தான் இந்நிலையை மாற்றும் சக்தி உள்ளது. தங்களுடைய பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றவர்கள் சற்று கூர்ந்து கவனித்தாலே பிள்ளைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றம் துல்லியமாகத் தெரிந்து விடும். ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் நடவடிக்கையைக் கண்காணிக்க தினமும் சிலமணித்துளிகள் செலவழித்தாலே போதும். உள்ளங்கை நெல்லிக்கனியென மாணவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தை கண்டுபிடிக்கலாம். இவை எல்லாம் பிரச்சனை வரும் முன் காக்கும் நடவடிக்கைகளாகவும், பிரச்சனை வந்த உடனேயே காக்கும் நடவடிக்கைகளாகவும் அமையும்.

மேலும் மாணவர்களிடம் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் விரிவாக பேச பெற்றவர்களும் ஆசிரியர்களும் முன்வரவேண்டும். பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் ஆறுதலான அரவணைப்பான அணுகுமுறையால் மட்டுமே இந்த விதமான பழக்கங்கள் மாணவர்களிடன் தோன்றாமல் இருக்கச் செய்ய முடியும். இதை எல்லாம் விட்டுவிட்டு என் பிள்ளைக்கு போதை பழக்கம் வர அரசாங்கம் மற்றும் காவல்துறையின் அஜாக்கிரதைதான் காரணம் - அவர்கள் போதை மருந்து கும்பலைச் சரியாக தண்டிக்காததால்தான் என் பிள்ளைக்கு போதைப் பழக்கம் ஏற்பட்டது என்றெல்லாம் அடுத்தவரை குற்றம் கூறுவது சற்றும் பொருந்தாது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors