தமிழோவியம்
தராசு : தூக்கில் போடுங்கள் அப்சலை
- மீனா

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்சலுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையைக் குறைக்கும் படி அவரது மனைவி ஜனாதிபதியிடம் கருணை மனு வழங்கியுள்ளார். மேலும் அப்சலின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று காஷ்மீர் முதல்வர் குலாம்நபிஆசாத் உள்பட அரசியல்வாதிகள் சிலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்திய நாடாளுமன்றத்தின் மீது கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக பிடிபட்டவன் தான் இந்த முகமது அப்சல் குரு. இவன் மீதான குற்றசாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட கீழ் கோர்ட்டு இவனுக்கு மரண தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை உச்ச நீதி மன்றமும் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து இந்த மாதம் 20-ம் தேதி தில்லி திகார் சிறையில் அப்சலை சாகும் வரை தூக்கிலிடவேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது. நாட்டின் உயிர்நாடியான பாராளுமன்றத்தில் - கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் இந்திய அரசியலின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் ஒருசேர ஒழித்துவிட நினைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஒருவனை விடுவிக்கக் கோரி தான் இன்று காஷ்மீரைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் குரல் கொடுத்து வருகிறார்கள். அவனது சொந்த மாநிலமான காஷ்மீரில் பல்வேறு போராட்டங்கள் வேறு நடந்து வருகின்றன.

ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுப்பது அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும் ஒரு தேசத் துரோகிக்காக அவனை மன்னிக்கும் படி குரல் கொடுப்பவர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? தேசத்தின் ஆணிவேரையை ஆட்டிப்பார்க்க நினைத்த பயங்கரவாதியான அவனை மன்னிக்கும்படி சொல்லும் இவர்களும் அல்லவா தேசத்துரோகிகள்? மூளையற்ற வீணர்களின் இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வரும் சேர்ந்து கொண்டது வெட்கத்திலும் வெட்கம்... யாரைத் திருப்தி செய்ய இத்தகைய போராட்டங்களில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்?

மன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்பு போன்றவைகள் அவரவர் செய்யும் குற்றங்களையும், அக்குற்றங்கள் நிகழக் காரணமாக இருந்த சூழ்நிலைகளையும் மனதில் கொண்டு தீர்மானிக்கப்படவேண்டியவை. அதற்காகவே நம் நாட்டில் பல மட்டங்களில் நீதிமன்றங்கள் அமைந்துள்ளன. ஆனால் எல்லா நீதிமன்றங்களிலும் ஒரு மனதாக அப்சலுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்சலைப் போன்ற பயங்கரவாதிகளை மன்னிக்கும் தவறை நாம் எந்தக் காலத்திலும் செய்யக்கூடாது. அன்று அவனது நோக்கம் மட்டும் நிறைவேறியிருந்தால் உலக அரங்கில் நம் நாட்டின் மானம் கப்பல் ஏறியிருக்கும்.

அப்சலுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினால் அவனால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான குடும்பத்தினருக்கு அவரால் என்ன பதில் சொல்ல முடியும்? அப்சலுக்கு ஒரு நியாயம்.. அவனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நியாயமா? மரணத்திற்கு மரணம் ஈடாகாது.. அப்சலை துக்கிலிட்டு இந்திய ஜனநாயகத்திற்கு களங்கம் ஏற்படுத்திவிடக்கூடாது என்று கூறும் ஜிலானி  தன் குடும்பத்திலிருந்து யாராவது அப்சலின் செயலில் பலியாகியிருந்தால் இதே வார்த்தைகளைப் பேசுவாரா? தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்ற பழமொழி எல்லோருக்கும் பொருந்தும்.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதால் வெறிகொண்டு ஒவ்வொரு நாட்டையும் சூறையாடி அங்குள்ள பயங்கரவாதிகளை வேரோடு பிடிங்கி எறியும் அமெரிக்க ஆளுமை மனப்பான்மை நமக்கு இல்லாவிட்டாலும் மனமறிந்து ஒரு பயங்கரவாதச் செயலைச் செய்து வசமாக மாட்டிக்கொண்ட அப்சல் போன்ற பயங்கரவாதிகளை குறைந்த பட்சம் தூக்கில் போடும் பக்குவமாவது நமக்கு வேண்டும். கூடவே இவனைப் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களையும் பிடித்து சிறையில் அடைக்கும் தைரியமும் நமக்கு வேண்டும்.

ஜனாதிபதிக்கு நம் வேண்டுகோள் இதுதான் - அப்சல் ஒன்றும் சாதாரண குற்றவாளி கிடையாது. நாட்டின் ஸ்திரத்தன்மையை அசைத்துப்பார்க்க நினைத்த ஒரு பயங்கரவாதி. இன்று இவனுக்கு நீங்கள் மன்னிப்பு வழங்கினால் நாளை மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்து நீதிமன்றத்தால் தண்டனை பெறப்போகும் இன்னொரு பயங்கரவாதி கருணை மனு போடுவான். இவர்கள் எல்லாம் ஜாம்ஜாமென்று வெளியே போகவா நம் காவல் துறையும், ராணுவமும் உயிரைக் கொடுத்து இத்தகைய கொடூரர்களைப் பிடிக்கிறார்கள்? தங்களுடைய செயல்களால் ஏகப்பட்ட உயிரை வாங்கும் - உயிரின் மதிப்பு தெரியாத இவர்களது உயிரை மன்னிக்கும் தவறை தாங்கள் தயவு செய்து செய்யவேண்டாம். இவர்களை எல்லாம் மன்னித்து ஒரு தவறான முன்னுதாரணத்தைத் தாங்கள் ஏற்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors