தமிழோவியம்
பேட்டி : நனவுலகில் கனவுகளுடன் ஒரு நிலவு - நிர்மலா ராஜூ இறுதி பாகம்
- மதுமிதா

சென்ற வார தொடர்ச்சி

இந்திய குழந்தைகளுக்கான விளையாட்டுகள் குறித்த உங்கள் சிந்தனை ?

பொதுவாகவே குழந்தைகளிடம் கூடி விளையாடும் மனப்பான்மையும் வசதியும் குறைந்து வருவது போலதான் இருக்கிறது. கணினி, தொலைக் காட்சி, வீடியோ கேம்ஸ் போல ஒவ்வொரு குழந்தையும் தனித்தனியே பொழுது போக்கிக்கொள்ள சாதனங்கள் வந்து விட்டது ஒரு காரணமென்றால் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பயம் அடுத்த காரணம். இந்தியா என்றில்லை, உலகெங்கிலும் இதே நிலைதான். வீடியோ கேம்ஸ¤க்கு அடிமையாக இருக்கும் குழந்தைகள் எத்தனையோ. இந்த விளையாட்டுக்கள் எல்லாம் வன்முறை நிறைந்ததாய் இருப்பது மிகுந்த கவலையளிப்பதாகவே உள்ளது. அதிகம் வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்கு அடுத்தவர் மீதான பரிதாப உணர்ச்சி குறைவு என்பதோடு, வன்முறையை படிப்படியாக ஏற்றுக்கொள்ளும்/ கைக்கொள்ளும் மனநிலை வந்துவிடுகிறது என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

இது மட்டுமில்லாமல் இப்படி வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடைப்பதால் அந்த வயசுக்கு அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய உடற்பயிற்சியும் கிடைக்காமல் போய்விடுகிறது. அப்படியே அவுட் டோர் விளையாட்டுகளில் ஈடுபட்டாலும் கிரிக்கெட், கால்பந்து போன்ற மிகவும் சில விளையாட்டுகளிலேயே முழுகவனமும் செல்கிறது. இவை கூட சிறுவர்களுக்கு மட்டும்தான். முன்பெல்லாம் கிராமங்களில் சிறுமிகளுக்கென்று 'பாண்டி', 'பூப்பறிக்க வருகிறோம்', 'ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது', கிளித்தட்டு போன்ற எவ்வளவோ விளையாட்டுக்கள் உண்டு. இந்த விளையாட்டுக்களெல்லாம் வெறும் பொழுதுபோக்காக மட்டும் அமையாமல் பாடல், தகவல் பரிமாற்றம், கூட்டு முயற்சி போன்ற பல திறன்களை வளர்ப்பவையாக இருந்தன. இவையெல்லாம் இன்னும் அழியாமல் இருக்கின்றனவா என்றே தெரியவில்லை.

மொத்தத்தில் குழந்தை வளர்ப்பில் விளையாட்டு முக்கிய பங்கு வகிப்பதை பெற்றோரும் ஆசிரியரும் உணர்ந்து உரிய நடவடிக்கைகள் எடுப்பது நலம்.

இலண்டன் வாழ்க்கை முறையிலும் இந்திய வாழ்க்கை முறையிலும் உங்கள் பார்வையில் நீங்கள் காணும் வேறுபாடு?

இலண்டன் வாழ்க்கையில் சமூக நெருக்கடி குறைவு. நினைப்பதை, விரும்புவதைச் செய்ய சுதந்திரம் அதிகம். இந்தியாவில் நமது அனைத்து செயல்களுக்கும் நம்மைச் சுற்றி  இருக்கும் அனைவருக்கும் ஒரு கருத்து இருக்கும்.

இங்கே தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்களின் தலையீடு மிகவும் குறைவு. அதனால் இங்கே கஷ்டமென்றால் தனியாய் அல்லல்படவேண்டும். அப்படியே உதவிக்கு நண்பர்கள் வந்தாலும் அவர்களுக்கென்று ஒரு எல்லை இருக்கும். இந்தியாவில் கஷ்டமோ நஷ்டமோ குடும்பத்தில் யாராவது உதவிக்கு வந்துவிடுவார்கள்.

இலண்டனில் ஒரு ஒழுங்கு உண்டு - ரயிலில் ஏறுவதிலிருந்து புதுத் தொழில் ஆரம்பிப்பதுவரை தெளிவான விதிமுறைகள், வழிகாட்டிகள் என்று காரியங்கள் சுலபமாக நடக்கும். இந்தியாவில் எப்படி என்று உங்களுக்குத் தெரியும்.

பணியிடத்தில் இங்கு கிடைக்கும் மரியாதையை இந்தியாவில் எதிர்பார்க்கமுடியாது. இங்கு மேலாளர் பில்கேட்ஸ் ஆகவே இருந்தாலும் பணியாளரிடம் குரலை உயர்த்துவது கூட அநாகரீகமாகக் கருதப்படுகிறது. வேலை நடந்தால் சரி, அநாவசியமான தலையீடுகள் இருக்காது.

மற்றபடி, சென்னையில் கிடைக்காத சில சமாச்சாரங்கள் கூட இங்கே கிடைக்கும் - வேப்பிலை, அகத்திக்கீரை, பனங்கற்கண்டு... என்ன வேண்டுமானாலும் கிடைக்கும். எல்லாமும் கிடைத்தாலும் ஒரு இயந்திரத்தனம் வாழ்க்கையில் நிறைந்திருப்பது உண்மை. இந்திய நகர வாழ்க்கையே இப்போது அப்படித்தானிருக்கிறது என்று எண்ணுகிறேன்.

எழுத்தாளர், இணைய இதழ் ஆசிரியர், குறும்பட இயக்குநர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், வலைப்பதிவர் - இத்தனை பரிமாணங்களிலும் உங்களுக்கு ப்ரியமான பரிமாணம் எது?

இவற்றில் என்னால் ஒன்றை மட்டும் சுட்டிக் காட்ட முடியாததுதான் என் பலகீனமே. நீங்கள் குறிப்பிட்ட எல்லாத் துறைகளிலுமே எனக்குக் கொள்ளைப் பிரியம் உண்டு. எல்லாவற்றிலுமே இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்ற தாகம் இருக்கிறது. இப்படி எல்லாவற்றையும் செய்ய விழைவதில் எனக்கு எதிலும் இன்னும் முழு நிறைவு ஏற்படவில்லை. இந்த கணத்தில் 100 சிறுகதைகளும் 5 நாவல்களும், 3 ஆராய்ச்சிப் புத்தகங்களும், 10 குறும்படங்களும் செய்வதற்கான சரக்கு இருக்கிறது. ஆனால் நேரம்தான் இல்லை. இது எனக்குப் பெரிய ஏக்கமாகவே இருக்கிறது. எனக்கு ஒரு நாளைக்கு 100 மணி நேரம் என வரம் கிடைக்குமானால் மகிழ்ச்சியாயிருக்கும். 

நிலாச்சாரல் உங்களுக்கு என்ன தந்திருக்கிறது?

நிலாச்சாரலை நான் வர்த்தக ரீதியாக நடத்தவில்லை என்பது அநேகமாக அனைவரும் அறிந்ததுதான். அதனால் இந்தக் கேள்வியும் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. நிலாச்சாரல் விலைக்கு வாங்க முடியாத பல நன்மைகளை எனக்குச் செய்திருக்கிறது. ஒருவரும் அறியாத நிர்மலாவை நிலாவாக நாலு பேருக்கு அறிமுகப் படுத்தி இருக்கிறது; ஒரு எழுத்தாளாராக என்னை அடையாளம் காட்டியிருக்கிறது; ஒரு இதழாசிரியராக அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கிறது;  என் மீது உண்மையான பாசமும் அக்கறையும் கொண்ட நிலாக்குடும்பத்தைச் சம்பாதித்துத் தந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்திருக்கிறது.

வேலைப் பளுவினால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து (stress) எப்படி தப்பிக்கிறீர்கள்?

யோகா, உடற்பயிற்சி, தியானம் இவற்றிற்காக ஒவ்வொரு நாளும் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை ஒதுக்குகிறேன். தியானம் மனதை சாந்தமாக வைத்திருக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.

தவிர, விடுமுறை நாட்களில் ஓய்வுக்கும் பொழுதுபோக்குக்கும் சற்று நேரம் ஒதுக்குவதைக் கட்டாயமாக்கி வருகிறேன். பணி நாட்களிலும் குறைந்தது அரைமணி நேரமாவது பொழுதுபோக்குக்காக நேரம் செலவிடவேண்டுமென்று முயற்சி செய்து வருகிறேன்.

All work No play  என இருந்தால் இந்த அவசர யுகத்தின் நெருக்கடியிலிருந்து தப்புவது கடினம்தான்.


எழுத்து,வாசிப்பு விடுத்து வேறு பிடித்தமான பொழுதுபோக்கு, விளையாட்டு?

இசையும் நடனமும் மனதுக்கு மிகவும் பிடித்த கலைகள். சிடி ப்ளேயரோடு சேர்ந்து பாடுவது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. நல்ல நகைச்சுவையான திரைப்படங்கள் பார்ப்பதும் மிகவும் பிடிக்கும். கணவருக்கு விளையாட்டில் அதிகம் ஆர்வமாதலால் அவரோடு சேர்ந்து கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து, கோல்•ப், F1 போன்ற பல போட்டிகளைத் தொலைக்காட்சியில் காணப் பிடிக்கும். இப்போது  ஷட்டில் கற்றுக் கொண்டு அவ்வப்போது கணவருடன் விளையாடி வருகிறேன்.

இந்தப் பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலிருக்கும் மனிதர்கள் குறித்து...

இந்தப் பெண் பெரிய வெற்றி பெற்றிருப்பதாகக் கருதவில்லை. எனினும், 'இவ்வளவு செய்யறீங்க. உங்க கணவர் கண்டிப்பா நல்ல புரிதலுடன் இருப்பவராக இருக்கும்' என்று என்னிடம் சொல்லாதவர்கள் மிகவும் குறைவு. அவர்களுடைய அனுமானத்தில் துளியும் தவறில்லை. மந்திரச்சிற்பிகள் என்ற என் கட்டுரையில் இது குறித்து மிகவிரிவாகவே எழுதியிருந்தேன். சுருக்கமாகச் சொல்வதானால் இந்த மண்புழுவில் பட்டுப்பூச்சியைப் பார்த்தவர்களில் அவர் பிரதானமானவர்.

அதே சமயம், சம்பிரதாயங்களை மீறி என்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்குப் படிக்க அனுப்பிய பெற்றோர், எனக்குள் தன்னம்பிக்கையை விதைத்த ஆர்.இ.சி நண்பர்கள், இப்போது என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வத்திருக்கும் நிலாக்குழு... இப்படி பற்பல மனிதர்கள் எனது இன்றைய நிலைக்குக் காரணம் என்பதை எப்போதும் நினைவு கூர்வேன்

பன்முகங்கள் கொண்ட நீங்கள் எப்படி அடையாளம் காணப்படவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

முதலில் ஒரு அன்பான, ஆதரவான, புரிதலுள்ள மனுஷியாக. பின் சமூக அக்கறையுள்ள ஒரு இதழாசிரியராக, வாழ்க்கையைத் தொடும் எழுத்தாளராக, வித்தியாசமான தயாரிப்பாளராக, வர்த்தக ரீதியில் வெற்றி பெற்ற சாதனையாளராக... இப்படி கனவு நீண்டு கொண்டே போகிறது.

பத்திரிகைத் துறைக்கு வரவிரும்பும் வாசகர்களுக்கு என்ன சொல்லலாம்?

நான் முழுநேரப் பத்திரிகையாளர் இல்லையெனினும் எனதனுபவத்திலிருந்து நான் சொல்ல விரும்புவது, மக்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்க வல்ல அதீத சக்தி வாய்ந்த துறை இது. அதனால் சமூக அக்கறையோடும், மிகுந்த கவனத்தோடும் செயல்பட வேண்டியது அவசியம். கடின உழைப்பு, வேகம், விவேகம், மன உறுதி எல்லாம் தேவையான துறை இது. உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

கலைஞர்கள் உணர்ச்சிபூர்வமானவர்கள். பன்முகம் கொண்ட நீங்கள் எப்படி?

எனக்கும் அந்த குணம் இருந்ததுதான். உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடுகள், உணர்ச்சி வேகத்தில் எடுத்த முடிவுகள் என பல தவறுகள் செய்திருக்கிறேன். இன்னும் கூட முழுமையாக உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட முடியவில்லைதான். ஆனால் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் (Emotional Intelligence) என்பதன் முக்கியத்துவத்தை அறிந்ததன் பயனாக உணர்ச்சிகளை முறைப்படுத்துவதில் சற்று வெற்றி கண்டிருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். ஞானிகளும் ரிஷிகளும் அடையும் ஒருவித சமநிலையை அடைய வேண்டும் என்பதுதான் என் ஆவல். வாசிப்பின் மூலமும் பயிற்சிகள் மூலமும் அங்குல அங்குலமாய் முன்னேறிக் கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன்

பொதுவாழ்வில் வந்துவிட்டால் பல்வேறு விமரிசனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எப்படி சமாளிக்கிறீர்கள்?

உண்மைதான், பொதுவில் எழுத ஆரம்பித்துவிட்டால் எல்லாவிதத் தாக்குதல்களுக்கும் தயாராக இருக்கத்தான் வேண்டும். அதுவும் நமது சமுதாயம் உணர்ச்சிகரமானது. எதிர்க்கருத்து என்பதை ஜீரணிக்க சிரமப்படுவது.  எனக்குள்ளிருக்கும் தேடலின் வெளிப்பாடாக நான் அதிகம் கேள்விகள் கேட்பேன். மேம்போக்காக அல்லது விளம்பரத்துக்காகக் காரியங்கள் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லாததால் தேவையானபோது பல கோணங்களிலிருந்து ஒரு விஷயத்தை நோக்கவும் செய்வேன். எனக்கு சரியென்று தோன்றுவதை அடுத்தவரைப் புண்படுத்தாத வண்ணம் ஆனால் உறுதியோடு வெளிப்படுத்துவது எனது இயல்பு. இதனால் சில சமயங்களில் பெரும் சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டு தனிப்பட்ட தாக்குதல்களுக்கு ஆளாவதுண்டு.

அப்படிப்பட்ட சமயங்களில் நேர்மையான, ஆழமான கருத்துக்களுக்கு எனது எதிர்க்கருத்தினைப் பதிவு செய்வேன். முரண்பட்ட கருத்துக்களோடும் ஒத்துவாழலாம் என்பதே எனது கொள்கை. ஆங்கிலத்தில் 'Agree to Disagree' என்பார்களே, அதைக் கடைபிடிப்பதில் எனக்கு சிரமமில்லை. எனக்கு பச்சை வண்ணம்தான் உலகத்திலேயே சிறந்ததாகத் தோன்றலாம்; அடுத்தவருக்கு அதுவே சிவப்பு வண்ணமாக இருக்கலாம். இவை அனுமானங்களே. இவற்றில் இதுதான் சரி என்று எப்படி சொல்ல முடியும்? 'உமக்கு சிவப்பு பிடிக்கிறது,மகிழ்ச்சி. எனக்கு இன்னின்ன காரணங்களுக்காக பச்சைதான் பிடிக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டுமே!' என்பதுபோலத்தான் எனது அணுகுமுறை இருக்கும்.

ஆனால் வெட்டி வாதத்துக்கு வழி செய்யும் மேலோட்டமான எதிர்வினைகளிலிருந்து முற்றிலுமாய் விலகி நிற்பேன். எவ்வளவு தரக்குறைவான தனிமனிதத் தாக்குதலாக இருந்தாலும் பதிலுக்கு அமைதி காப்பதையே கைக்கொண்டு வருகிறேன். இத்தகைய விமரிசனங்களுக்கு விளக்கங்கள் அளிக்க முயல்வது தேவையில்லாதது என்பது எனது கருத்து. அடுத்தவர் நம்மீது பூசும் வர்ணத்தால் நமது இயல்பு மாறிவிடுவதில்லை அல்லவா? ஏன் தேவையில்லாமல் நமது ஆற்றலை இதில் செலவிட வேண்டும்?

அதே சமயம் எனது படைப்புகளின் மீதான விமரிசனங்களை ஊக்குவிக்கவே செய்கிறேன். எனது நண்பர்களிடமிருந்து கடுமையான விமரிசனங்களையே எதிர்பார்க்கிறேன். ஏனெனில் நடுநிலையான, ஆக்க பூர்வமான விமரிசனங்கள் என்னை மென்மேலும் செம்மைப்படுத்தும் என்பதே எனது ஆழ்ந்த நம்பிக்கை.


நிலாபுக்ஸ் மூலம் வெளியிடப்படும் புத்தகங்கள் சிலவற்றுக்கு பதிப்பாசிரியராகவும் பணி புரிந்திருக்கிறீர்கள். இதழாசிரியருக்கும் பதிப்பாசிரியருக்கும் இடையேயான வேறுபாடுகள் என்ன?

இரண்டிலுமே பொறுப்பு அதிகம்தான். பதிப்பாசிரியருக்கு இன்னும் வேலை அதிகம். ஆசிரியர் எழுதியதில் சொற்பிழை, பொருட் பிழை திருத்தவேண்டும்; விஷயம் நறுக்குத் தெரித்தாற்போல் சொல்லப்பட்டிருக்கிறதா என கவனிக்க வேண்டும், வாசகருக்கு ஏற்றவகையில் பொருளடக்கத்தை வெவ்வேறு அத்தியாயங்களாகப் பகுத்து ஒழுங்கு படுத்த வேண்டும், நடை சீராக இருக்க ஆவன செய்யவேண்டும், நூலின் நோக்கம் முழுமையடைந்திருக்கிறதா எனப் பார்க்க வேண்டும், சட்ட ரீதியான சிக்கல்கள் வருமா என யோசிக்க வேண்டும்; வடிவமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் - இவற்றில் பெரும்பான்மையான வேலைகள் இதழாசிரியருக்கும் உண்டென்றாலும், நூலில் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதனால் மனதை ஒருமுகப்படுத்தி பலமுறை சரிபார்க்கும் அவசியம் இதில் உண்டு.

(முற்றும்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors