தமிழோவியம்
க. கண்டுக்கொண்டேன் : எழுத்துக்களையும் இணைக்கும். கண்டங்களையும் பிணைக்கும்
- ரமா சங்கரன்


"Incredible India"  என்ற அந்த வாசகம் எழுதப்பட்ட கையேடுகள் நூற்றுக்கணக்கில்  விதவிதமான வண்ணங்களில் விதவிதமான படங்களுடன் ஸ்டாண்டுகளில் காணப்பட்டன. கைவினைப்பொருட்களும் சில அங்கே காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. முன்பைவிட அவை கூடுதலான எண்ணிக்கையில் அவை காணப்பட்டன. அந்த வரவேற்பு அறை பொதுவில் ஒரு வானவில் தரையில் வந்து இறங்கிய காட்சிக்கூடம் போல இருந்தது. கேரளத்து இயற்கை எழில், ராஜஸ்தானின் பாலவனங்கள், அமைதி ததும்பும் இமயமலைச்சாரல், கோவாவின் கடற்கரைகள், காதல் பேசும் தாஜ்மஹால்- இப்படி பெரிய போஸ்டர்கள் தொங்கிக் கொண்டிருந்தன.

நான் ஆறு வருடங்களுக்கு முன் பார்த்த அந்த வரவேற்பு அறையின் காட்சிகளில் மாற்றம் தெரிந்தாலும் அங்கு பணிபுரியும் என் தோழி சுதா அதே இன்முகத்துடன் வெளியே வந்து  என்ன வரவேற்றார். நான் சென்றது இந்திய சுற்றுலா அலுவலகத்திற்குத்தான். முதன்முதலாக சிங்கப்பூரில் 1991ல் திறக்கப்பட்டதாக எனக்கு ஞாபகம். சிங்கப்பூருக்கு  வந்த அதன் முதல் மத்திய  அமைச்சை சேர்ந்த அதிகாரி திரு பூரி ஆவார். தமிழ்முரசில் விளம்பரம் கேட்பதற்காக அவர்கள் பங்கேற்கும் பயணக்கண்காட்சிகளில் சென்று உதவி செய்த அனுபவம் கூட உண்டு. நாங்களே சிங்கப்பூருக்கு ஏற்ற விளம்பர வரிகளைத் தேர்ந்தெடுப்போம். அப்போதெல்லாம் இந்திய சென்றால் ச·பாரி பயணம், நீர் விளையாட்டுகள், படகு விளையாட்டுகள், கைவினைப் பொருட்கள், கிராமத்து சந்தைகள், பேலஸ் ஆன் வீல்ஸ் என்னும் புது ஆடம்பர ரயில் வண்டி, தங்க முக்கோணம் என அதையே திரும்ப திரும்ப விளம்பரம் செய்வோம்.

ஆனால் இப்போது காண்பது இரண்டே சொற்கள்தான். அதுதான் "Incredible India". இந்தியாவின் பயணத்துறையில் அரசாங்கச்   செயலாளராகப் புதிதாகப் பதவியேற்றிருக்கும் திருமதி உமா பிள்ளையின் புத்தாகம் நிறைந்த சொற்கள்தான் அவை. இந்தியா தரக்கூடிய இந்த "Incredible"  அனுபவங்களைக் குறிப்பாக அதன் அண்டைநாடுகளான ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியாவில் பரப்ப வரிந்துக் கட்டிக் கொண்டு புறப்பட்டுள்ளார் திருமதி உமா. அதே ஐந்து நட்சத்திர ஓட்டல், பார்கள், கிளப், இத்தாலிய உணவைத் தேடியா நாம் இந்தியா போகிறோம்? இனி  வெளிநாடுகளில் இருந்து செல்பவர்கள் என்றால் நமக்கு ஸ்பெஷலாக கிராமத்து அனுபவங்களைக் காட்டப்போகிறார்கள். கிராமப்புற சுற்றுலாவில் இப்போது வெளிநாட்டு இந்தியா சுற்றுலா அலுவலகங்கள் கவனம் செலுத்தும். இந்த ஆண்டு "Incredible India"  கருப்பொருளின் கீழ் " வண்ணமிகு இந்தியா" மற்றும் "இந்தியாவில் மட்டுமே" என்னும் விளம்பரங்கள் இந்தியாவிலும் உலகெங்கிலும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சுற்றுலாத் துறை 15 கோடி ரூபாய் செலவில் பிபிஸி, சிஎன்என், யாஹ¥, டிஸ்கவரி சானல் போன்ற பல முன்ணனி தகவல் சாதனங்களில் விளம்பரங்களைத் தொடங்கியுள்ளன.

என் தோழி சுதா என்னிடம் "Incredible India" செய்திக் கதிர் ஒன்றையும் கொடுத்தார். இது மிகவும் பயனுள்ள செய்திகளைக் கொடுக்கிறது. வரும் வாரம் (செப் 27) இந்தியா உலக சுற்றுலா தினத்தை "விளையாட்டும் சுற்றுலாவும்: புரிந்துணர்வு, கலாசாரம், சமூகங்களின் வளர்ச்சிக்கான இரு வாழும் சக்திகள்" என்னும் கருப்பொருளில் புதுடில்லியின் பழைய கோட்டையில் மாபெரும் கலைவிழாவுடன் கொண்டாடுகிறது என்று செய்தி குறிப்பிடுகிறது. நீங்கள் வாழும் நகரங்களில் அலுவலகங்கள் இருந்தால் கட்டாயம் அதைக் கேட்டு வாங்கி படித்துப் பாருங்கள். இணை அமைச்சரான ரேணுகா செளத்திரியும், திருமதி உமா பிள்ளையும் வெகுமும்முரமாகப் பணியாற்றுக் கொண்டிருப்பது இதன் செய்திகளில் தெரிகிறது. சிங்கப்பூர் அலுவலகத்தில் கணப்பட்ட கையேடுகள் எல்லாமே புதிதாக அறிமுகம் கண்டுள்ளன என்று இதன் தற்போதைய  மேலாளர் திரு பாட்டி(Bhati) அண்மையில் தமிழ்முரசின் பேட்டியில் சொல்லியிருந்தார். கோவாவின் சர்ச்சுகள், புத்த கயா, திருவனந்தபுரம், கொல்லம் என்று பல புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்பைவிட எளிதாக சின்ன சின்ன செய்திகள் பல இவற்றில் காணப்படுகின்றன. போக்குவரத்து வசதிகள், வழிகள் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறை அலுவலகத்திற்குச் சென்றப் பின்தான் இந்தியாவில் தற்போது 26  உலக பாரம்பரிய  சின்னங்கள் உள்ளன என்நும் சரியான தகவலை  அறிந்து கொண்டேன். குஜராத்தில் உள்ள பாவாகாத்-சாம்பனெர் தொல்பொருள் பூங்கா, மும்பையின் சத்ரபதி சிவாஜி விமான நிலையம், சோழர்காலத்தில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோயில்கள் இப்போது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இத்துணை செய்திகளைத் தம்மிடம் கொண்ட சுற்றுலா அலுவலகம் பெரும்பாலும் பயணமுகவர்களாலேயே பயன்படுத்தப்படுகிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் இந்தியா செல்ல பயணமுகவர்களைத்தான் நாடுகிறோம். பயணமுகவர்கள் நம்மை சரியான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்களா? நம் பயணம் பயனுள்ள வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறதா? நாம் செல்லும் நேரங்களில் இந்தியாவில் எங்கெங்கு என்னென்ன விழாக்கள் நடக்கின்றன? என்ன புதிய சலுகைகள் கிடைக்கும்? விழாக்கால கேளிக்கை சந்தைகள் உண்டா? என்றெல்லாம் நாம் சுற்றுலாத்துறை மூலம் அறிந்து செல்லலாம். இப்போதுதான் இணையத்தில் எல்லா தகவல்களும் உள்ளனவே என்று நாம் நினைத்துக் கொண்டு சுற்றுலாத்துறை அலுவலகங்களுக்குச் செல்லாதவர்களும் உண்டு.

நான் இந்த தடவை சுற்றுலாத்துறை அலுவலகம் சென்றபோது சில சுற்றுலாத்துறை பத்திரிகைகளில் வழக்கமாக நாம் படிக்கும் பயணங்கள், உல்லாச விடுதிகள், உணவுகள் தவிர  இலக்கியம், புத்தகம், சினிமா, செய்திப்படங்கள் பற்றிய தகவல்களும்  கிடைத்தன. காசிக்கு போகாவிட்டால் நமக்குப் பிறவிப்பயன் கிட்டாது என்று சொல்லப்பட்டது போல செசிலியா மெர்லெஸ் என்னும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் "எந்த மேற்கு நாட்டவரும் கல்கத்தாவை பார்க்காமல் விட்டுவிடக்கூடாது. அப்படி விட்டுவிட்டால் வாழ்க்கைப் பற்றிய முழுமையான பார்வை கிட்டாமல் அவர்கள் இறந்தவர்கள் ஆவார்கள்." என்று சொல்கிறார். இவரைபோல இன்னும் நான்கு லத்தீன் அமெரிக்க இலக்கியவாதிகள் இந்தியாவில் தாங்கள் வாழ்ந்ததையும்  அனுபவித்ததையும் எழுதியிருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருக்குமே இந்தியா கவர்ச்சிகரமான ஆன்மீக இல்லமாகவும் இருந்திருக்கிறது. இவர்கள் தாகூரையும், அரவிந்தரையும்,. காந்தியையும் சந்தித்திருக்கிறார்கள். புரிந்துக் கொள்ள கடினமான சூன்யத்தையும் பரவசமூட்டும் கற்களையும் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்- எப்படி சாத்தியமானது? என்று வியக்கிறார்  ஆக்டோவியா பாஸ் என்பவர். இந்தியாவின் பெரிய நகரங்களில் வாழ்ந்தும், கோயில்களில் நுழைந்தும், பழமையான கனவுகளைக் கண்டும், இந்தியாவின்  சுதந்திர விழிப்புணர்வைப் பாராட்டியும் பாப்லோ நெருடா தன் உணர்வுகளை எழுதுகிறார். இப்படி இந்த  எழுத்தாளர்களையும் இந்தியாவையும் தொடர்புபடுத்தி   " Soul Connection" என்னும் iwtha செய்திப்படம்  எடுக்கப்பட்டிருக்கிறது.  இச்செய்தியாளர்கள் லத்தீன் அமெரிக்காவிற்கும் சென்று பார்த்து சில தேவையான, இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களோடு தொடர்புடைய படங்களையும் எடுத்து இதில் காட்டியிருக்கிறார்கள். சொற்களும், படங்களும், இசையும், இயற்கையும் இப்படத்தில் மொழியாலும், கலாசாரத்தாலும், பூகோளத்தாலும் வேறுபட்ட இரு கண்டங்களை தொடர்புப் படுத்திக் காட்டியிருக்கிறது.

லத்தீன் அமெரிக்காவும் இந்தியாவும் பூகோளத்தில் வேறுபட்டாலும் நம் மூளையின் பூகோளத்தில் இரண்டும் ஒன்றுதான் என்று ஒருதடவை ஜவஹர்லால் நேருவும் (1961) சொல்லியிருக்கிறார். சுற்றுலாத் துறையை பற்றித் தெரிந்து கொள்வது பொதுவாக  நம் அறிவை விரிவாக்கும் என்பது உண்மை. பெருமாள் கோயிலின் கட்டிட நிதிக்காக நடக்கவிருக்கும் குச்சிபுடி நடனநிகழ்ச்சிக்கு விளம்பரம் கேட்க நான் இம்முறை சென்றபோது புதிய தகவலையும் அறிந்து கொண்டேன்.  உல்லாசம் மட்டுமில்லை- இந்தியாவின் சுற்றுலாவில் கண்ணுக்குத் தெரியாத கருவூலங்கள் பொதிந்துள்ளன என்பதும் இலக்கியத்தையும் சுற்றுலாவையும் இணைக்க முடியும் என்பதையும் கூட அறிந்து கொண்டேன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors