தமிழோவியம்
தராசு : கற்பழிப்பு குற்றம்
- மீனா

"கற்பழிப்பு  வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை வழங்க பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியமே போதும். அவரை பரிசோதித்த டாக்டரின் சாட்சியம் அவசியம் இல்லை!" என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்து உள்ளது. மேலும் கற்பழிக்கப்பட்ட பெண் மற்றும் அரசு தரப்பில் சாட்சியங்கள் உறுதியாக இருந்தாலே போதும். குற்றவாளிகளுக்கு அதன் அடிப்படையிலேயே தண்டனை வழங்கலாம். பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்த டாக்டரிடம் குறுக்கு விசாரணை நடத்தி சாட்சியம் பெறத் தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்திரவில் குறிப்பிட்டுள்ளது.

பெண்கள் கற்பழிக்கப்படும் வழக்குகளில் உச்சநீதிமன்றம் காட்டியிருக்கும் கருணைக்கு நமது நன்றிகள்.. என்றாலும் பொதுவாக கற்பழிப்பு விவகாரங்கள் நீதிமன்றங்களுக்கு வரும் போது குற்றம் சாட்டப்பட்டவர் பணபலமோ அரசியல் செல்வாக்கோ பெற்றவராக இருந்துவிட்டால் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கை நடந்தும் போக்கே அலாதியானது. மேலும் இத்தகைய பண்பலம், அதிகாரபலம் பெற்றவரால் பாதிக்கப்பட்ட பென்கள் சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவிகளாக இருந்துவிட்டால் நிலை இன்னும் மிகவும் மோசம். பாதிக்கப்பட்ட பெண்ணை குறுக்கு விசாரணை செய்கிறோம் என்ற ரீதியில் அவர்களிடம் இத்தகைய கயவர்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் கேட்கும் நாகூசும் கேள்விகளுக்கு பதில் சொல்ல கூசியே பாதிக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வழக்கைத் திரும்பப்பெறும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

முன்பெல்லாம் நீதிமன்றங்களுக்கு வரும் கற்பழிப்பு வழக்குகளே மிகக் குறைவு என்றால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெறும் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்ற நிலை மாறி தற்போது அதிக அளவில் வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவில் நீதி கிடைப்பதும் வரவேற்கத்தக்க முன்னேற்றங்கள். ஆனாலும் நாடெங்கிலும் பெருமளவில் கற்பழிப்புக் குற்றங்கள் பெருகிவருவது வருந்தத்தக்கது. என்ன தவறு செய்தாலும் தங்களைக் காப்பாற்ற தங்கள் வழக்கறிஞர்கள் எப்படியும் வழிகண்டுபிடிப்பார்கள் என்ற குற்றவாளிகளின் நம்பிக்கையையும் அதைப் பொய்யாக்காமல் எதேதோ வார்த்தை ஜாலம் செய்து அவர்களை வெளியே கொண்டு வரும் வழக்கறிஞர்கள் இருக்கும் வரை இத்தகையக் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை.

எவ்வளவோ தீர்மானங்கள் இயற்றும் உச்சநீதிமன்றம் இத்தகைய கற்பழிப்பு வழக்குகளில் குற்றவாளிகளுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களின் ஏடாகூடமான வாதங்களுக்குப் பிறகும் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யவேண்டும். எத்தனையோ குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பது நம் நீதித்துறையின் தாரக மந்திரம். ஆனாலும் மிகவும் உணர்சிப் பூர்வமான இத்தகைய கற்பழிப்பு வழக்குகளில் உண்மைக் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு எவ்விதமான தயக்கமும் காட்டாமல் அவர்களுக்கு சாதாரண தண்டனைகளை வழங்குவதை கைவிட்டு - அதிக பட்ச தண்டனைகளை நீதிமன்றங்கள் அளித்தால் தான் நாட்டில் இத்தகைய குற்றங்கள் ஓரளவிற்காவது குறையும் சாத்தியம் உள்ளது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors