தமிழோவியம்
கட்டுரை : தேரின் வரலாறு
- திருமலை கோளுந்து

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டம், சென்னை பார்த்தசாரதி கோவிலில் தேர் திருவிழா, மாங்காடு அம்மன் கோவிலில் தேர் திருவிழா, கண்டதேவி தேரோட்டம் என்று சமீபத்தில் தேர் திருவிழா பற்றிய செய்திகள் வந்தன. இந்தத் தேர் திருவிழா எதற்காக, ஏன் கொண்டாடப்படுகிறது.  தேர்கள் யாரால் செய்யப்படுகிறது என்பதை அறிய முயன்ற பொழுது அதன் வரலாறு நம்மை வியக்க வைத்தது.

தமிழக மண்ணோடும், மக்களோடும் கலந்த கலைகளில் தேரோட்டம் என்ற கலையும் ஒன்று. சிறு மலைகள் போல் காட்சியளிக்கும் தேர்களை மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுக்கும் பொழுது லேசாக ஆடி, அசைந்து வரும் தேரின் அழகை பார்ப்பதற்கு நமக்கு கோடி கண்கள் வேண்டும். பொதுவாக தமிழகத்தில் இருக்கும் அத்தனை தேர்களையும் செய்த பெருமை தமிழக கைவினை பொருட்கள் கழகத்தின் ஒரு பகுதியான பூம்புகார் நிறுவனத்தைத் தான் சேரும். இன்று தமிழகத்தில் அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் தான் தேர்திருவிழா நடைபெற்று வருகிறது. இது தவிர ஒருசில தனிநபர்கள் மற்றும் பொதுமக்களால் அறிநிலைத் துறைக்கு சொந்தமில்லாத கோவில்களிலும் தேர்திருவிழா கொண்டாடப்படுகிறது. அனைத்து கோவில்களில் தேர் செய்வதற்கு டெண்டர்கள் விடப்படும் பொழுது பூம்புகார் நிறுவனம் தான் டெண்டர்களை வெற்றிகரமாக எடுத்து தேர்களை சிறப்பாக செய்து கொடுக்கின்றன. இந்த நிறுவனத்திற்கு போட்டியாக தற்பொழுது பெல் என்ற தனியார் நிறுவனம் தற்பொழுது களத்தில் இறங்கி இருக்கிறது.

ஒரு தேரினை உருவாக்கும் பொழுது அத்தேர் சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்ட பகுதிகளுக்கு ஏற்ப உருவாக்கம் செய்யப்படுகிறது. பொதுவாக தேர்கள் மேற்சொன்ன மண்டலங்களுக்கு ஏற்ப சற்று வித்தியாசமாக காட்சி அளிக்கும். மற்றபடி தேர்கள் பொதுவான மரபுகள் படித் தான் செய்யப்படுகிறது. ஒரு தேர் உருவாக்கப் படும் பொழுது அது எந்தக் கோவிலுக்கு உருவாக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு அக்கோவிலின் மூலவர் உயரத்தையோ, கோவிலின் முகப்பு கோபுரத்தின் உயரத்தையோ, அல்லது கோவில் கருவறை விமானத்தின் உயரத்தையோ பிரதிபலிக்கும் வகையில் தேர் உருவாக்கப்படும். இப்படி தேரின் உயரத்தை 15 விதமான ஆயம், விரயம், யோகினி நட்சத்திரம் என்று இருக்கக் கூடிய முறைகளின் படியும், இதற்கென்றே இருக்கின்ற வழிகாட்டு நெறிமுறைகளை முடிவு செய்த பின்பு தான் தேர் உருவாக்கும் பணி தொடங்கும். இந்தப் பணிகள் நமது பழைய காலத்தில் இருந்த ஒருவித கணித அடிப்படையில் தான் நடைபெறுகிறது. பொதுவாக 20 முதல் 25 அடி வரை உள்ள ஒரு தேரை உருவாக்க சுமார் மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் தேவைப்படும். இப்படி உருவாக்கும் எந்தத் தேரும் ஆறு அடுக்குக்கு மேல் இருக்காது. பூதப்பார், விக்கிரகப்பார், சித்துருதளம், பெரிய அங்கனம், தேவாசனம், சிம்மாசனம் என்பது தான் அந்த ஆறு அடுக்கு.இந்த ஆறு அடுக்குகளின் உட்கட்டமைப்பாக 15 அடுக்குகள் இடம் பெறும்.  சிம்மாசனத்தில் சாமிகள் வைக்கப்படும். இந்த சிம்மாசனத்தை சுற்றி யாளிக்கட்டை, சிங்கக் கட்டை, அஸ்தியாளி ஆகியவைகளைக் கொண்டு மறைக்கபட்டு இருக்கும். அதே போல் எந்தத் தேராக இருந்தாலும் அத்தேரின் முகப்பில் இரண்டு அல்லது நான்கு குதிரைகள் மட்டுமே இருக்கும். இந்த சம்பிரதாயம் அனைத்து தேர்களிலும் நாம் காணலாம். தேர்களிலேயே வைணவ கோவில் தேர்கள், சைவ கோவில் தேர்கள் என்ற பிரிவுகள் இருக்கின்றன. சைவத் தள கோவில் தேர்களில் சிவனுக்கு கீழ் தான் பெருமாளை உட்கார வைப்பார்கள். ஆனால் வைணவ சமய தேர்களில் இம்முறை இடம் பெறாது. அங்கு கோவிலின் தெய்வங்கள் தான் இடம் பெரும். தேர்கள் தேக்கு மரத்தில் செய்யப்படுகிறது. அதன் சக்கரங்கள் இலுப்பை மரத்தால் செய்வது தான் மரபு. ஆனால் சமிபகாலமாக சக்கரத்தையும் தேக்கு மரத்தில் செய்கின்றனர். பெரும்பாலும் அனைத்து தேர்களிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட சிலைகள் செதுக்கப்பட்டு இருக்கும். இந்த சிலைகள் ஒவ்வொன்றுக்கும் தனி கதைகள் உண்டு. இவை கோவிலின் தேர் வரலாற்றில் இடம் பெற்று இருக்கும் என தேர்களை பற்றி சொல்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணிபுரியும் குருக்கள்.
 
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கின்ற தேர்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் கேட்பாரற்று தான் கிடக்கின்றன. ஆனால் தேர் திருவிழா என்ற நிகழ்வு ஆரம்பமான உடன் அத்தேர்களுக்கு தனித்துவமே வந்து விடுகிறது. தேரினை நன்கு அலங்கரித்து விழாவின் பத்தாவது நாளில், பொதுமக்கள் அனைவராலும் ஒன்று கூடி தேர் இழுத்து ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று முடிவில் தேர் இருந்த பழைய இடத்திற்கே வந்து விடப்படுகின்றன. அதன் பின் பழைய படி தேர்கள் வெயில், மழை, காற்றில் காய்ந்த படியே கிடக்கும். இப்படி இருந்தாலும் இந்த தேர் திருவிழாவில் தேர் அலங்காரத்திற்கு என்றே சில சம்பிரதாயங்கள் இருக்கின்றன. தேர் முழுவதும் அழகிய பட்டுத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு வாழை இலை கட்டி, அதன் மீது சாமிகளை வைத்து மேள தாளங்கள் முழங்க, பொதுமக்கள் அனைவராலும் ஒன்று சேர்ந்து தேர் இழுக்கப்படும் பொழுது அனைவரது முகத்திலும் ஒரு மறுமலர்ச்சியை காணலாம். தேர் திருவிழா எதற்காக கொண்டாடப்படுகிறது என்றால் கிராமத் தொழிலான விவசாயத்திற்கு தேவையான மழை பொழிய வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் நோய், நொடி இன்றி வாழ வேண்டும் என்பதற்காக கொண்டாடப்படுகிறது. அதே போல ஜாதி மதம் கடந்த ஒரு விழாவாக தேரோட்டம் இருந்து வருகிறது. பொதுவாக அந்தக் காலத்தில் தேரோட்டம் என்றால் சுமார் ஒரு மாத காலம் நடக்கும். ஆதற்கு காரணம் தேரில் தீடிரென்று அச்சு ஒடிந்து விடும். அதனை இழுப்பதற்கு கடினமாக இருக்கும். ஆனால் இப்பொழுது எல்லாம் ஒரு நாளிலேயே தேர் இழுத்து முடிக்கப்பட்டு விடுகிறது. நவீனத்துவம் இந்த தேரோட்டத்தையும் விட்டு வைக்க வில்லை. முன்பு எல்லாம் தேர் பெரிய வடங்கள் என்று சொல்லப்படும் கயிறுகனை கொண்டு தான் இழுக்கப்படும். ஆனால் இப்பொழுது வடங்கள் மக்களின் கைகளை பதம் பார்த்த விடுகின்றன என சொல்லி, இதற்கு மாற்றாக சங்கிலி வந்து விட்டது. அதே போல் முன்பு தேர் சக்கரங்கள் இலும்பை மற்றும் தேக்கு மரத்தால் மட்டுமே செய்ய்பட்டு இருக்கும். தற்பொழுது இரும்பில் சக்கரம் வந்து விட்டது. இது எல்லாம் மரபுக்கு எதிரானது என்று சொன்னாலும் அரசாங்கமும், அதிகாரிகளும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடுகின்றனர் என்கிறார் பெரியவர் சுப்பிரமணிய அய்யர்.
 
கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் நடைபெறுகின்ற தேரோட்டம் ஜாதி மதம் கடந்து நடத்தப்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். இன்று நடைபெறும் தோரோட்டம் ஜாதிய பிரிவினையை தெளிவாக காட்டுவதை நாம் பார்க்கலாம். தேரோட்டம் நடக்கும் பொழுது தேர் வேகமாக சென்று விடக் கூடாது என்பதற்காக தேரின் சக்கத்தின் பின்னால் தடி போடுவார்கள். அந்தத் தடி போடும் நபர்கள் யார் என்றால் பறையர் என்ற தாழ்த்தப்பட்ட ஜாதியினர் தான். பிற  உயர், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் தெய்வத்தின் முன்னால் நின்று தேரினை இழுக்கும் பொழுது தாழ்த்தப்பட்ட பறையர், மற்றும் பள்ளர் இனத்தவர்கள் தேருக்கு பின்னால் நின்று தடி மட்டும் தான் போட வேண்டும், அவர்களுக்கு சாமி கும்பிடும் உரிமை எல்லாம் இல்லை என்ற கொள்கை இன்று வரை நீடிக்கிறது. அதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டதேவி கோவில் தேரோட்டத்தை சொல்லலாம். தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்பாக முதல் மரியாதை எல்லாம் உயர் ஜாதியினருக்கு மட்டும் தான் வழங்குவோம் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களை தேர் இழுக்க அனுமதிக்க மறுப்பதையும், அதனை நீதிமன்றம் கூட கண்டித்து தீர்ப்பு சொல்லியும் நடைமுறை படுத்தப்பட வில்லை என்பதை கடந்த மாதம் நாம் பார்த்தோம். இதற்கு காரணம் ஆதி காலத்தில் இருந்த அரசர்கள், ஜமீன்தார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது செலுத்திய ஆதிக்கத்தை இன்று அரசும், ஜாதிய இந்துக்களும் செயல்படுத்த நினைப்பது தான் என்கிறார் விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த தொல்காப்பியன்.

தாழ்த்தப்பட்ட மக்களை தேரோட்டத்தின் போது சக்கரத்தின் பின்னால் தடி போட வைப்பது உண்மை தான். ஆனால் அதற்கு அவர்களுக்கும் தனி முதல் மரியாதை கொடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இன்று அனைத்து கோவில் தேரோட்டத்திலும் தலித்துக்கள் தேர் இழுக்கத் தான் செய்கின்றனர். இந்தப் பிரச்சினையை தீர்க்கத் தான் பெல் நிறுவனம் தேர் இழுத்துச்  செல்லப்படும் பொழுது  அதனை நிறுத்த பிரேக் முறையை அறிமுகம் செய்துள்ளது. அதனால் இனி தேரோட்டத்தில் தடி போடும் பிரச்சினை வராது. அதே போல தேரோட்டம் என்பது தமிழுக்கே உரித்தான, தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமான அழகியல். இதனை பா.கதிர் என்கிற குறும்பட இயக்குனர் இயக்கிய பொம்மை என்ற குறும்படத்தை பார்த்தால் நமக்கு தெளிவாக தெரியும். அதே போல தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் பழமைவாய்ந்த தேர்கள் பல அழிந்து விட்டன. இப்பொழுது கூட சுமார் 1000 தேர்கள் தான் தமிழகத்தில் இருப்பதாக ஒரு ஆய்வாளர் சமீபத்தில் சொல்லி இருக்கிறார். அதே போல நமது தேர்களை வெளிநாட்டில் இருந்து வந்து ஆய்வு செய்து பட்டம் பெற்ற மாணவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அதனால் நமது வரலாற்று, பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் தேர்களை பாதுகாப்பதும், அதன் வரலாற்றை நமது இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது தான் தற்பொழுது தலையாள கடமை என்கிறார் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் புகழேந்தி.

Copyright © 2005 Tamiloviam.com - Authors