தமிழோவியம்
கட்டுரை : நம் கடமையைச் செய்கிறோமா?
- மீனா

இந்தக் கேள்வி மனதில் தோன்றக் காரணம் - ஒரு வங்கிக்குச் சென்றால் அங்கே வங்கி ஊழியர் பொறுப்பாக வேலை செய்யவில்லை என்று புகார் படிக்கிறோம். மின்சாரக் கட்டணம் செலுத்தும் இடத்தில், தொலைபேசி அலுவலகத்தில் என எல்லா நிறுவனங்களிலும், எல்லா அரசு அலுவலகங்களிலும் இதே கதைதான் தினமும் நடக்கிறது. தங்கள் கடமையைச் சரிவரச் செய்ய ஒருவரும் விரும்புவதில்லை. மெத்தனம் - அலட்சியம் இவற்றின் வெளிப்பாடே நாம் அன்றாடம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. தனியார் நிறுவனங்களில் இத்தகைய குறைபாடுகள் பொதுவில் இருப்பதே இல்லை.. அப்படி இருந்தாலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் புகார்கள் கிளம்புகின்றன.

அரசு சார்ந்த நிறுவனங்களில் மட்டும் ஏன் இத்தகைய குறைபாடுகள்? தவறு யார் பேரில்? அரசு ஊழியர்களும் பொதுத் துறை ஊழியர்களும் மட்டுமா கடமை தவறுகிறார்கள்? சிந்துத்துப்பார்த்தால் அரசே அல்லவா கடமை தவறுகிறது? நாட்டின் அஸ்திவாரமாக விளங்கும் நாடாளுமன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் பொறுப்பாக மக்களின் பிரச்சனைகளைக் குறித்து பேசி செயல்படவேண்டிய அரசியல்வாதிகள் தங்கள் கடமை தவறுவதில்லையா?

Dharmendra MPசென்ற ஆண்டு பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பல மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.க்கள் கடந்த 11/2 வருடக் காலத்தில் ஒரு முறை கூட நாடாளுமன்றத்தில் வாயையேத் திறக்கவில்லை என்கிறது சமீபத்தில் எம்.பிக்கள் குறித்து எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு. இந்த ஆய்வில் இவர்கள் குறிப்பிட்டு கூறியிருக்கும் சில மக்கள்
பிரதிநிதிகள்: தர்மேந்திரா, கோவிந்தா, ஜெயப்பிரதா போன்றவர்கள் (இவர்கள் அனைவரும் லோக்சபாவிற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்) மேலும் ராஜ்யசபா உறுப்பினர்களான சோ ராமசாமி, லதா மங்கேஷ்கர் போன்றவர்கள் ராஜ்யசாபாவிற்கே வருவதில்லையாம். மேலே குறிப்பிட்டவர்கள் மட்டுமல்லாமல்
பல லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்களும் வருடக்கணக்கில் சபையில் நடைபெறும் ஒரு விவாதத்திலும் பங்கேற்பதே இல்லை.. பங்கேற்பதென்ன சபைக்கே வருவதில்லை என்பதே நிஜம்.

எம்.பி.க்கள் லட்சணம் இதுவென்றால் நம்மூர் எம்.எல்.க்கள் மட்டும் என்ன கடமை தவறாத கண்ணியவாண்களா? கடந்த 41/2 வருடக்காலமாக சட்டசபைக்குள் நுழையாமல் வெறுமனே வந்து கையெழுத்துப் போட்டுவிட்டு 5 நிமிடத்தில் ஆதரவாளர்கள் புடைசூழ கிளம்பும் தி.மு.க தலைவரைப் பற்றி என்னவென்று சொல்வது? பொறுப்பான ஒரு எதிர்கட்சியின் தலைவராக சட்டசபைக்குள் தன் தொகுதி மக்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல் தன்னுடைய அடிப்படை உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள சும்மா ஒரு கையெழுத்தை மட்டும் போடும் இவர் உண்மையாக மக்களுக்காகப் பாடுபடுகிறாரா?

Jayapradhaஆக அரசே - அரசை நடத்தும் அரசியல்வாதிகளே தங்களது கடமைகளைச் சரிவரச் செய்வதில்லை. இவர்களது நிலையே இப்படி என்றால் இத்தகைய அரசியல்வாதிகள் எப்படி கடமைத் தவறும் அரசு அலுவலர்களை எப்படிக் கண்டிபார்கள்? நாமும் ஒவ்வொரு முறையும் இவர்களைப் பற்றியெல்லாம் ஆதங்கப்பட்டு அக்கம்பக்கத்தவரிடம் புலம்புகிறோமே தவிர உருப்படியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது கிடையாது. நமக்காக ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய வேண்டியவர் தனது கடமையிலிருந்து தவறும் போது புலம்பிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுமே செய்யாதவர்களாக இருக்கிறோமே - அவர்கள் கடமை தவறியவர்கள் என்றால் அவர்களது தவறைச் சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்தவேண்டியது நமது கடமையல்லவா? அதை செய்ய நாம் தவறும் போது நாமும் கடமைத் தவறியவர்கள் தானே? தேர்தல் நாளன்று ஓட்டுப் போடுவதையே தவிர்க்கும் நாம் இப்படி இருந்தால் கடமைத் தவறியவர்களை நாம் எப்படி தண்டிப்பது?

புலம்பிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு கடமைத் தவறிய அரசியல்வாதிகளை மறுமுறைத் தேர்ந்தெடுக்காமல் அவர்களுக்கு எதிராக ஓட்டுப் போட்டு அவர்களைத் தோற்கடித்து பாடம் புகட்டுவோம். பிறகு அரசு அலுவலர்களைத் தண்டிக்கும் வழிகளைப் பார்ப்போம். நம்முடைய வேலையை முதலில் ஒழுங்காக நாம் செய்யத் துவங்கினாலே போதும்.. நாடு திருந்திவிடும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors