தமிழோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : அனைவரையும் ஆசானாக்கு!
- எஸ்.கே


சில வருடங்கள் முன்பு ஒரு அபார்ட்மெண்ட் வாங்குவது சம்பந்தமாக விசாரிப்பதற்காக ஒரு நிறுவனத்திற்குச் சென்றேன். அங்குள்ள மேலாளரிடம் வீட்டு விலை பற்றி சீரியஸாக உரையாடிக் கொண்டிருக்கும்போது, ஒருவர் "படாரெ"ன்று கதவைத் திறந்துகொண்டு அந்த மேலாளரின் பெயரை உரக்க அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார். ஆரவாரமாக நுழைந்து அவருக்கு எதிரே அமர்ந்துகொண்டு, அவர் எங்களுடன் பேசிக்கொண்டிருந்ததை சட்டை செய்யாமல் "என்ன மச்சான்" என்பதுபோல் கொச்சையாக பேச ஆரம்பித்தார். அது தவிர மேஜையின் மேலிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டி விளையாடத் தொடங்கினார். குண்டூசியை எடுத்து பல் குத்திவிட்டு திரும்பி அதன் குப்பியிலேயெ திரும்பி வைத்தார் (இதுபோன்று குண்டூசியால் பல்குத்துவது மட்டுமின்றி அதை மீண்டும் அதன் திண்டிலேயே சொருகுகிறவர்களுக்கு அன்னியன் ஸ்டைலில் கண்காட்சி டில்லி அப்பளம் பொரிக்கும் எண்ணைக் கொப்பரையில் கரம் மசாலா தடவி பொரிக்க வேண்டும்!). மேஜையின் மேலிருந்த பேப்பரை எடுத்தார். பேனாவை எடுத்து உருட்டினார். இன்னும் ஏதேதோ சேட்டைகளை செய்தவண்ணம் இருந்தார். அவர் தன் சட்டையின் மேல் பொத்தானகளை போடாமல், பார்ப்பதற்கு படிப்பறிவில்லாத காட்டான் போல் தோற்றமளித்தார். அந்த சூழ்நிலையில் அவருடைய தோற்றம், நடத்தை, செயல் எல்லாமே ஒவ்வாமல் இருந்தது. மேலாளர் மென்று விழுங்கிக் கொண்டிருந்தார். அந்த நபர் ஏதோ கடன் கொடுத்திருப்பார் போலிருக்கிறது, அதனால்தான் இவ்வாறு உரிமையை எடுத்துக் கொண்டார் என்று தோன்றியது.

அவர் நுழைவதற்கு முன்னால், அந்த மேலாளரும், அலுவலக முகப்பில் அமர்ந்திருந்த பெண்ணும், "தஸ் புஸ்" என்று வெட்டிய ஆங்கிலத்தில் அந்த நிறுவனத்தைப் பற்றி மிகப்பெருமையாக அளந்து கொண்டிருந்தார்கள். இந்த இடைச்செருகலுக்குப் பிறகு "ஏதோ இடிக்கிறதே" என்று எண்ணிய நான் வெளியே எடுத்த செக் புத்தகத்தை அவசர அவசரமாக உள்ளே வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினேன்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் கற்கும் பாடம் என்ன? பிறர் தங்கள் நடத்தையினால் நம் மதிப்பைக் குறைக்க அனுமதிக்கக்கூடாது. அவரவர்களை தகுதி பார்த்து அங்கங்கே நிறுத்த வேண்டும். நம்மீது விழுந்து பிடுங்க விடக்கூடாது. சிலர் "தோதோ" என்றால் மூஞ்சியை நக்கும் பிராணி போன்று நடந்து கொள்வர். அவர்களை அடையாளம் கண்டு "கட்" பண்ணி சற்று தூரத்தில் வைக்க வேண்டும். இதனை நாசூக்காக செய்ய வேண்டும். நான் முன்னமையே குறிப்பிட்டுள்ளபடி மண்பாண்டம் செய்பவர் கண்ணுக்குத் தெரியாமல் வடிவமைத்த பானையை அடித்தளத்திலிருந்து "கட்" பண்ணுவதுபோல் வெட்டிய சுவடு தெரியாமல் செய்யவேண்டும். நம் இடத்தில் நாம்தான் தலைமை என்பதை நன்கு தெரியும்படி வெளிப்படுத்தவேண்டும். நம் தலைமையையும் ஆளுமையையும் காக்க பிறரை எவ்வாறு ஒரு தூரத்திலேயே வைக்கவேண்டும் என்ற கருத்தை  தலைமை ஒரு திறமை என்ற தலைப்புடனமைந்த (இந்தத் தொகுதியின்) ஒரு  முந்தைய கட்டுரையில் விளக்கமாக எழுதியிருந்தேன். அந்தக் கருத்தினையொட்டிய இன்னொரு கூறை விவாதிக்க முற்படுகிறேன்.

நாம் நம்மைச்சுற்றியுள்ள மனிதர்களின் நடை, உடை, பாவனை, அவர்களின் பேச்சு, செய்கை ஆகியவற்றின்மூலம் பல பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம். பற்பல துறைகளில் வெற்றி பெற்றவர்களிடமிருந்து அவர்களின் வெற்றியை ஈட்டுக் கொடுத்த செயல்பாடுகள் என்னென்ன என்பதையும், வாழ்வில் தோல்வி கணடவர்களிடமிருந்து அவர்கள் இழைத்த தவறுகளையும் அவற்றைத் தவிர்ப்பது எங்ஙனமென்பதையும் கற்றுக் கொள்கிறோம். வாழ்வில் ஒவ்வொரு பாடத்தையும் நாமே அனுபவித்து அறிய முற்படுவது முட்டாள்தனம். முன்னால் போகிறவன் தடுக்கி விழுந்தால் அங்கே ஒரு பள்ளம் இருக்கிறது என்றறிந்து நாம் கவனமாகச் செல்கிறோம். அதுபோல் நாம் பிறரை கூர்ந்து கவனித்து நமக்கு வேண்டிய படிப்பினைகளை அறிகிறோம். அது தவிர நாம் நம் தொழிலுக்கு வேண்டிய வித்த அறிவையும் பொது ஞானத்தையும், மற்றும் பல்துறைப் புலமையையும் பெற முயல வேண்டும். நாம் அன்றாடம் சந்திக்கும் அனைவருமே நமக்கு ஏதோவொரு வகையில் அவர்களறியாமலேயே ஆசானாகிறார்கள். ஆனால் அந்த வாய்ப்புக்களை பயன்படுத்தி ஏற்கவேண்டிய படிப்பினைகளைப் பெறுவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

The Tipping Pointஇந்தக் கருத்தில்தான் பல வணிகர் மற்றும் தொழிலதிபர்கள் ரோட்டரி, லயன்ஸ் சங்கங்கள், கிளப்புகள் போன்ற அமைப்புக்கள் மூலம் அடிக்கடி கூடி தம் துறை சார்ந்த, அரசு சார்ந்த மற்றும் பொது அறிவு ஞானத்தையும் பெருக்கிக் கொண்டு, அதனை தமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஆழ்ந்த ஆராய்வுக்குப்பின் அறியப்படக்கூடிய விஷய ஞானம் கூட சில சமயம் இன்னொருவரிடம் சாதாரணமாக உரையாடும்போது கிட்டிவிடும் சாத்தியம் இருக்கிறது. பெரிய வணிக பிரச்னைகள் நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் தற்செயலாகக் கூறும் அறிவுரையினால் தீர்ந்திருக்கின்றன. யாரோ ஒருவர் (சற்றும் தொடர்பில்லாத நபர்) சொல்லிய ஒரு சொல், ஒரு உவமை, ஒரு கூற்று, ஒரு குறிப்பு போன்றவை பெரிய மாற்றங்களுக்கும், மாபெரும் வெற்றிகளுக்கும் காரணகர்த்தாக்களாக விளங்கியிருக்கின்றன. இத்தகைய நிகழ்வுகளின் சாத்தியம் பற்றி மால்கம் க்ளாட்வெல் (Malcom Gladwell) என்பவர் தன் The Tipping Point - How little things can make a big difference என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.

Bloomberg என்னும் நிறுவனத்தின் அதிபர் தன் அதிகாரிகளை பொது இடங்களிலும், கேண்டீன்களிலும் பலருடன் கலந்து பழகி உரையாடும்படி ஊக்குவிப்பாராம். மேலும் அவர்களை மாடிப்படிகளிலும், ஸ்டோர்களிலும் வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம் எல்லோரிடம் பேசி நாட்டு நடப்புகளை அறிந்துவரச் சொல்வாராம். நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் பேசினால்தான் என்ன நடக்கிறது என்பது தெரியும். இன்றைய நிலையில் மனிதனுக்கு அன்றாட வாழ்க்கையிலேயே பலதரப்பட்ட விஷய ஞானம் தேவைப்படுகிறது. சொத்து வாங்குதல், விற்றல், முதலீடுகள், வருமான வரி, சொத்து வரி - அவை பற்றிய அடிப்படை அறிவு, பிள்ளைகள் படிப்பு பற்றி சரியான முடிவெடுக்க ஏதுவான விஷயங்கள், எதெதுக்கு எத்தகைய ஆவணங்கள் தேவை என்பது பற்றிய விவரங்கள், பாஸ்போர்ட், வாகன ஓட்டுதற்குரிய உரிமம் பெருவது எப்படி, ரேஷன் கார்டு வாங்க எங்கே காத்துக் கிடக்க வேண்டும் - இதுபோல் நூற்றுக்கணக்கான விஷயங்கள் பிறர்மூலம் அறிந்துகொள்ள சாத்தியம் இருக்கிறது. அதனால் நம் வேலை லகுவாகும்.

ஆகையால் உம்மணாமூஞ்சியாய் இல்லாமல் எல்லோரிடமும் கலந்து பழகி பிறரை நமக்கு உலகத்தை காண்பிக்கும் கண்ணாடியாக மாற்ற வேண்டும். அதுபோல் நம் உரையாடல் வெறும் வெட்டிப்பேச்சாக இல்லாமல் பொருள் பொருந்தியதாக அமைய வேண்டும். பேசும்போதே சில கொக்கிகள் போட்டு பிறரிடமிருந்து தன்னையறியாமல் அவர்கள் அறிந்தவற்றை கிரகித்துக் கொள்ளும் விதமாக உங்கள் சொல்லாடல் அமையவேண்டும். நடுநடுவே நீங்கள் தொடுக்கும் கெட்டிக்காரத்தனமான கேள்விகள் பிறரை மேன்மேலும் தன் அறிவை பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கும் முகமாக அமையவேண்டும். அவர்கள் சொல்வதை முக மலர்ச்சியுடன் அங்கீகரித்து, தலையசைத்து, அவர்கள் நம்முடன் பேசுவதை ஒரு பெருமை சார்ந்த விஷயமாகக் கருத வைக்கவேண்டும். அதே நேரத்தில் நம் பொன்னான நேரத்தை அவர்கள் வீணடிக்க விடக்கூடாது. அதுபோல் நம்மீது அவர்கள் அளவுக்கதிகமான உரிமைகளை எடுத்துக் கொண்டு, நம் ஆளுமைக்கு குறைவு ஏதும் ஏற்படுத்தாவண்ணம் காத்தலும் வேண்டும்.

ஒட்டுறவாடல் என்பது அவரவர் தன்மைப்படி, ஆற்றல்படி, தகுதியின்படி அமைய வேண்டும். ஒவ்வொருவர் வெற்றியிலும் பலரின் பங்கு கட்டாயம் இருக்கிறது. இந்த விரிந்த, பரந்த உலகம் உங்களை "வெற்றிகொள்ள வா" என்றழைத்த வண்ணம் இருக்கிறது. அதனை நோக்கி அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு உங்கள் கால்களில்தான் உள்ளது!

Copyright © 2005 Tamiloviam.com - Authors