தமிழோவியம்
பாடல்களால் ஒரு பாலம் : நான் பாடும் பாடல்
- அபுல் கலாம் ஆசாத்

தமிழில்

திரைப்படம்: நான் ஏன் பிறந்தேன்?
இசை: சங்கர் - கணேஷ்
பாடியவர்
: டி.எம்.சௌந்தரராஜன்
திரையில்
: எம்.ஜி.ஆர்., காஞ்சனா

இந்தியில்

திரைப்படம்: ஜீனே கி ராஹ்
பாடலாசிரியர்
: ஆனந்த பக்ஷி
இசை
: லக்ஷ்மிகாந்த் - பியாரிலால்
பாடியவர்: முகமது ரஃபி
திரையில்
: ஜிதேந்திரா, தனுஜா

எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் இவர்களின் இசையமைப்பில் உருவான எம்.ஜி.ஆர். பாடல்களிலிருந்து எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல், சங்கர் - கணேஷ் இசையமைப்பில் வெளிவந்த எம்.ஜி.ஆர். பாடல்களும் வழமையான எம்.ஜி.ஆர். பாணியில் அமைந்திருந்தன. அப்போதைய டூயட் பாடல்களில் ஒலித்த துள்ளல் ஒலியுடன் அமைந்த 'பொன்னந்தி மாலைப்பொழுது' (இதயவீணை), கொள்கையைப் பாடும் பாடலான 'நான் ஏன் பிறந்தேன்' (நான் ஏன் பிறந்தேன்), அப்போதைய மசாலாப் படங்களின் இலக்கணத்திலிருந்து மாற்றமில்லாத மாறுவேடப் பாடல் 'சிலர் குடிப்பது போலே நடிப்பார்' (சங்கே முழங்கு).

அந்த வகையில் சக்கரநாற்காலியில் அமர்ந்திருக்கும் இரண்டாம் கதாநாயகியின் மனதில் நம்பிக்கையை உண்டாக்கி அவளை எழுந்து நிற்கச் செய்யும் பாடல் ஒன்றும் தமிழ்த் திரை இலக்கணத்துடன் ஒட்டி வெளிவந்தது. இதனையொத்த இன்னொரு சூழலில் நாயகியை எழுந்து ஆடவைக்கும் முயற்சிக்காக 'கண்ணன் என் காதலன்' திரைப்படத்திலும் ஒரு பாடல் ஒலித்தது. அது துள்ளலான இசை, நடனத்திற்காக பியானோ இசைகூட்டி, 'பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்' என்னும் நடனப் பாடலாக ஒலித்தது. இங்கேயும் நாயகி எழுந்து நடக்கவேண்டும், ஆனால் பாடலில் துள்ளலான ஓசை இல்லாமல் அமைதியான மெட்டாக சரணத்தின் ஒவ்வொரு அடியும் வெவ்வேறு சந்தங்களில் அமைந்து கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக் கூட்டி கடைசி அடியில் பொறுமையாக வேண்டுகோள்விடுக்கும் முறையில் சந்தம் அமைந்திருக்கும்.

அவளால் நடக்க முடியாது. அவளது உலகம் அவள் அமர்ந்திருக்கும் சக்கரநாற்காலிதான். அனைத்தையுமே இழந்துவிட்டதாக நினத்து தனது உலகத்தைச் சுறுக்கிக்கொண்டு எதிலும் பிடிப்பில்லாத மனநிலையில் அவள் இருக்கும்போது அவனுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. தனது பணக்காரத் தந்தையிடம் வேலைக்கு வந்திருக்கும் மேலாளராகத்தான் அவனை முதலில் பார்க்கிறாள். அவனது செயல்கள், பேச்சு, பழகும் விதம் இவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக அவனை விரும்பத் துவங்குகின்றாள். ஆனாலும், சக்கரநாற்காலியில் அமர்ந்திருக்கும் தன்னை அவன் விரும்புவானோ என்னும் சந்தேகமும் அவள் மனதில் இருக்கின்றது. இப்படியாக காதலில் ஒருபுறமும், தாழ்வு மனப்பான்மையில் மறுபுறமுமாக அவள் மாறி மாறி சலனப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவளது பிறந்தநாள் விழா வருகின்றது.

padayappa rajiniதமிழ்த் திரையில் பணக்காரக் குடும்பத்தின் விழாக்களுக்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன அல்லவா? எத்தனையோ தொழில் நுட்ப முன்னேற்றங்கள் வந்தபோதும் இந்த விழாக்களின் பாடல் அமைப்பில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. அலங்காம் செய்யப்பட்டிருக்கும் பெரிய கூடம். தோன்றுகின்ற ஆண் பாத்திரங்கள் அவசியம் சூட் அணிந்திருப்பார்கள். அம்மா, அண்ணி போன்ற பெண் பாத்திரமென்றால் நகைக்கடை விளம்பரத்திற்கும் அவரை அப்படியே அனுப்பலாமோ என்னும்படியாக உடையும் நகையும் அணிந்திருப்பார். கையில் குளிர்பானத்தை வைத்துக்கொண்டு பேசுவதாக பாவனை செய்யும் விதத்தில் மற்றவர்கள். அன்றிலிருந்து இன்று வரையில் இதுதான் தொடர்கிறது. தங்கப் பதக்கத்தின் 'நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் பாடலாக இருந்தாலும் சரி, படையப்பாவின் 'ஓஓ ஓஓ கிக்கு ஏறுதே' பாடலாக இருந்தாலும் சரி, இந்த வரையறைக்குட்பட்டுதான் இருக்கின்றன.

அதே பின்னணியில்தான் இந்தப் பாடலும் ஒலித்தது, ஆனால், பாடலின் மையக் கருத்து பொதுவாக குடும்பத்தின் மகிழ்வைப் பாடுவதாக இல்லாமல், சக்கரநாற்காலியில் அமர்ந்திருக்கும் அவள் மனதில் நம்பிக்கையை உண்டாக்குவதாக இருந்தது. பெரும்பாலான திரைப் பாடல்கள் முதல் அடியிலேயே கதை நிகழ்வின் பின்னணியை மிகவும் தெளிவாக விளக்கிவிடும். சொன்னது நீதானா, ஒரு கொடியில் இருமலர்கள், கடவுள் அமைத்து வைத்த மேடை, இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் பாடலிலும் கதைக்களனும் பாடலுக்கான காரணமும் முதல் அடியிலேயே சொல்லப்படும்.

நான் பாடும் பாடல் நலமாகவேண்டும்
இசைவெள்ளம் நதியாக ஓடும்
- அதில்
இளநெஞ்சம் படகாக ஆடும்
(நான் பாடும் பாடல்)

தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகை பூங்கன்னம்
எங்கே நான் என்று தேடட்டும் என்னை
சிந்தாத முத்தங்கள் சிந்த
!
அவள் எந்தன் மனமேடை
தவழ்கின்ற பனிவாடை
காலம் கொண்டாடும் கவிதை மகள்
!
(நான் பாடும் பாடல்)

நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
வாராதிருந்தாலோ தனிமை
!
நிழல் போலுன் குழலாட
தளிர்மேனி எழுந்தாட
அழகே உன் பின்னால் அன்னம் வரும்
!
(நான் பாடும் பாடல்)

ஆனே சே உஸ்கே ஆயே பஹார்
ஜானே சே உஸ்கே ஜாயே பஹார்
படிமஸ்தானீ ஹை மேரி மெஹ்பூபா
மேரி ஸிந்தகானி ஹை மேரி மெஹ்பூபா
-

(முகமது ரஃபியின் குரலில் ஒலித்த இந்தப் பாடலுக்குத் தலையாட்டிய சென்னைக்காரர்கள் ஏராளம்.)

அவள் பார்வையாலே வசந்தம் வரும்
அவள் போகும்போது விலகிவிடும்
!
அழகின் பொருள் யாரோ - நானும் சொல்லவோ!
மனதின் நிழல் யாரோ - நானும் சொல்லவோ!
பல்லவியை சரியாக மொழிபெயர்க்கவேண்டுமென்றால்,

அவள் வரும்பொழுதெல்லாம்
நந்தவனம் வருகிறது
அவள் சென்றுவிட்டபொழுதெல்லாம்
நந்தவனம் சென்றுவிடுகிறது
பேரழகி
- எனக்கு விருப்பமானவள்
அவளே எனது வாழ்க்கை

இந்தப் பாடலின் இந்திப் பதிப்பைவிடவும் தமிழ்ப் பதிப்பில்தான் திரையின் சூழல் சரியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பது எனது எனது எண்ணம். ஏனென்றால், கதைக் களனின்படி நாயகன் தனக்கு எந்த உறவுகளுமே கிடையாது என பொய்சொல்லிவிட்டு வேலையில் அமர்ந்திருப்பான். பணக்காரப் பெண்ணை ஏறெடுத்துப் பார்க்கும் எண்ணம் அவனுக்குக் கொஞ்சமும் கிடையாது. அப்படி இருக்கும் சூழலில் ஒலிக்கும் இப்பாடலின் இந்திப் பதிப்பில் தொடரும் பல்லவிகளில் அவனும் அவளும் நேரத்தை மறந்து உரையாடியதான பொருள் இருக்கும்.

பீத்துஜாத்தேஹைன் தின் கட்ஜாத்தீஹை ஆங்கோன்மே ராத்தேன்
ஹம்நாஜானே க்யாக்யா கர்தேரஹ்தேஹைன் ஆபஸ்மே பாத்தேன்

பகல்கள் சென்றுவிடும்
இரவுகள் முடிந்துவிடும்
என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை அறியாமல்
நாம் பேசிக்கொண்டே இருப்போம்
!

இது மட்டுமல்லாமல் கடைசி வரிகளில் நாயகன் தனது காதலை நேரிடையாகச் சொல்வதாகவே அமைந்திருக்கும்.

சாம்னே மே சப்கே நாம் உஸ்கா நஹீ லே சக்கூங்கா
வோ ஷரம் கே வாரே ரூட் ஜாயேதோ மை க்யா கரூங்கா
பூலோன்கி மலிகா ஹை பரியோன்கி ரானி ஹை மேரி மெஹ்பூபா
மேரி ஸிந்தகானி ஹை மேரி மெஹ்பூபா


எப்படி எல்லார் முன்னிலையிலும்
அவள் பெயரை உச்சரிப்பது
அவள் வெட்கப்பட்டால் என்ன செய்வது
அவள் கோபம் கொண்டால் என்ன செய்வது
குறிப்பால் வேண்டுமானாலும் உணர்த்துகிறேன்
பூக்களின் தலைவி
தேவதைகளின் ராணி

இப்படியல்லாமல் எந்த ஒரு இடத்திலும் காதலின் தொனி ஒலிக்காமல் மிகவும் கவனமாக, அவள் சக்கரநாற்காலியிலிருந்து எழுந்து நடக்கவேண்டும் என்பதையே மையக் கருத்தாக அமைத்து ஒவ்வொரு வரிகளும் அவள் மனதில் நம்பிக்கை உண்டாக்குவதாகவே அமைந்திருக்கும் இந்தப் பாடல் வழமையான எம்.ஜி.ஆர். பாடலிலிருந்து சற்று வித்தியாசமானது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors