தமிழோவியம்
அடடே !! : வெற்றி மேல் வெற்றி
-

Victorious Indian Teamதென் ஆப்ரிக்காவில் நடந்த முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில், டோனி தலைமையிலான இளம் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு  157 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான்,  19.3 ஓவரில் 152 ரன் எடுத்து எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது.

ரசிகர்கள், இந்தியா வெற்றி பெற்றவுடன் உற்ச்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். பட்டாசுகள் வெடித்து, தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

குறைந்த நேரம், அதிக விறுவிறுப்பு, விரைவில் முடிவு என கிரிக்கெட் ரசிகர்களுக்கு Twenty20' கிரிக்கெட் போட்டிகள் விருந்தளித்துள்ளன. உடல் வலிமையும், வேகமும், திறமையும் தேவைப்படுவதால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளை விட விறுவிறுப்பை இப்போட்டிகள் அதிகரிக்கச் செய்துள்ளன. போட்டி ஆரம்பித்த உடனே, விண்ணைத் தொடும் சிக்சர்களும், எல்லையைத் தொடும் பவுண்டரிகளும் ரசிகர் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளன. Twenty 20' போட்டிகள் மேலும் மெருகேற முக்கிய காரணம், இளம் வீரர்களை உள்ளடக்கிய அணிகள் தான்.

1983-ம் ஆண்டில் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை (60 ஓவர்களைக் கொண்ட ஒரு நாள் போட்டி) வென்றது. அதன் பிறகு தற்போது டோனி தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை (20 ஓவர் போட்டி) கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் இதுவரை தோற்றதில்லை என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்ட இந்திய அணி, உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. குறிப்பாக, அனுபவ வீரர்கள் சச்சின், கங்குலி, டிராவிட் இல்லாத நிலையில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

உலக கோப்பையை வென்ற இந்திய அணி பாராட்டு கடலில் மூழ்கி வருகிறது. அதே நேரத்தில் பரிசு மழையிலும் நனைந்து வருகிறது.

ஜார்கண்ட் ரத்னா :  ஜார்கண்ட் மாநிலத்தின் உயரிய விருதான ஜார்கண்ட் ரத்னா விருதை இந்திய கேப்டன் தோனிக்கு வழங்கி கௌரவிக்க போவதாக, அம்மாநிலத்தின் உதவி முதலமைச்சர் சுதிர் மேத்தா அறிவித்தார். இவ்விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

மார்ச் மாதம் நடந்த உலக கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றில் வெளியே வந்த போது ஆத்திரம் அடைந்த மக்கள் தோனி வீட்டு சுவற்றை இடித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors