தமிழோவியம்
தராசு : இந்தியா பாக். நல்லுறவு மலர்வது எப்போது?
- மீனா

பொழுது விடிந்து பொழுது போனால் பாக். அதிபர் முஷ்ராப் சொல்லும் வழக்கமான டயலாக் : " இந்தியா - பாக். நல்லுறவை ஏற்படுத்துவேன்.. ஆனால் அதற்கு இந்தியாதான் சில முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது. " இத்தகைய வரிகளையே கொஞ்சம் மாற்றி மாற்றி பேசிவருவார். தற்போது ஐ.நா விலும் இதே தொனியில் பேசியுள்ளார் பாக். அதிபர்.

பாகிஸ்தான் - இந்தியா இடையேயான நல்லுறவையே இந்த இரண்டு நாட்டு மக்களும் விரும்புகிறார்கள். இரு நாடுகளுக்கிடையே நடந்த விளையாட்டுப்போட்டிகளும், இந்தியாவில் அடிக்கடி நடைபெறும் பாக். மக்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளும் இதையே விளக்குகின்றன. இரு நாட்டு மக்கள் அளவில் பிரச்சனைகள் ஏதுமில்லை. 50 வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் சண்டைகளும், உயிரிழப்புகளும், அதிகாரப் போட்டிகளும் - இவற்றின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார இழப்புகளும் மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியா - பாக் பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை அந்த நெருப்பை அணையவிடாமல் பாதுகாத்து வருபவர்கள் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளும் அவர்களுக்கு எல்லாவிதங்களிலும் துணைபோகும் அரசியல்வாதிகளும் தான்.

நாட்டு மக்களின் நலனைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தங்களுடைய சுயலாபத்தை மட்டுமே எண்ணும் இத்தகைய கயவர்கள் கையில் அதிகாரம் இருக்கும் வரையில் இருநாடுகளுக்கிடையே முழுமையான அளவு நல்லுறவு ஏற்படுவது இயலாத காரியம். இந்தியாவுடனான நல்லுறவை வெறும் வாய் வார்த்தையாகவே நினைக்கும் இவர்கள், அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் நாட்டு மக்களின் மீதான தங்களது கட்டுப்பாடு  தளர்ந்து விடுமோ என்ற அச்சத்திலேயே நிச்சயம் நல்லுறவு ஏற்பட விடமாட்டார்கள். பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு அறையில் பத்திரிக்கைகளிடம் அதிபர் முழங்கிக்கொண்டிருக்கும்போதே அடுத்த அறையில் தீவிரவாதக் குழுக்கள் அவரைக் கொல்ல திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும். இதுதான் பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளை அடக்கும் லட்சணம்.

பாக்.கில் தற்போது நடந்துவருவது மக்களாட்சி என்ற பெயரில் ராணுவ மற்றும் தீவிரவாத ஆட்சிதான். கடந்த பலவருடங்களாகவே அரசும் பாக். உளவு நிறுவனமும் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில்தான் இயங்கிவருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். அங்கே உண்மையான மக்களாட்சி மலர்ந்தால் தான் இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவு வளரும். அதுவரை இரு நாட்டு தலைவர்களும் அமைதிக்காக அறிக்கைமேல் அறிக்கையாக விட்டுக்கொண்டிருக்கவேண்டியதுதான். பலன் ஒன்றும் இருக்காது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors