தமிழோவியம்
சிறப்பு ஆசிரியர் : மிகவும் பிடித்த 10 ஆசிரியர்கள்
- ராசுகுட்டி

பாறையாய் நானிருந்தேன்
உளியாய் என் ஆசிரியர்கள்
கல்வெட்டோ கால்தூசோ
அவர்தம் கை வண்ணமே!

Vanakkamஎன் வாழ்வில் நான் என்னென்ன முன்னேற்றங்கள் அடைந்தேனோ அத்தனையும் என் ஆசிரியர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கவே விரும்புகிறேன். எனக்கும் என் ஆசிரியர்களுக்கும் இடையில் எப்போதும் ஒரு நல்லுணர்வு இருந்து வந்திருக்கிறது. சில சமயம் அவை உறவாகக் கூட மலர்ந்திருக்கின்றன. ஒரு வேளை என் பிறந்த தினமும் ஆசிரியர் தினமும் ஒன்றாயிருப்பதாலோ என்று நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன். இங்கு சிறப்பாசிரியர் ஆன இந்த தருணத்தில் எனக்கு மிகவும் பிடித்த 10 ஆசிரியர்களை அவர்களை சந்தித்த கால வரிசையிலேயே நினைவு கூற ஆசைப்படுகிறேன்.

அன்னபாக்கியம் டீச்சர் : எங்கள் ஊர் கழுகுமலையில் குறைந்தது 60% சதவீத மாணவர்களுக்கு அ, ஆ, கற்றுத்தந்தவர். என் அப்பா கூட இவரிடம்தான் கற்றுக் கொண்டாராம். மிக அன்பான பெண்மணி, ஆரம்பப் பள்ளிகளில் அன்பே உருவாய் இருக்கும் ஆசிரியர்கள்தான் தேவை. பெற்றோரை விட்டு முதல் முதலாய் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வீட்டில் கிடைக்கும் அன்பும் கவனிப்பும் தேவைப்படும், அதுவும் கிராமங்களில் கண்டிப்பாக தேவைப்படும் ஒரு விஷயம் இது. இல்லையென்றால் நாம் பள்ளி செல்ல அடம்பிடிக்கையில், 'சரி பய படிச்சு என்னத்த கிழிக்கப் போறான், அப்பாவுக்கு துணையா கடை கண்ணிக்கு போய்ட்டு வந்துட்டு இருடே" ன்னு விட்டுவிடும் ஆபத்து மிக அதிகம். எப்போது ஊருக்கு சென்றாலும் தேடிப் போய் சந்தித்து விடுவேன்.

ஹிந்தி சார் : இவரென்னமோ நல்லாத்தான் சொல்லிக் குடுத்தாரு ஆனா எனக்கு கவனமெல்லாம் வேறெங்கோ இருந்ததால் பிராத்மிக், மத்யமாவோடு நின்று போனது என் ஹிந்திப் பயணம். படிக்கும்போது ஒழுங்காக மதிக்காததால்தான் எனக்கு ஹிந்தி வராமலே போயிற்றோ என்ற குற்ற உணர்ச்சியிலேயே இவரை அடிக்கடி பார்த்து மரியாதை செலுத்தப்போய், பாடங்கள் தாண்டிய செய்தி பரிமாற்றங்களில் எனக்கு மிகவும் பிடித்தவராகிப் போனார். பெயர் ராமசாமி என்று நினைக்கிறேன், ஹிந்தி சார் என்று அழைத்தே பழகி விட்டதால்... பெயரில் என்ன இருக்கிறது.

ஆறுமுகம் வாத்தியார் : ஆறாம் வகுப்பு நான் இவரிடம்தான் பயின்றேன். அறிவியல் பாடங்கள் மட்டும்தான் எடுப்பார், நாம் சாதாரணமாய் பார்க்கும் பழகும் விஷயங்களில் உள்ளொளிந்து இருக்கும் அறிவியலை எடுத்துக் காட்டி பாடத்தில் நாட்டம் உண்டு பண்ணிவிடுவார். அந்த வருடம் மட்டும் என் இருப்பிடமே ஒரு பரிசோதனைச்சாலை போல் இருக்கும். மந்திர மை, வண்ணத்துப் பூச்சி வளர்ச்சி, நியூட்டன் கோட்பாடுகள் என்று நிறைய இப்போதும் ஞாபகம் இருக்கிறது. உற்சாகமும் ஊக்கமும் எப்போதும் நிறைந்து கிடக்கும் இவரிடம். பல ஏழை மாணவர்களுக்கு புத்தகம், பரிட்சைக் கட்டணம், சீருடைகள் என்று பரிசளிக்கும் வெளிவராத நல்ல மறுபக்கமும் கொண்டவர்.

இசக்கி சார் : புளியங்குடியில் இருக்கும் இவர் இல்லத்தில் எனக்கு கிடைத்தது மூன்று மாத குருகுல வாசம். உண்மைதான் அவருக்கு கை கால் அமுக்கிவிட்டு நாங்கள் கற்றுக் கொண்டது கணிதமும் தமிழும். சைனிக் பள்ளி செல்ல பயிற்சி வகுப்புகள் நடத்துவார், நான் கடைசி நேரத்தில் சேர்ந்ததால் எனக்கு கிடைத்தது 3 மாதப் பயிற்சி மட்டுமே. விடியற்காலையே எழுந்து கணக்குகளுக்கு விடை கண்டு பிடிக்கும் வகுப்போடு ஆரம்பிக்கும் பயிற்சி இரவு 9 மணி வரை ஏதாவது வகுப்புகள், புதிர்கள், பரிட்சைகள் என்று ஒவ்வொரு நொடியும் ஏதாவது புது விஷயம் கற்றுக் கொண்டிருந்ததால் எனக்கு மிகப் பிடித்த காலகட்டம் அது. எனக்கு புதிர்களும் அதில் ஒளிந்து இருக்கும் சவாலும் எனக்கு பிடிக்கும், காரணம் கேட்டால் நான் இவரைத்தான் கை காட்டுவேன்.

rasukuttiஷீலா செரியன் மிஸ் : அன்னபாக்கியம் டீச்சரின் அனைத்துக் குணாதிசயங்களோடு இன்னும் கொஞ்சம் கருணையும் கண்டிப்பும் சேர்த்தால் இவரைப் பார்க்கலாம். அப்போதெல்லாம் சைனிக் பள்ளியில் பெரும்பாலும் கிராமத்திலிருந்து வந்தவர்கள்தான் மாணாக்கர்களாக இருப்பார்கள் எனவே ஆறாம் வகுப்பிலும் நிறைய பேருக்கு ABCD... கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கும். கையெழுத்து நன்றாக வர வேண்டும் என்று ரொம்பவும் பிரயாசைப் படுவார், கையெழுத்தை சீராக்க முயன்று வெகு சிலரிடமே தோற்றிருக்கிறார் அவர்களுள் நானும் ஒருவன் என்பதை தலை குனிந்து ஒப்புக்கொள்ள வேண்டும். வகுப்புகளில் ஏனென்றே தெரியாமல் நான் நிறைய தூங்குவேன், இப்போது வரை தொடரும் ஒரு கெட்ட பழக்கம் அது. ஆசிரியர்கள் அனைவரும் அந்த ஒரு காரணத்திற்காக என்னை அடித்து துவைக்கும் போது, இவர் ஒருவர்தான் என் தந்தையை சந்தித்து "பையனுக்கு உடல் நல ரீதியா ஏதாவது பிரச்னை இருக்கப் போகிறது மருத்துவரிடம் சென்று காண்பியுங்கள்" என்று அன்போடு பரிந்துரைத்தவர். "கொழுப்புதான்... ஒடம்புல வேறென்ன நோவு இருக்கப் போகுது"ன்னு என் அப்பா என்னை தனியாய் கவனித்தது வேறு கதை.

A.D.S : ஏ.தேவண்ண சாமி என்ற அவரின் பெயர் நிறையப் பேருக்கு தெரிந்தே இருக்காது, வரலாறு ஆசிரியர். எங்கள் பள்ளி வள்ளுவர், பாரதியார், சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என ஆறு இல்லங்களாக பிரிக்கப் பட்டிருக்கும். நான் இருந்த பாண்டியா இல்லத்தின் பொறுப்பாசிரியராக இருந்தவர். இவரை நான் நினைவில் வைத்திருப்பதற்கு காரணங்கள், நான் அதிகம் தூங்கிய வகுப்பு இது, அதிகம் அடி உதை கொடுத்தவர் இவர் அப்புறம் அவருடைய "ஸ்ப்ளெண்டர் பைக்". அவர் வண்டி மட்டும் புதிது போல எப்போதும் பளபளக்கும் வித்தையை எவருக்கும் கற்று தந்ததில்லை என நினைக்கிறேன். 

P.C : என் வாழ்வில் இந்த எழுத்துக்களை மறப்பேனா என்று தெரியவில்லை. நான் கணிணி தொடர்பான வேலையில் இருப்பதால் அல்ல, பி.சந்திரன் அவர் பெயர், எனக்கு வேதியியல் கற்றுத்தந்தவர், மிக மென்மையான பேச்சாளர், ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டு பின் பாடம் எடுப்பதில் வல்லவர். என் தூக்க வியாதியால் பாடங்கள் நிறைய கோட்டை விட்டிருக்கிறேன். ஆனால் அவரை நான் நினைவில் வைத்திருப்பது அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்காக. உயிரோடிருந்ததால் வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது, என் மீது எனக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை. அப்படிப்பட்ட தருணத்தில் என்னை நானிருந்த இல்லத்தின் கேப்டனாக அறிவித்து உன்னால் முடியும் என்று நம்பிக்கை விதைத்தவர். அவர் ஆசைப்பட்டதில் நூறில் ஒரு பங்காவது சாதித்திருப்பேனா தெரியாது ஆனால் என்னை நான், முதன் முறையாக நம்பிக்கையோடு பார்க்க வைத்தவர்.

மேரி லாலி : கல்லூரி ஆசிரியை, B.Sc பாடத்திட்டத்தில் பல்வேறு வகுப்புகள் எடுப்பார். இவர் வகுப்பை மட்டும் நாங்கள் தவற விட மாட்டோம். ஏனென்றால் பாடமே எப்போதாவது தான் நடக்கும். ஏதாவது குறும்பு செய்து பாடத்தை திசை திருப்பும் வேலைக்கென்றே வகுப்பில் நான், சந்து, காளி, தேவா, டேவிட் என்று சிலர் இருப்போம். ஆனால் எங்களையெல்லாம் சொந்த தம்பி போல் பாவித்து அன்பு செலுத்துவார். மிகுந்த இறை பக்தி மிகுந்தவர், அதை வைத்து சீண்டியே பல வகுப்புகளை வீணடித்திருப்போம். அவர் திருமணத்தில் கலந்து கொண்டது மறக்க முடியா நினைவுகளை உள்ளடக்கியது.

ஆராவமுதன் : இந்த நிமிடம் கூட நான் இவருடைய மாணவன் தான். கணிணியியலில் இவருக்கு தெரியாததும் இருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கும் அளவுக்கு அனேக விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவர். கல்லூரி பாடத்திட்டங்களுக்கு வெளியேயும் ஜாவா, லினக்ஸ் என்று எங்களுக்கு கற்பித்தவர். இவரிடம் சூரியனுக்கு கீழேயும் மேலேயும் எந்த விஷயங்களைப் பற்றி வேண்டுமானாலும் விவாதிக்க முடியும், விவாதித்திருக்கிறேன். கல்லூரியுடன் முடிந்து விடாத நட்பு மற்றும் உறவு இது. தன்னுடைய மாணவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அக்கறை கொண்டு அறிவுரை சொல்வதோடு மட்டுமல்லாது ஆக்கப்பூர்வமாய் உதவுவதையும் தொழிலாகக் கொண்டவர்.

ஸ்வர்ண அகிலா : இவர்களை இந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று இரண்டொருமுறை யோசித்த பின்னேதான் சேர்த்தேன். இன்று இந்தப் பெயரை சொல்லி இவர்களைத் தெரியுமா என்று கேட்டீர்களானால், நான் தெரியாது என்று கூட சொல்லிவிடுவேன், சமயங்களில்! அருணாக்கா என்றுதான் தெரியும் இப்போது. பகுதி நேர பாடத்திட்டத்தில் பயிலும் போது சில வகுப்புகள் எடுப்பார். கண்டிப்புக்கு பெயர் போனவர், வகுப்புகளில் கவனம் இல்லையென்றால் சுத்தமாகப் பிடிக்காது. "ப்ராக்ஸி" போடுவதற்கென்று பழகி, சண்டையிட்டு, பின் சகோதரனாய் என்னை தத்தெடுத்துக் கொண்டவர். இப்போது என்னைப் போன்றே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், என் வாழ்வில் தனிப்பட்ட அக்கறை கொண்டவர். எப்போது அறிவுரை சொன்னாலும் ஒரு 'ஆசிரியத்தொணி' தென்படும், அதற்காகவே இவர்கள் இந்தப் பட்டியலில்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors